✠ புனிதர் பிலிப் ✠ (St. Philip)

திருத்தூதர் மற்றும் மறைசாட்சி : (Apostle and Martyr)

பிறப்பு :  பெத்சாயிதா, கலிலேயா, ரோம பேரரசு

(Bethsaida, Galilee, Roman Empire)

 

இறப்பு : c.80 ஹிராபோலிஸ், அனடோலியா, ரோம பேரரசு

(Hierapolis, Anatolia, Roman Empire)

 

சித்தரிக்கப்படும் வகை : 

வயதான தாடி வைத்த மனிதராகவோ அல்லது ஒரு அப்பக்கூடையையும் சிலுவையையும் வைத்திருப்பது போன்றோ.

 

பாதுகாவல் : உருகுவை.

திருத்தூதரான புனிதர் பிலிப், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். கிறிஸ்தவப் பாரம்பரியப்படி, இவரே கிரேக்கம், சிரியா முதலிய நாடுகளுக்கு கிறிஸ்தவத்தைக் கொண்டு சென்றவர்.

பிலிப் எழுதிய நற்செய்தி என்னும் நாக் அமாடி நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டதுபோல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே ஆகும்.

இவரின் விழாநாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு (திருத்தூதர் யாக்கோபு அல்ல) சேர்ந்து மே 3ல் கொண்டாடப்படுகின்றது.

புதிய ஏற்பாட்டில் :

ஒத்தமை நற்செய்தி நூல்கள் இவரை இயேசுவின் சீடர் என்கிறது. இவரும் அந்திரேயா மற்றும் பேதுருவைப்போல பெத்சாயிதாவைச் சேர்ந்தவர்.

நத்தானியேல் என அழைக்கப்பட்ட திருத்தூதரான பர்த்தலமேயுவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியவர் இவரே. ஐயாயிரம் மக்களுக்கு அப்பம் பலுகச்செய்து உணவளித்த புதுமைக்கு முன்பு, இயேசு இவரைச் சோதித்தார்.

இவருக்கு கிரேக்கம் தெரிந்திருந்ததால் கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக்காண வந்தபோது இவர் அவர்களை இயேசுவிடம் கூட்டிவந்தார். இயேசுவின் இறுதி இரா உணவின்போது, "தந்தையை எங்களுக்கு காட்டும்" என்று பிலிப்பு கேட்க, இயேசு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு பற்றி விளக்கினார்.

புனித பிலிப்புவின் பெயர் எல்லாத் திருத்தூதர்களின் பட்டியல்களிலும் ஐந்தாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

புனித பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றார். இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரேயாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசுவின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார்.  இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விளக்கினார்.

நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு. இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித்தார் பிலிப்பு (யோவான் 6:7)

தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப் பணியில் நாட்களை செலவிட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலாற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.