† மரித்த விசுவாசிகள் அனைவரின் நினைவுவிழா † ( நவம்பர் 2 )

அனைத்து புனிதர்களின் விழாவைத் தொடர்ந்து, இன்று அனைத்து இறந்தவர்களின் நினைவை திரு அவை நினைத்துப் பார்க்க அழைக்கின்றது.

புனிதர்கள் தங்களது வாழ்விலே, பல துன்பங்கள் வழியாக தங்களையே புனிதப்படுத்திக் கொண்டார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களை கழுவி தூய்மையாக்கிக் கொண்டவர்கள்.

இறந்த அன்பர்கள் எல்லாரும் அத்தகைய உயர்நிலை பெற்றவர்கள் இல்லையென்பதை நாம் அறிவோம். சிலர் தங்களது பாவங்களாலும், குற்றங்களாலும், பலவீனத்தாலும், கடவுளுக்கு விரோதமாக நடந்து அவருடைய இரக்கத்தை பெறவேண்டியது அவசியமாகியிருப்பதால், அவர்களையெல்லாம் நினைத்து மன்றாட அழைப்புத் தருகின்றது திரு அவை.

இறப்பை ஏற்க முடியாது, வருந்துவதையோ, துயரப்படுவதையோ, கண்ணீர் சிந்துவதையோ விடுத்து, அந்த ஆன்மாக்கள் இறை இரக்கத்தை பெற நம்பிக்கையுடனே மன்றாடுவோம். ஒப்புக் கொடுக்கும் பலியின் பலனை அந்த ஆன்மாக்கள் பெறச் செய்வோம்.

“ புனிதம்” அல்லது “ புனிதர்” எனபதை எபிரேய மொழியில் “ குவதோஸ்” என்றும், கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “ வேறுபடுத்தப்பட்ட” என வார்த்தையளவில் பொருள்

கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவர்கள், புனிதம் என்பது கடவுளையும், அவரை வழிபட பயன்படுத்தப்படும் பொருட்களையும், இடங்களையும் மட்டும் சார்ந்ததாக கருதி வந்தனர். பின்னர், மிகக் குறிப்பாக, இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. 

இதைபுனித பேதுருவின் முதல் திருமுகத்திலே நாம் காணலாம். 

“ புனிதர்கள் யார்? ” என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில், “புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்.” என்பதுவே. ஆம். புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே. இறைமகன் இன்றைய நற்செய்தியில் போதித்தவை அனைத்தும் “ நான் எதற்காக வந்திருக்கின்றேன், எனது பணி யாருக்காக... என்னைப் பின்பற்ற விரும்புகிறவர்களும் இவற்றின்வழி வாழ வேண்டுமென்பதையும்” மிகத் தெளிவாக கூறுகின்றார். இம்மலைப்பொழிவை வாழ்வாக்கியவர்களே இன்று நாம் போற்றிக் கொண்டாடும் புனிதர்கள். யாருமே பிறக்கும்போதே புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களும், நம்மைப்போல சாதாரண மனிதர்களாக பிறந்தவர்கள்தான். நம்மைப்போல நிறை, குறை உடையவர்கள்தான். ஆனால், தங்கள் வாழ்வை இறைதிருவுளம் உணர்ந்து, இறைவார்த்தையின்படி வாழ்ந்து, இறைவனுக்காகவும், பிறருக்காகவும் அனைத்தையும் துறந்து, வாழ்ந்து, மரித்து, இறைபாதம் சேர்ந்து, அவரை முகமுகமாய் தரிசிக்கும் பேற்றினை பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.

புனிதர்கள் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல. அவர்கள் வழியாக நாம் இன்னும் கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக்க துணைபுரிபவை என்று எண்ணுதலே சிறந்தது. நமக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள். நாம் இறைநம்பிக்கையில் வளர துணைபுரிபவர்கள். கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டிய, மற்றும் அவரின் மதிப்பீடுகளை

வாழ்வாக்கிய, புனிதர்களின் வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழ்ந்திட அருள் வேண்டிடுவோம்.

ஒருவன் பிறக்க வேண்டும்.  மனிதனாய் அல்ல, கிறிஸ்துவுக்குள் மனிதனாய். நம்முடைய இறப்பு சாதரணமாய் அல்ல, சரித்திரமாய். கிறிஸ்துவுக்குள் பிறந்து கிறிஸ்து வுக்குள் மரித்து அவரோடு உயிர்ப்பில் பங்கெடுப்போம் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் யாரும் நினையாத ஆன்மாக்களும் இறைவனின் நித்திய வீட்டில் அமைதி பெற இன்றைய நாளில் பிரார்த்தனை செய்வோமஂ.