தூய கன்னி மரியாவின் அமலோற்பவ விழா

தூய கன்னி மரியாவின் அமலோற்பவ விழா தூய கன்னி மரியாவின் அமலோற்பவ விழா என்பது இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். மரியா பிறப்புநிலைப் பாவமின்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாமினால் தோன்றிய பாவம் மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது. இது சென்மபாவம் அல்லது பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்-கப்படுகிறது. இப்பாவம் மனிதரை கடவுளின் அருள் நிலையில் இருந்து பிரித்து உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை ஆக்குகிறது. தந்தையாம் கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாவை தொடக்கம் முதலே தெரிந்துகொண்டார். எனவே மரியாவுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார். இதுவே மரியாவின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால் மீட்பின் பேறுபலன்கள் மரியாவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன.

பழைய ஏற்பாடு விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் மனிதகுல மீட்புப்பற்றிய முன்னறிவிப்பு உள்ளது. கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண்ணாகிய ஏவா மரியாவுக்குமுன்னடையாளமாக உள்ளார்:

கடவுள் பாம்பிடம் 'உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்' என்றார் (தொடக்க நூல் 3:15).

 

முதல் பெண் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்தார். ஆனால் மரியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தம்மை முழுவதும் அவர் கைகளில் ஒப்படைத்தார். இயேசு கிறிஸ்து பாவத்தின்மீது வெற்றி-கொண்டதுபோல மரியாவும் அவருக்குக் கீழ்ப்பட்ட நிலையில் அவரோடு இணைந்து கடவுளின் பிரத்தியேக தனியருளால் பாவத்தை முறியடித்தார்.

பழையஏற்பாட்டு நூல்களாகிய நீதிமொழிகள் மற்றும் இனிமைமிகு பாடல் ஆகிய நூல்களிலும் மரியாவின் அமலோற்பவம்பற்றிய குறியீடுகள் உள்ளதாகத் திருச்சபை விளக்கம் தருகிறது. எடுத்துக்காட்டாக: "தொடக்கத்தில் பூவுலகு உண்டாகுமுன்னே நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்;. பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்" (நீதிமொழிகள் 8:23-25).

 

"என் அன்பே நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே!" (இனிமைமிகு பாடல் 4:7).

 

 

புதிய ஏற்பாடு புதிய ஏற்பாட்டில் குறிப்பாக லூக்கா நற்செய்தி மரியா கடவுளின் அருளால் நிரம்பியிருந்ததைக் குறிப்பிடுகிறது:

"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்" (லூக்கா 1:26-28).

 

ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே அவருடைய தாயாக முன்னியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும் இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப்பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்த முறையில் நிறைவேறுகின்றது.

 

எனவே இறை அன்னை முற்றிலும் தூயவர் பாவக்கறை ஏதுமில்லாதவர், தூய ஆவியினால் புதிய படைப்பாக உருவாக்கப்பெற்றவர் என்று அவரை அழைக்கும் வழக்கம் திருத்தந்தையரிடத்தில் நிலவியிருந்ததில் வியப்பொன்றுமில்லை. கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணிசெய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர் 'அருள்மிகப் பெற்றவரே'

(லூக்கா 1:28) என்று வாழ்த்துகிறார். இக்கன்னியும் 'நான் ஆண்டவரின் அடிமை; உமது சொல்படியே எனக்கு நிகழட்டும்' (லூக்கா 1:38) என மறுமொழி கூறுகின்றார்.

இவ்வாறு ஆதாமின் மகளான மரியா கடவுள் வாக்குக்கு இசைவு அளித்ததால் இயேசுவின் தாயானார். பாவத் தடையின்றித் தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்றுத் தம் மகனுக்கும் அவரின் அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் அருளால் மீட்புத் திட்டத்தில் மரியா பணிபுரிந்தார்.

 

அமலோற்பவ அன்னையாக மரியா அளித்த காட்சிகள்

கத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவை அமலோற்பவத் தாயாக வணங்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இரு தருணங்களில் மரியா காட்சியளித்ததையும் குறிப்பிடலாம்.

 

1. 1830ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் அன்னை மரியா புனித கத்தரீன் லபோரே என்பவருக்குக் காட்சி அளித்தார். அப்போது அன்னை மரியாவைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாவே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன.

 

2. 1858ஆம் ஆண்டு மரியா அமலோற்பவ அன்னையாக இருக்கின்றார் என்னும் உண்மை மறையுண்மையாக அறிவிக்கப்பட்ட நான்காம் ஆண்டில் புனித பெர்னதெத் சுபீரு என்பவருக்கு மரியா லூர்து அன்னையாக காட்சியளித்தார். அப்போது மரியா "நானே அமலோற்பவம்" (Que soi era immaculada concepcion - தென் பிரான்சிய நாட்டுமொழி) என்று கூறினார்.

 

 

 

வானகம் ஆளும் அரசியே வாழ்க

வானவர் அனைவரின் தலைவியே வாழ்க

எஸ்ஸேயின் வேரே உலகில் பேரொளி

உதயம் ஆகிய வாயிலே வாழ்க.

மாட்சி மிகுந்த கன்னியே மகிழ்க.

ஆட்சி தகைமையின் தாயே மகிழ்க.

எழில்மிகு நாயகி இயேசுவை வேண்டி

பொழிந்திடும் அருளை விடைபெறும் எம்மேல் - ஆமென்