✠ புனித சிலுவையின் பவுல் ✠

( St. Paul of the Cross )

ஆதீன தலைவர், குரு 

பிறப்பு : ஜனவரி 3, 1694

ஒடாவா, பியத்மாந்து, இத்தாலி

இறப்பு : அக்டோபர் 18, 1775 (அகவை 81)

புனித சிலுவையின் பவுல், ஒரு இத்தாலிய கிறிஸ்தவ புனிதரும், திருப்பாடுகள் சபையின் நிறுவனரும் ஆவார்.

வாழ்க்கை குறிப்பு: புனித சிலுவையின் பவுலின் இயற்பெயர் பவுலோ பிரான்செஸ்கோ தேனி ஆகும். இவர் சனவரி 03, 1694 அன்று பியத்மாந்து, இத்தாலியில் பிறந்தார். ஒரு பணக்கார வியபாரியின் மகனான இவர் தனது 19ம் அகவையில் மனம்மாற்றம் பெற்று பக்திநிறைந்த வாழ்க்கை வாழலானார். பிரான்சிசு டி சேல்சின் புத்தகங்களும், கப்புச்சின் சபைக் குருக்களின் அன்பு குறித்தான போதனைகளும் இவரிடம் அதிக

தாக்கத்தை ஏற்படுத்தின. இவர் தனது வாழ்நாளெல்லாம் கடவுளை இயேசுவின் பாடுகளின் மூலம் எளிதில் காணலாம் என்று நம்பினார்.

தனது 26ம் வயதில் தொடர்ச்சியான செப அனுபவங்களின்மூலம் ஒரு புதிய துறவற சபையினைத் துவங்க இறை அழைத்தலை உணர்ந்தார். இவ்வாறு இவர் ஆரம்பித்ததே திருப்பாடுகள் சபை. இச்சபையினரின் அங்கியின் மேல் இயேசுவின் இருதயமும், "இயேசு கிறிஸ்துவின் பாடுகள்" என்னும் வசனமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சபைக்கு இவர் அளித்த பெயர், இயேசுவின் வறியோர், என்பதாயினும் திருப்பாடுகளுக்கு இச்சபை அளித்த முக்கியத்துவத்தினால் இவர்கள் பின் நாட்களில் திருப்பாடுகளின் சபையோர் என அறியப்பட்டனர்.

இவரின் ஆயரின் தூண்டுதலால், இவர் மட்டுமே இச்சபையில் இருக்கும்போதே இவர் இச்சபையின் சட்ட நூலினை நாற்பது நாள் தியானத்துக்குப் பின் 1720ல் இயற்றினார். இச்சபையில் இவரின் சகோதரரே இவருக்குப்பின் சேர்ந்த முதல் உறுப்பினர் ஆவார். இதற்குப் பின் இச்சபை மெதுவாக வளரத் துவங்கியது. இவர் தனது வாழ்நாளில் பிறரின் ஆன்ம வழிகாட்டலுக்கு எழுதிய இரண்டாயிரத்துக்கும் மேலான கடிதங்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவர் 18 அக்டோபர் 1775ல் இறந்தார். அச்சமயத்தில் இவரின் சபையில் 180 குருக்கள் மற்றும் அருட்சகோதரர்கள் இருந்தனர்.

இவருக்கு 1 அக்டோபர் 1852ல் முக்திபேறு பட்டமும், 29 ஜூன் 1867ல் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.

இவரின் இறந்தநாளான 18 அக்டோபர், நற்செய்தியாளர் லூக்காவின் விழாவாக இருப்பதால் இவரின் விழாநாள் 19 அக்டோபர் ஆகும்.

சிந்தனை : "கடவுள் சேவை புரிய நல்ல சொற்களும், நல்ல எண்ணங்களும் மட்டும் போதாது. இதனோடு, உழைப்பு, உற்சாகம் மற்றும் தைரியம் தேவை"  - ~ சிலுவையின் புனித பவுல்