நோர்வேயில் முதல் தமிழ் குரு அருள்பணியாளர் பிராங்ளின் பெர்ணாண்டோ     குருத்துவ அருள்பொழிவும் முதல் திருப்பலியும்


2020ம் ஆண்டு ஜூன் 20ம் நாள் நோர்வே தளத்திரு அவை வரலாற்றில் இன்னுமொரு முக்கிய நாளாகும். அருட்சகோதரர் பிராங்ளின் பெர்ணாண்டோ அவர்கள் ஒஸ்லோ மறைமாவட்ட ஆயர் மேதகு பேர்ண்ற் ஐட்ஸ்விக் (Bernt Eidsvig) அவர்களால் ஒஸ்லோ புனித யோவான் ஆலயத்தில் அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டார்.

அருள்தந்தை பிராங்ளின் பெர்ணாண்டோ அவர்கள் இலங்கை கொழும்பு செக்கட்டித்தெரு புனித அன்னம்மாள் பங்கைச் சேர்ந்தவர். இவர் தமது குருத்துவ மெய்யியல், இறையியல் படிப்பினை கண்டி தேசிய உயர் குருமடத்திதில் பூர்த்தி செய்தார். பின்பு அவர் ஒஸ்லோ மறைமாவட்ட ஆயரவர்களின் அழைப்பின்பேரில் ஒஸ்லோவில் தம் முதுகலைமாணிப்பட்டம் பெற்றார். 

தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் நோர்வேஜிய மொழிகளில் புலமைபெற்ற புதிய குருவானவர் ஒஸ்லோ மறைமாவட்டத்திற்குக் கிடைத்த இறைகொடையாகும். இன்னும் அருட்டிரு பிராங்ளின் பெர்ணாண்டோ அவர்களே நோர்வே மண்ணில் குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட முதல் தமிழரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இளங்குரு பிராங்ளின் (24 கார்த்திகை 1987) அவர்கள் தம் முதல் திருப்பலியை ஒஸ்லோ புனித ஊளாவ் பேராலயத்தில் மறுநாள், ஜூன் 21ம் திகதி ஞாயிறன்று நோர்வேஜிய மொழியில் ஒப்புக்கொடுத்தார். அதே தின மாலையில் ஒஸ்லோ புனித யோவான் ஆலயத்தில் தம் முதல் தமிழ்த் திருப்பலியை நிறைவேற்றினார். 

அருள்பணியாளர் பிராங்ளின் பெர்ணாண்டோ அவர்களின் குருத்துவ வாழ்வும் பணியும் சிறக்க நோர்வே பேர்கன் தமிழ் கத்தோலிக்கர் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்து நிற்கிறோம்