† இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் † ( நவம்பர் 2 )

“வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை

நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத் தோட்டங்கள் எல்லாம் அழகு செய்யப்படுகின்றன. புதர் மண்டிப் போய் கிடந்த கல்லறைகள் எல்லாம் மீண்டும் புதுப் பொலிவுடன் தோற்றம் தருகின்றன. கல்லறைகளைச் சுத்தம் செய்து வெள்ளையடித்தல், கல்லறைகளை சந்தித்தல், இறந்தவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றல், இறந்தவர்களை நினைத்து சிறப்பு அன்னதானம் வழங்கல்.... இப்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளால் கார்த்திகை மாதம் முக்கியமானதாக அமைந்துவிடுகின்றது. அனைத்து ஆன்மாக்களின் நினைவு தினம் நமக்கு என்ன, எதைக் கற்றுத்தருகின்றது

முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது.

உரோமையருக்கு பவுலடியார் எழுதிய திருமுகத்திலிருந்து கூறுவார், “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை ”

ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடுமுடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும்அத்தகைய நம்பிக்கை நிறைந்த.வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.

இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிப்புத் தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. “புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்என்று” சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ளஉத்தரிப்புத் தலத்தில் உள்ள. ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் ) விண்ணகம்(சஎனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்

 

✠ வேண்டாம் மரணம் ✠

மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல வேண்டும். இயற்கையாக ஏற்படும் மரணம்முதல் தற்கொலைவரை ஏற்படும் மரணச் செய்திகள், பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் வராமல் இருந்ததில்லை. இதனால்தான் மரணம் என்பதுமே எல்லோருக்கும் இயல்பான ஒரு பயம் ஏற்படுகின்றது. மரணம் என்பது ஓர் எதார்த்தம். மரணத்தை இறப்பு என்றும், சாவு என்றும் செத்துப்போதல் என்றும் குறிப்பிடுவர். மரணமா? அது வேண்டாம் என்று எண்ணுவோரே அதிகம். காரணம் மரணம் வாழ்வின் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் மண்ணில் பிறக்கும்

ஒவ்வொரு உயிரும் இறப்பைச் சந்தித்தே ஆகவேண்டும். மரணம் எனக்கு வேண்டாம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மாறாக அனைத்து உயிர்களும், அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மனிதரும் சந்தித்தே ஆகவேண்டியது வாழ்வின் எதார்த்தம்.

ஆகவே நவம்பர் மாதம் 2ஆம் திகதி அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக, அதாவது இறந்தோர் தினமாக திருச்சபை சிறப்பித்து வருகின்றது. பாமர மக்கள் இதைக் கல்லறைத் திருநாள் என்று அழைக்கின்றனர். எவ்வாறு இவ்விழா வழக்கத்திற்கு வந்தது என்பதை சற்று பார்ப்போம்.

தொடக்க திருச்சபையின் வாழ்வு மிகவும் போராட்டம் நிறைந்த வாழ்வாக அமைந்திருந்தது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமையில் அவ்வப்போது ஏற்பட்ட வேதக்கலாபனையில் பலரும் இயேசுவுக்கு சாட்சியாக இறந்தனர். மிகக்குறிப்பாக திருச்சபையின் இரு தூண்கள் எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக மாறின. காலஞ்செல்லச் செல்ல மறைச் சாட்சிகளாக இறந்த இவர்களின் கல்லறைகளில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை உரோமையில் வேரூண்ட ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சாட்சிய வாழ்வை நினைவு கூர்ந்து மக்கள் விழாக் கொண்டாடி அவர்களின் கல்லறைகளைச் சந்தித்து வந்தனர்.

வேதக்கலாபனைகளில் மறைசாட்சிகளாக இறந்தவர்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யும் பழக்கமும் இருந்தது. திருத்தூதர்களின் கல்லறைகள் போன்றே அவர்களின் கல்லறைத் தோட்டங்கள் காலப்போக்கில் மக்கள் விரும்பிச் சந்திக்கும் இடங்களாகவும் மாறின. இதற்கு சிறந்த உதாரணம் திருத்தொண்டராக இருந்து மறைசாட்சியாக மரித்த புனித லோரன்ஸ் என்பவரின் இடத்தில் இன்றும் அவரின் பெயரில் ஆலயம் உள்ளது. அதை ஒட்டிய மிகப் பெரிய கல்லறைத் தோட்டம் இன்றளவும் உள்ளது. மக்கள் ஒவ்வொரு ஆண்டும்,

சிறப்பான வகையில் இங்கு திருப்பலி நிறைவேற்றி மறைசாட்சிகளாக இறந்தவர்களை நினைவு கூறுகின்றனர். இருப்பினும் இக்கல்லறை விழா உலகத் திருச்சபை அளவில் கொண்டாடப்படும் விழாவாக இருக்கவில்லை.

கி. பி 998-ல் புனித ஓதிலோ என்பவர் தன்னுடைய குளுனி சபையினருக்கு இதனை அறிமுகப்படுத்தினார். இவர் குளுனி சபையின் முதல் மடாதிபதியாக இருந்தார். தன்னுடைய துறவற மடத்தில் வாழ்வோர் இறந்தவர்களுக்காக சிறப்பான செபங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்விழாவை அறிமுகப்படுத்தினார்.

11ஆம் நூற்றாண்டில் இறந்தவர்களுக்காக மன்றாடும் குளுனி சபையினரின் வழக்கம் ஐரோப்பிய நாடுகளிம், இலத்தீன் அமெரிக்கா நாடுகளும், மிக விரைவாகப் பரவியது. இறந்த ஆன்மாக்களுக்காக மன்றாடும் இவ்விழாவைத் தாய் திருச்சபை கி.பி 13ஆம் நூற்றாண்டில் அனைத்துலகின் விழாவாக கொண்டாட அனுமதி வழங்கியது.

✠ இறந்தவர்களுக்காக மன்றாடுதல் ✠

இறந்தவர்களுக்காக மன்றாடும் வழக்கம் விவிலிய வழக்கமாகும். இது மக்கபேயர் காலத்திலிருந்து வருகின்றது.(2மக் 12:43-45) யூதா, மக்கபே இறந்தவர்களுக்காகப் பாவப்பரிகாரப் பலி ஒப்புக் கொடுக்க எருசலேமிற்கு ஆள்களை அனுப்பினார். இந்த மரபு புனித பவுலின் காலத்தில் இயேசு வழியாக இறந்தவர்கள் மீட்பைப் பெறுவதற்காக வாழ்ந்து கொண்டிருந்தோர் அவர்கள் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டனர் (1கொரி 15:29). இதன் பின்னணியில்தான் காலப்போக்கில் இறந்தவர்களுக்காகச் செபிக்கும் பழக்கமும், கல்லறைத் தோட்டச் சந்திப்புக்களும், திருப்பலி ஒப்புக் கொடுக்கும் பழக்கமும் தாய் திருச்சபையின் மரபில் வளர்ந்தது.

பழைய ஏற்பாட்டு பலிகளைவிட இயேசுவின் ஒப்புயர்வற்ற கல்வாரிப்பலி அனைத்து பாவங்களையும் போக்குகின்றது. எனவேதான் நவம்பர் மாதம் இறந்தவர்களுக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. ஆகவே நவம்பர் மாதம் ஏன் நாம் இறந்த ஆன்மாக்களின் தினமாக கொண்டாடுகின்றோம் என்பது எமக்கு தெளிவாகின்றது. எனவே இறந்தவர்களை நினைத்து நாமும் திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்போம்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக செபம் :

திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள்பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய இயேசுவே சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து உத்தரிக்கிற ஆத்துமங்களின்பேரில் இரக்கமாயிரும் சுவாமி. தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும் நேரம் பச்சாத்தாப கள்வனுக்கு கிருபை புரிந்ததுபோல இந்த ஆத்துமங்களின்பேரில் இரக்கமாயிருந்து அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் அங்கே சகல அர்ச்சியஷ்டவர்களோடேயும் சம்மனசுகளோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்து ஸ்துதித்துக் கொண்டிருப்பார்கள். மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியக் கட்டளையிட்டருளும். – ஆமென்.