புனித மாற்கு

பிறப்பு 1 ஆம் நூற்றாண்டு (கி. பி)

      புனித மாற்கு, ஐந்து நகரங்களின் இணைவுள்ள (Pentapolis)  (தற்போது லிபியா என்று அழைக்கப்படும்) சிரேனே  என்னும் நகரில் பிறந்தார்.  இவர், நம்முடைய ஆண்டவரும் மீட்பருமாகிய கிறிஸ்து பிறந்து சுமார் 15 ஆண்டுகள் கழித்து பிறந்தவர் என்று கூறப்படுகின்றது. இவர் யூதப்பெற்றோர்க்ளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் யோவான், ஆனால்  இவரை  மார்க்  என்றும் அழைப்பர்.

      புனித மாற்கு பிறந்தவுடன் இவரது பெற்றோர்கள்   பாலஸ்தீனத்துக்கு இடம் பெயர்ந்தனர். சில வருடங்களுக்குபிறகு அவரது தந்தை இறந்தபிறகு  தன் தந்தையின் உறவினரால் வளர்க்கப்பட்டு சட்டம்  மற்றும் இலக்கியங்கள் பயின்றார்.

இவரது தாய் மேரி இயேசு கிறிஸ்துவின் ஆர்வளராக இருந்தார். எனவே  இவரும் தன் தாயுடன் இயேசு கிறிஸ்து சென்ற இடமெல்லாம் சென்றார். கலிலேயாவிலுள்ள கானா  ஊரில் திருமணத்தின்போது இயேசு கிறிஸ்து  தண்ணீரை இரசமாக மாற்றிய புதுமையை நேரில் கண்டவர் இவர். 

மேலும்,கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்ட பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபு; இயேசுவை கைது செய்தவர்கள் இவரைப்பிடித்தபோது தம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.

 

நற்செய்தியாளரான புனித மாற்கு பாரம்பரியப்படி நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும் இவர் இயேசுவின் எழுபது சீடர்களுள் ஒருவராகவும். கிறித்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு  ஆயர்பீடங்களுள் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் நிருவனராகவும் கருதப்படுகின்றார். 

     பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் நற்செய்தியாளர்களாக புனித மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் உள்ளனர்.

 

       இவர்கள் இயேசுவின் வாழ்க்கை அவரது அனுபவங்கள் மற்றும் இயேசுவைப் பற்றி முன் குறிக்கப்பட்ட விடயங்களையும் தமது நற்செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

     இந்த நற்செய்தி வாசகங்கள் இயேசுவிடமிருந்து அவரோடு பழகிய அனுபவமாக நமக்குத் தரப்படுகின்றன.

இந்த வகையில் புனித மாற்கு புனிதராகவும் நற்செய்தியாளராகவும் சிறப்புப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 வரலாற்றாசிரியரான யுசிபசின்படி, மாற்கு அனனியாசு என்பவருக்குப்பின்பு, நீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62-63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார். பாரம்பரியப்படி கி.பி 68 இல் இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.

 கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா ஏப்ரல் 25இல் கொண்டாடப்படுகின்றது. இவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.

 

அவருடைய நற்செய்தியில் மிகவும் முதன்மை வாய்ந்தது 16: 15-20

       நற்செய்திகளில் முதலில் எழுதப்பட்ட நற்செய்தி இது என்றும், இவர் தேர்வு செய்யப்பட்ட 70 பேர்களில் ஒருவர் என்றும், அலெக்சாந்திரியாவில்

சபையை உருவாக்கி, அந்த சபையின் ஆயராக இருந்து, மறைசாட்சியாக மரித்தார் என்பது வரலாறு.

    வார்த்தை ஜாலங்கள் இல்லாத எழுத்துக்கள். பணிவாழ்வில் இருந்து, விண்ணேற்புவரை விவரிக்கப்பட்டு இருக்கின்றது. பிற இனமக்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ள தொகுத்து எழுதப்பட்டுள்ளது என்பது உண்மை. ‘காலம் நிறைவேறிவிட்டது. கடவுள் அரசு நெருங்கிவிட்டது. மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்,’ என்பது மையச் செய்தியாகியுள்ளது.

இயேசுவே ஆண்டவர் என்று நம்பி, அறிவோம், அனுபவிப்போம், அறிக்கையிடுவோம்.

 

செபம் :

அன்பே உருவான எங்கள் மீட்பரே, இறைவா!  புனித மாற்கு நற்செய்தியை எழுதி, உம்மை பற்றி இம்மண்ணிலுள்ள மக்களுக்கு அறிவித்தார். புனித மாற்கு நற்செய்தியினை நாங்களும், எங்களின் வாழ்க்கையில் ஏற்று, வார்த்தையை வாழ்வாக்கிட உம் அருள்தாரும்.  ஆமென்