ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ்

ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ், அவரது புனித செபமாலை பற்றிய போதனைகளுக்காக அனைவராலும் அறியப்பட்டவர். 

சாத்தான், இவரது போதனைகளால் ஆன்மாக்கள் மீட்படைவதைக் கண்டு மிகவும் பொறாமைப்பட்டு, மனம் வெதும்பி அளவுக்கதிகமாக அவரை துன்புறுத்தியது. அவரை நோயுறச் செய்து, அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கைவிடும் அளவுக்கு மோசமாக்கியது.

ஒருநாள் இரவில், தான் மரிக்கப்போவதாக அவர் எண்ணி கொண்டிருந்தபோது, சாத்தான் மிகப் பயங்கரமான உருவில் அவர் முன் தோன்றியது. அவரது படுக்கைக்கு அருகில் நமது மாமரித்தாயின் படம் இருந்தது. அதனை நோக்கி அவர் தனது சக்தி முழுவதையும் திரட்டிக் கொண்டு அழுது கொண்டே "என் அமுதினும் இனிய தாயே, எனக்கு உதவி செய், என்னை காப்பாற்று" என்று கதறினார்.

அவர் இவ்வாறு கூறிய உடனே படம் உயிர் பெற்று வந்தது போன்று, நமது அன்னை தனது கரங்களால் அவரது கரங்களை பற்றிக்கொண்டு கூறியதாவது "எனது மகனே தாமஸ், பயப்படாதே, நான் இங்குதான் இருக்கிறேன், உன்னை காப்பாற்ற போகிறேன். இதற்கு முன்னால் நீ செய்ததுபோல், எழும்பி போய் எனது செபமாலையை அனைவருக்கும்

அறிவிப்பாயாக, உனது எதிரிகளிடம் இருந்து உன்னை பாதுகாக்கும் கேடயமாக நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்"

நமது அன்னை இதனைக் கூறியவுடன் சாத்தான் அவ்விடத்தை விட்டு பறந்துவிட்டது, அருளாளர் தாமஸ் படுக்கையிலிருந்து எழும்பி, தான் நல்ல உடல் சுகம் அடைந்துவிட்டதை உணர்ந்தார். அவர் ஆனந்த கண்ணீருடன் ஆசீர்வதிக்கப்பட்ட நமது அன்னைக்கு நன்றிகூறி, தமது செபமாலை சேவையில் மீண்டும் ஈடுபடலானார். இதன் பின்னர் அவரது போதனைகள் வியத்தகு வெற்றியடையலாயின.

இயேசுவுக்கே புகழ் ! மாமரிதாயே வாழ்க!