✠ குவாதலூப்பே அன்னை ✠

( Vår Frue av Guadalupe )

குவாதலூப்பே அன்னை என்பது, இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் பெயர்களுள் ஒன்றாகும். குறிப்பாக இது புனித யுவான் தியெகோவின்   (St. Juan Diego) மேற்போர்வையில் பதிந்துள்ள மரியாவின் திருவோவியத்திற்கு அளிக்கப்படும் பெயராகும்.

இத்திருவோவியம், தற்போது குவாதலூப்பே அன்னை பேராலயத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இது மெக்சிக்கோவின் மிகவும் புகழ்பெற்ற சமய மற்றும் கலாசார சின்னமாகக் கருதப்படுகின்றது. இவ்வோவியத்தில் இருக்கும் அன்னைமரியாவுக்கு மெக்சிக்கோவின் அரசி, என்னும் பெயரும் உண்டு. குவாதலூப்பே அன்னை என்னும் பட்டத்தின்கீழ் ஒருகாலத்தில் பிலிப்பீன்சின் பாதுகாவலியாகவும் அன்னை மரியா அறியப்பட்டார். (ஆயினும் இது 1935ல் திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் நீக்கப்பட்டது) 1999ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் குவாதலூப்பே அன்னை என்னும்

பட்டத்தின்கீழ் தூய கன்னி மரியாவை அமெரிக்காக்களின் பாதுகாவலி, இலத்தீன் அமெரிக்காவின் அரசி, மற்றும் கருவிலிருக்கும் குழந்தைகளின் பாதுகாவலி என அழைத்துள்ளார்.

கத்தோலிக்கர்களின்படி இத்திருவோவியத்தின் வரலாறு :

புதிய உலகின் பூர்வீக இனமான அஸ்டெகிலிருந்து மனமாறி கிறிஸ்தவ மறையினைத் தழுவியவரும், ஏழை விவசாயியுமானவர் யுவான் தியெகோ. அக்காலத்தில் இஸ்பானியப் பேரரசில் மரியாவின் அமல உற்பவம் விழா டிசம்பர் 9ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் வழக்கம் இருந்தது. இவ்விழா நாளான டிசம்பர் 9ம் தேதி 1531ம் ஆண்டு, யுவான் தியெகோ அதிகாலையில் தனது கிராமத்தில் ஆலயம் ஏதும் இலாததால், மெக்சிகோ நகரிலுள்ள ஆலயம் ஒன்றில் திருப்பலியில் பங்கு கொள்வதற்காக தேபியா குன்றுவழியாக நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது, அக்குன்றின் உச்சியில், சூரியனைப் போன்ற பிரகாசமான ஒளியைக் கண்டதாகவும், அதிலிருந்து இனிமையான இசையைக் கேட்டதாகவும் நம்பப்படுகின்றது. பின்னர் அங்கிருந்து ஒரு பெண்ணின் குரல், தியெகோவை அக்குன்றில் ஏறி வருமாறு அழைத்தது எனவும் தியெகோ அங்கு ஏறிச்சென்றபோது, விண்ணக மகிமையில், பிரகாசமான ஒளிக்கு மத்தியில் தூய கன்னி மரியா நிற்பதைக் கண்டார் என்கின்றனர். கன்னி மரியா தியெகோவின் தாய்மொழியான நாகவற் மொழியில் பேசி, தனக்காக ஒரு திருத்தலம் கட்டவேண்டும் என மெக்சிகோ நகரிலுள்ள ஆயரிடம் சொல்ல தியெகோவை அனுப்பினார் என நம்பப்படுகின்றது.

தியெகோவும் ஆயரிடம் சென்று அதனைத்தெரிவித்தபோது, ஆயர் தியெகோவை நம்பவில்லை. அடுத்த நாளும் ஆயரிடம் சென்று தனது

ஆவலைத் தெரிவிக்குமாறு பணித்தார் அன்னை மரியா. அதேபோல் தியெகோ ஆயரிடம் சென்று சொன்னதும், அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேட்குமாறு ஆயர் தியெகோவிடம் கேட்டுக்கொண்டார். அன்று மாலையே தியெகோ அன்னை மரியாவிடம் நடந்தததைச் சொன்னார். அன்னை மரியாவும் அடுத்த நாள் காலையில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார். ஆனால் தியெகோவின் மாமா யுவான் பெர்னார்தினோ, திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டதால் அடுத்த நாள் அங்குச் செல்ல முடியவில்லை.

இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு இறுதி திருவருட்சாதனம் கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, ஒரு குருவை அழைக்கச் சென்றார் தியெகோ. அப்போது அன்னை மரியா, தியெகோவைச் சந்திப்பதற்காக தேபியாகுன்றின் அடியில் இருந்த சாலையில் தியெகோவுக்கு காட்சியளித்து, அவரின் மாமா நலமைடைவார்; இறக்கமாட்டார் எனவும், உடனே தான் முன்னர் மூன்று முறை காட்சியளித்த தேபியாகுன்றின் உச்சிக்குச் சென்று அங்கு பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களை பறித்துக்கொண்டு தன்னிடம் வருமாறு கூறினார். இந்தப் பாறைக் குன்றின் உச்சியில் எந்தப் பூக்களும் பூக்க வாய்ப்பில்லை என்பது தியெகோவுக்குத் தெரிந்திருந்தும் அங்கு சென்றார். அங்கு அழகிய பூந்தோட்டம் இருப்பதைக் கண்டார். அவைகளைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து வந்து அன்னை மரியாவிடம் கொடுத்தார். அந்தப் பூக்களை அவரது மேற்போர்வையில் அழகுபடுத்திக் கொடுத்து, அதை ஆயரிடம் கொண்டுபோகச் சொன்னார் அன்னை மரியா. ஆயரை நம்பவைக்க, தான் தரும் அடையாளம் இதுவே என்று சொல்லி அனுப்பினார்.

 

தியெகோ அப்போது ஆயராக நியமனம் செய்யப்பட்டிருந்த ஃப்ரே யுவான் தே சுமாராங்காவின் முன்னால் போய்நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அதிலிருந்து மலர்கள் கொட்டின. ஆனால் ஆயர் மற்றும் தியெகோவின் கண்களையே நம்ப முடியாத வகையில் தியெகோவின் மேற்போர்வையில் அழகிய அன்னை மரியாவின் உருவம் பதிந்திருந்தது. தியெகோ எப்படி வருணித்திருந்தாரோ அதேமாதிரியான உருவம் அதில் இருந்தது. 

அதேநாளில் அன்னை மரியா, தியெகோவின் மாமா யுவான் பெர்னார்தினோவுக்கும் தோன்றி நல்ல சுகம் அளித்தார். பெர்னார்தினோ, தனக்கு நடந்த புதுமையையும் ஆயரிடம் கூறுமாறு அன்னைமரியா சொல்லியிருந்ததை தியெகோவிடம் சொன்னார். அத்துடன் தனது இந்த உருவத்தை "குவாதலூப்பே அன்னை" என்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னைமரியா சொல்லியிருந்தார். இன்றளவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அன்னைமரியா, இப்பெயரிலேயே இங்கு அழைக்கப்பட்டு வருகிறார்.