✠ புனிதர் தெரசா ✠ (St. Teresa of Los Andes)

மறைப் பணியாளர் : (Religious)

பிறப்பு : ஜூலை 13, 1900 சாண்டியாகோ, சிலி (Santiago, Chile)

இறப்பு : ஏப்ரல் 12, 1920 (வயது 19)  லாஸ் ஆண்டிஸ், வால்பரைசோ, சிலி (Los Andes, Valparaíso, Chile)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருத்தலம்  (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 3, 1987 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

புனிதர் பட்டம் : மார்ச் 21, 1993 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

முக்கிய திருத்தலம் : லாஸ் ஆண்டிஸ் நகர தெரேசாவின் திருத்தலம் (Shrine of Saint Teresa of Los Andes)

நினைவுத் திருநாள் : ஏப்ரல் 12

பாதுகாவல்: நோய்களுக்கெதிராக, நோயாளிகள், இளைஞர்கள்,

சாண்டியாகோ (Santiago), லாஸ் ஆண்டிஸ் (Los Andes)

 

“லாஸ் ஆண்டிஸ் நகர இயேசுவின் புனிதர் தெரேசா” (Saint Teresa of Jesus of Los Andes) என்றும், “லாஸ் ஆண்டிஸ் நகர புனிதர் தெரேசா” (Saint Teresa of Los Andes) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், தென் அமெரிக்க நாடான சிலி குடியரசைச் சார்ந்த, ஒரு கார்மேல் சபையின் அருட் கன்னியும், மறைப் பணியாளருமாவார்.

ஜூவானா என்ரிகுவெட்டா ஜோசெஃபினா டி லாஸ் சக்ரேடோஸ் கொரஸோன்ஸ் ஃபெர்னாண்டஸ் சோலார்  எனும் இயற்பெயர் கொண்ட இப்புனிதர், சுருக்கமாக “ஜுவானா ஃபெர்னாண்டஸ் சோலார்” அழைக்கப்பட்டார்.

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோ நகரின் உயர்குடி குடும்பமொன்றில் 1900ம் ஆண்டு பிறந்த ஜுவானாவின் தந்தை, மிகுவேல் ஃபெர்னாண்டஸ் ஜரா (Miguel Fernández Jara) ஆவார். இவரது தாயாரின் பெயர், லூசியா சோலார் டி ஃபெர்னாண்டஸ் (Lucia Solar de Fernández) ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் நான்காவது குழந்தை ஆவார்.

1907ம் ஆண்டு முதலே, திருஇருதய சபையின் ஃபிரெஞ்ச் அருட்சகோதரியர்  நிர்வகித்துவந்த பள்ளியில் கல்வி கற்ற ஜுவானா, தமது பதினெட்டு வயதுவரை அங்கேயே கல்வி கற்றார். 1914ம் ஆண்டு, தமது பதினான்கு வயதிலேயே தம்மை கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்காக கார்மேல் சபையில் இணைய முடிவு செய்தார். 1915ம் ஆண்டு, டிசம்பர் மாதம், எட்டாம் தேதி, தமது முதல் உறுதிப்பாடுகளை ஏற்றுக்கொண்ட இவர், தொடர்ந்து அதனை வழக்கமாக ஏற்றுக்கொண்டார். இயற்கையாகவே பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஜுவானா, தமது இயற்கைக்கு மாறாக, பிடிவாதமும் கோப குணமும்

கொண்டிருந்தார். சில சமயங்களில் தன்னிலை மறக்குமளவுக்கு மனநிலையும் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், சுவானாவின் கோப குணத்தால் கோபம் கொண்டிருந்த அவளுடைய சகோதரி ரெபெக்கா  ஜுவானாவை கன்னத்தில் அறைந்துவிட்டார். முகம் சிவந்துபோன ஜுவானா, தமது சகோதரியை வேகமாக அருகே இழுத்து, பின்னர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் குழம்பிப்போன ரெபெக்கா, அவரை துரத்திப்போய், “இங்கிருந்து நீ வெளியேறிவிடு. நீ எனக்கு தந்தது யூதாவின் முத்தமாகும்” என்றார்.

தமது பதின்மூன்று வயதில், கடுமையான குடல்வாலழற்சி (Acute Appendicitis) நோயால் பாதிக்கப்பட்டார். சிறுவயது முதலே பாடல், நடனம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு டென்னில் மற்றும் croquet எனப்படும் புல் வெளியில் விளையாடப்படும் மரப்பந்தாட்டம் ஆகியவையும் பிடித்திருந்தது. நீச்சல் அறிந்திருந்த அவரால், பியானோ மற்றும் ஹார்மோனியம் பயன்படுத்த முடிந்தது. 1916ம் ஆண்டில் அவர் ஆன்மீக பயிற்சிக்கான ஒரு தியானத்தில் ஈடுபட்டார்.

1919ம் ஆண்டு, மே மாதம், ஏழாம் தேதி, அவர்  லாஸ் ஆண்டிஸ் நகரிலுள்ள கார்மேல் (Discalced Carmelites) சபையில் புகுமுக துறவியர் பயிற்சியில் இணைந்தார். அச்சமயத்தில், அவருக்கு “இயேசுவின் தெரேசா” (Teresa of Jesus) எனும் ஆன்மீக பெயர் அளிக்கப்பட்டது. அதே வருடம் அக்டோபர் மாதம், 14ம் தேதி, அவர் கார்மேல் சபையின் சீருடைகளைப் பெற்றுக்கொண்டார்.

தமது குறுகிய வாழ்க்கையின் முடிவை நோக்கி பயணித்த இப்புதிய கன்னியாஸ்திரி, தமது திருத்தூதுப் பணியை கடிதங்கள் எழுதுவதன் மூலம் தொடங்கினார். அதில் அவர் தமது ஆன்மீக வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால், விரைவிலேயே டைஃபஸ் (Typhus) என அழைக்கப்படும் தீவிர அக்கி போன்ற தீப்பொறி

காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். 1920ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இரண்டாம் நாளன்று, பெரிய வெள்ளியன்று, அந்நோய் அபாயகரமானதாகக் கண்டறியப்பட்டது மற்றும் அது மோசமாகிவிட்டது.

ஜுவானாவுக்கு தமது இருபது வயது பூர்த்தியடைய இன்னும் மூன்று மாதங்களே இருந்தன. அத்துடன், அவரது துறவற பயிற்சி நிறைவேறி தமது முழு பிரமான உறுதிப்பாடுகளை ஏற்க இன்னும் மூன்று மாதங்களே இருந்தன. 1920ம் ஆண்டு, உயிர்த்தெழுந்த திருவிழாவின் மறுதினம், ஏப்ரல் மாதம், ஐந்தாம் நாளன்று, ஜுவானா தமது இறுதி அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார். ஏப்ரல் மாதம், 12ம் நாளன்று, மாலை 7:15 மணியளவில், ஜுவானா மரித்தார்.

செபம்:

இயேசுவின் புனிதர் தெரசாவே! இளம் பிராயத்திலேயே உமது மனம் இறைவன்பால் ஈர்த்ததே! இம்மண்ணுலகில் மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டிருந்தாலும், மிக நேரிய வாழ்வை வாழ்ந்தவரே! எங்கள் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் சினம் என்னும் குணத்தை அறவே அகற்றவும், குறிப்பாக நோயுற்ற சிறுவர் சிறுமியர்களின் நோய் முற்றிலும் நீங்கி அவர்கள் பரிபூரண சுகம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுமாறு உம்மை வேண்டுகிறோம். ஆமென்!