✠ புனிதர்கள் சீமோன் ~ யூதா ததேயு ✠  ( Saints Simon and Jude )

திருத்தூதர், இரத்த சாட்சி 

Apostle, Martyr, Preacher 

பிறப்பு : கானான்

இறப்பு : 65 அல்லது 107

முக்கிய திருத்தலங்கள் : துலூஸ்; புனித பேதுரு பேராலயம்

திருவிழா : அக்டோபர் 28 (கிழக்கு கிறிஸ்தவம்);

சித்தரிக்கப்படும் வகை : படகு; சிலுவை மற்றும் இரம்பம்; மீன் (அல்லது இரண்டு மீன்கள்); ஈட்டி; இரண்டாக அறுக்கப்படும் மனிதன்; படகு துடுப்பு

பாதுகாவல் : மரம் வெட்டுவோர், கரியர்கள்

புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரை தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்றும் கூறுவர்.

இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான்.

இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும்கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.

இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர்.

 

இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லறையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.

 

 

☆ புனிதர் யூதா ததேயு:

 

பிறப்பு: கிபி 1 (முற்பகுதி) கலிலேயா, பாலஸ்தீனம்

இறப்பு : கிபி 67 ஈரான், கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார்

முக்கிய திருத்தலங்கள்: புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர்

சித்தரிக்கப்படும் வகை: படகு, துடுப்பு, கோடரி, தண்டாயுதம், பதக்க உருவப்படம்

பாதுகாவல்: ஆர்மீனியா, அவசர தேவை, தொலைந்த பொருட்கள், மருத்துவமனை

 

புனித யூதா ததேயு, முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்.

கிரேக்க சொல்லான Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழிபெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா என்றோ அழைப்பர்.

யோவான் நற்செய்தியாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து - யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார். ததேயு என்று அழைக்கப்பெற்ற யூதா, கடைசி இராவுணவின்போது, ஆண்டவர் தம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது தன் திருத்தூதருக்கு மட்டும் வெளிப்படுத்துவது ஏன் என்று அவரைக் கேட்ட திருத்தூதர் ஆவார்

இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்கு கிறிஸ்தவத்தை கொண்டுவந்தனர் என்பர்.

சுமார் கிபி 67ம் ஆண்டு, லெபனானில் இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது திருப்பண்டங்கள் (அருளிக்கங்கள்) பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" என்னும் வாசனத்தின் அடிப்படையில் யூதா திருமுக ஆசிரியர் இவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனினும் அவ்வாறிருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் அத்திருமுகம் நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; ஆகவே அது முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்டதாக ஏற்றுக் கொள்வது கடினம்.

 

செபம்: ஆதிமுதல் அந்தம்வரை படைத்து பராமரித்தாளும் பரம பொருளை எம் இறைவா! புனித திருத்தூதர்களின் போதனை வழியாக நாங்கள் உம்மை அறிந்து, ஏற்றுக்கொள்ள செய்தீர். இவர்களின் இறைவேண்டலால் மக்களை உம்மில் நம்பிக்கை கொள்ள செய்தருளும். உம்மீதுள்ள விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ந்து இதன் வழியாக உம் திருச்சபையை மேன்மேலும் வளரச் செய்யும்.