புனிதர் அனைவரின்  பெருவிழா.

✠ ALL SAINTS’ DAY ✠ ( நவம்பர் 1 )

இறைவனுக்காக  தம் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்றவர்கள்; உலக மாந்தர்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாகவும் நின்றவர்கள்; தன்னலமற்று தியாக தீபங்களாக, இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்று வாழ்ந்து மறைந்தவர்களைத்தான் தூயவர்களாக அல்லது புனிதர்களாக அடையாளப்படுத்துகிறது கத்தோலிக்கத் திருச்சபை.

திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் வந்திக்கப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேத சாட்சிகளே. வேதசாட்சிகளிலும் அனைவரது விழாக்களும் தனித்தனியாக கொண்டாடப்படு-வதில்லை. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும் மோட்சத்தில் புனிதர்களாக பேரின்ப பாக்கியம் அனுபவித்து வருகிறார்கள்.

நவம்பர் 1ல்  நாம் மோட்சத்தில் இருக்கும் புனிதர் அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களது மகிமையையும் மாட்சிமையையும் திருச்சபை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புனிதர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல, எண்ணமுடியாத வேறு நீதிமான்களையும் நாம் காண்கிறோம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள். கடவுளுடைய செம்மறியானவரையும் அவர்கள் வாழ்த்துகிறார்கள். இந்த சகோதரர்களுடன் நாமும் கூடி மகிழ்வோம். புனிதரின் சமுதீத பிரயோசனத்தால் இவர்களுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

மோட்சத்திலிருக்கும் புனிதர்களுடன் தேவபயத்துடன் வாழ்வதுடன் கடவுளது கட்டளைகளை அனுசரித்து நடக்க வேண்டும். எளிய மனத்ததோராய் சாந்த குணம், வேதனைகளில் பொறுமை, நீதி, அனுதாபம், கற்பு, துன்பங்களில் சகிப்பு என்னும் புண்ணியங்களை அனுசரிக்க வேண்டும். நமது உழைப்புகளிலும் பிரச்சனைகளிலும் இயேசுவிடமே இளைப்பாற்றி காணவேண்டும்.

"கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை'' (யோவான் 1:18). ஆனால் நம்மிடையே மனிதர்களாகப் பிறந்து புனிதர்களாக மாறியவர்களின் வழியாகத்தான் இறைவன் தமது மாட்சியை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (மத்தேயு 16:24) என்ற இறைமகன் வாக்குக்கு சாட்சியாக வாழ்ந்தவர்கள் புனிதர்கள்.

இயேசுவின் சீடரான தூய இராயப்பர் (பேதுரு) தொடங்கி இந்தியாவின் முதல் புனிதையான தூய அல்போன்சம்மாவரை மேற்கண்ட இறைவார்த்-தையாக வாழ்ந்து மறைந்தார்கள்; புனிதர்களாக நம்மோடு இன்றும் வாழ்கிறார்கள்; நமக்காக செபிக்கிறார்கள்; நமக்காக பரிந்துபேசி அரும் அடையாளங்களை நமக்கு வழங்கிக் கொண்டுள்ளார்கள். தன் வாழ்நாளெல்லாம் செபத்திலேயே கழித்த தூய தெரசாள் இறப்பதற்கு முன்பு, "என் பணி இனிமேல்தான் ஆரம்பமாகிறது'' என்று கூறி விண்ணகத்தில் உலக மக்களுக்காகப் பரிந்துபேசி செபிக்கப் போவதாக அறிவித்துச் சென்றாள்.

புனிதர்கள் "தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள். தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்; இறைவாக்குகளை எடுத்துரைத்தார்கள். தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும் மக்களை நடத்தினார்கள். நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் தங்கள் வழிமரபில் மாட்சி பெற்றார்கள். தங்கள் வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள். அவர்களுள் சிலர் புகழ் விளங்கும்படி தங்கள் பெயரை விட்டுச்சென்றார்கள். அவர்களின் வழிமரபு என்றும் நிலைத்தோங்கும். அவர்களின் மாட்சி அழிக்கப்படாது. அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம்

செய்யப்பட்டன.  அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும். மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவார் (சீராக் 44:1-15)'' என்ற தூய சீராக்கின் ஞான உரையைக் கண்ணோக்குகின்றபோது, நம் வாழ்வில் தீய எண்ணங்கள், உலக இச்சைகள், சிற்றின்பங்கள் போன்றவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவர்கள் நமக்காக வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது. அவர்களின் மேன்மையை நாம் நினைக்க, சிந்திக்க வேண்டியுள்ளது.

"என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்'' (மத்தேயு 16:25) என்ற இறைமகன் இயேசுவின் வாக்குக்கு உண்மை சாட்சியாக நின்ற அன்னை மரியாள், தூய சூசையப்பர், தூய இராயப்பர், தூய அந்தோனியார், தூய செபஸ்தியார், தூய சின்னப்பர், தூய அருளப்பர், தூய தெரசாள், தூய அல்போன்சம்மால் போன்றோர்களின் பெயரைச் சொல்லி "எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'' என்று அவர்களிடம் செபங்கள் மூலமாக கேட்கின்றபோது, நம் தேவைகளை நிறைவேற்றவும், நம்மை பீடித்திருக்கின்ற நோய்களை, துன்பங்களை நீக்குவதற்காகவும் இறைவனிடம் நாள்தோறும் பரிந்து பேசுகிறார்கள்.

"நாம் புனிதர்களுக்குச் செலுத்தும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று அல்லது வேளா வேளைக்கு எழுப்பும் சிறு சிறு மன்றாட்டு மட்டுமன்று; மாறாக ஆழ்ந்த அடிப்படையில் அமைந்த ஞான உறவு " என்று 23ஆம் யோவான் கூறியுள்ளார்.

நாம் எல்லோருமே நமது நற்செயல்களின் வழியாக இறைவனின் விண்ணரசில் உரிமைப் பிள்ளைகளாக நுழைய முடியும்.

"விண்ணகத்தில் புனிதர்கள் தங்களிடம் இறை மக்களின் செபங்கள் வரும்போது, கிறிஸ்துவின் அரியணைமுன் இந்த செபக் காணிக்கையையே தூபமாக அர்ப்பணிக்கிறார்கள்'' (திரு.வெளி:5-8).

கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காக பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது நமது கடமை. 

வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள் தான் புனிதர்கள்.

ஏழை லாசர் ஆபிரகாம் மடியில் இருப்பதாக இயேசு கூறிய உவமை. (லூக் 16:19-31)

இயேசு உருமாறிய போது மோசேயும் எலியாசும் பேசி கொண்டிருந்தது. (மாற் 9-4)

இந்த நிகழ்வுகளில் சொல்லப்படுகின்ற ஆபிரகாம், மோசே, எலியாஸ் போன்ற இறைவாக்கினர்கள் போன்றே அனைத்து புனிதர்களும் மரித்த பிறகு தொடர்ந்து, இறைவனின் பணியை செய்திடும் பெரும்பாக்கியத்தை பெறுகிறார்கள்.

இரபேல் வானதூதர் தோபியாவிடம், "நீரும் சாராவும் மன்றாடிய போது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன். ~ தோபித்து 12:12" என்கிறார்.

இன்றும் நமது வேண்டுதல்களை தூதர்களும் புனிதர்களும் கடவுள் திருமுன் கொண்டு சென்று நமக்கு பெற்று தருகிறார்கள்.

வேதாகமத்தில் இன்னும் சில வானதூதர்களின்  பரிந்துரைகள்.

"அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் 24 மூப்பர்களும் ஆட்டு குட்டி முன் வீழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் யாழும் சாம்பிராணி நிறைந்த பொற்கிண்ணங்களும் வைத்திருந்தினர். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள். ~ திவெ 5:8"

"மற்றொரு வானதூதர் பொன் தூபக்கிண்ணம் ஏந்தியவராய் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலி பீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த

வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. அச்சாம்பிராணி புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச்சென்றது. ~ திவெ 8:3-4"

 

புனிதர்களுக்கு வணக்கம்

இயேசுவால் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையில் மூவொரு கடவுளுக்கு மட்டுமே வழிபாடு செலுத்த படுகிறது.

புனிதர்களுக்கு வணக்கமும் அன்னை மரியாவுக்கு மேலான வணக்கமும் செலுத்த படுகிறது.

மக்களை தீயோனிடமிருந்து பாதுகாப்பதே புனிதர்கள் மற்றும் வானதூதர்களின் பணி.

தோபித்து 5, 6, 7 அதிகாரங்களில், இரபேல் தூதர் தோபித்து அவர் மகன் தோபியா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாதுகாவலராய் இருந்து தோபித்தின் குடும்பத்தாரை துன்பத்திலிருந்து

மீட்டார் என படிக்கிறோம் தோபித்து 12:14, .. உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருள கடவுள் என்னை அனுப்பினார். நான் இரபேல், ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களில் ஒருவர்’’ என்றார்

தோபித்து தன் குடும்பத்தை பாதுகாத்தவர் வானதூதர் இரபேல் என்பதை அறிந்தவுடன் உணர்ச்சி பெருக்கால் இரபேலின்முன் "அதிர்ச்சி மேலிட இருவரும் அச்சத்துடன் குப்புற விழுந்தனர். ~ தோபி 12:16"

இதே போன்றுதான் உலகெங்கிலும் உள்ள அனைத்து புனிதர்களின் திருத்தலங்களிலும் மக்கள் கூடி புனிதர்கள் வழியாகப் பெற்று கொண்ட நன்மைகளுக்காக நன்றி செலுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

புனிதர்களை நமக்கு முன்மாதிரியாகவும் பாதுகாவலராகவும் கொண்டு, ஒரே மனத்தோடு மூவொரு கடவுளை வழிபடவேண்டும் என்பதே திருச்சபையின் போதனை.

இறைவனின் ஆசீரும் சகல புனிதர்களின் பாதுகாவலும் எப்போதும் நம் அனைவரோடும்  இருப்பதாக ...ஆமென்.