திகதி : 2025-12-10

திருவழிபாட்டுக்காலம்

திருவருகைக்காலம் இரண்டாம் வாரம்

திருவழிபாட்டு வாரம்

புதன்கிழமை

இன்றைய புனிதர்

புனித தாமஸ்

நாள் வாசகங்கள்

முதலாம் வாசகம்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

திருப்பாடல் : திருப்பாடல் 103: 1-2. 3-4. 8,10 (பல்லவி: 1a)

நற்செய்தி வாசகம் : ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

Sacred Reading Texts:


திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - புதன்


முதல் வாசகம்

எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?’ என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.

“என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10 (பல்லவி: 1a)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.

புனிதரின் வரலாறு

புனித தாமஸ்


இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று” (மத் 8:26)

வாழ்க்கை வரலாறு

அன்னையாம் திரு அவை இன்று புனித தமசுஸின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர் 304 ஆம் ஆண்டு, உரோமை நகரில் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இவர் உரோமை நகரில் இருந்த மறைசாட்சியான புனித  லாரன்சின் ஆலயத்தில் திருத்தொண்டராக தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கினார். இதற்குப் பின்பு திருத்தந்தை புனித  லிபேரியுஸ் என்பவரிடத்தில் செயலராகப் பணியாற்றினார். 366 ஆம் ஆண்டு, திருத்தந்தை இறந்துவிட, தமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமசுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டது, திருத்தொண்டராக இருந்த உர்சினியுஸ் என்பவருக்குப் பிடிக்கவில்லை. உர்சினியுஸ் தன்னோடு ஒருசில ஆட்களைச் சேர்த்துக்கொண்டு, தன்னை திருத்தந்தையாக அறிவித்துக்கொண்டார். இதனால் திருச்சபையில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

இதனை அறிந்த வலேண்டின் அரசர் தமசுஸ்தான் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை என்று சொல்லி, அவரைத் திருத்தந்தையாக அங்கிகரித்தார். இவருக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்த உர்சினியுசை அவர் நாடு நாடுகடத்தினார். என்னதான் உர்சினியுஸ் உரோமையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அவருடைய ஆதரவாளர்கள் திருத்தந்தை தமசுசின் பெயரைக் கெடுப்பதும், அவருக்கு முட்டுக்கட்டை போடுவதுமாக இருந்தார்கள். இதற்கு ஒரு முடிவுகட்ட விரும்பிய திருத்தந்தை 380 ஆம் ஆண்டு ஆயர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களை ஒன்றுமில்லாமல் செய்தார்.

இப்படி தமசுஸ் திருத்தந்தையாக பொறுப்பேற்ற புதிதில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தாலும், நாட்கள் செல்லச் செல்ல பல்வேறு பணிகளை மிகத் திறம்பட செய்யத் தொடங்கினார். 380 ஆம் ஆண்டு, உரோமையை ஆண்டுவந்த தியோடோசியுஸ் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தார். இதனால் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட எல்லாத் தடைகளும் நீங்கின. இதைத் தொடர்ந்து திருத்தந்தை தமசுஸ், கான்ஸ்டான்டிநோபில் என்ற பொதுச்சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கம் ஆரியபதத்தையும், தூய ஆவியாரை இறைவன் இல்லை என்று சொல்லிவந்த மாசிதோனிய தப்பறைக் கொள்கையினையும் முற்றிலுமே எதிர்த்து நிர்முலமாக்கியது.

இது மட்டுமல்லாமல் உரோமையரின் ஆட்சியில், விவிலியம் தொடர்பாக எழுதப்பட்டவை யாவும் வெளிக்கொண்டு வராமலே இருந்தன. இப்போது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தடைகள் நீங்கியதால், திருத்தந்தை தமசுஸ் அவற்றை எல்லாம் வெளிக்கொண்டு வர பெரிதும் உழைத்தார். இவருடைய காலத்தில்தான் புனித ஜெரோம் விவிலியத்தை லத்தின் மொழிக்கு மொழிபெயர்த்த முக்கியான ஒரு நிகழ்வு அரங்கேறியது. மேலும் இவர் தனக்கு முன்பாக இருந்த திருத்தந்தையர்களின் பட்டியலைத் தயார் அதை வெளியிட்டார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக உரோமானிய கல்லறைகளை எல்லாம் புனிதத்தலமாக மாற்றி, அதனை மக்களுடைய பார்வைக்கு வைத்தார். இதுபோன்று பல்வேறு பணிகள் திருத்தந்தை தமசுஸின் காலத்தில் நடைபெற்றன.

இப்படி திரு அவையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைத்த திருத்தந்தை தமசுஸ் 384 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

புனித  தமசுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழியாமல், அதனை எதிர்த்து நின்று வெற்றிகொள்வோம்

புனித  தமசுஸிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழியாமல், அதனை எதிர்த்து நின்று வெற்றிகொள்ளவேண்டும் என்பதுதான். தமசுஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபோது பல பிரச்சனைகளைச் சந்தித்தார். அவருக்கு எதிரானவர்கள் அவரைப் பற்றி இல்லாதது பொல்லாது எல்லாம் சொன்னார்கள். அதற்காக அவர் ஓடி ஒழியவில்லை, மாறாக அதனை துணிவோடு எதிர்த்து நின்றுவெற்றி கொண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சனைகளைக் கண்டு, ஓடி ஒழிந்திடாமல், அதைத் துணிவோடு எதிர்த்து நின்று ஜெயிக்கவேண்டும் என்பதுதான் புனித  தமசுஸ் நமக்குக் கொடுக்கும் அழைப்பாக இருக்கின்றது.

பிரியா, கீதா என்ற சகோதரிகள் இருவர் ஒரு பள்ளியில் ஆசிரியைகளாகப் பணிபுரிந்துவந்தார்கள். பிரியா முதல்வகுப்பு ஆசிரியை. கீதா இரண்டாம் வகுப்பு ஆசிரியை. கல்வியாண்டுத் தொடக்கம் என்றாலே பிரியாவிற்குக் காய்ச்சல் வந்துவிடும். முதல் நான்கு மாதங்கள் போராட்டமாய் தோன்றும். புதிய மாணவர்களைப் பழக்குவதற்குள் பிரியா படாதபாடுதான் படுவார். ஆனால் கீதா அப்படியில்லை. அவர் புதிது புதிதாய் கற்றுக்கொண்டு, மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவார். மாணவர்களும் அவருடைய வகுப்பிற்காக தவம் கிடப்பார்கள்.

நாட்கள் உருண்டோடின. மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிகவும் கடினம் என்று பிரியா பள்ளிக்கு வருவதை பாதியிலே நிறுத்திவிட்டார். ஆனால், கீதாவோ மாணவர்களுக்கு மிக உற்சாகமாகக் கற்றுக்கொடுத்தார். அதனால் அந்தப் பள்ளியிலே சிறந்த ஆசிரியையாக உருமாறினார்.

பிரச்சனை அல்லது சூழல் ஒன்றுதான். ஆனால், நாம் அதனை எப்படி எதிர்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது.

ஆகவே, புனித  தமசுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று எதிர்வரும் பிரச்சனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Prayers