✠ புனித லூக்கா ✠ ( St. Luke )

திருத்தூதர், நற்செய்தியாளர், இரத்தசாட்சி 

பிறப்பு : அந்தியோக்கியா, சிரியா, உரோமைப் பேரரசு

இறப்பு : சுமார் 84, கிரேக்க நாடு

சித்தரிக்கப்படும் வகை : (இறக்கை உடைய) எருது, 

நான்கு நற்செய்தியாளர்களோடு, மருத்துவராக, ஆயராக, புத்தகத்தோடு அல்லது மரியாவை வரைவது போன்று. 

பாதுகாவல்: கலைஞர்கள், மருத்துவர்கள், அறுவை மருத்துவர்கள் மற்றும் பலர் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்: லூக்கா நற்செய்தி, அப்போஸ்தலர் பணி

நற்செய்தியாளரான புனித லூக்கா ஒரு ஆதி கிறித்தவ எழுத்தாளரும், திருச்சபை தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின்படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர் நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.

இவர் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்த மருத்துவர் ஆவார். இவரைப்பற்றிய மிகப்பழைய குறிப்பு திருத்தூதர் பவுல் எழுதிய பிலமோன் வசனம் 24, கொலோசையர் 4:14 மற்றும் திமொத்தேயு 4:11ல் காணக்கிடைக்கின்றது.

இவர் ஒரு புறவின இனத்தைச் சார்ந்தவர். இருப்பினும் திருமுறைக்கு மனந்திரும்பினார். புனித பவுலுடன் சேர்ந்து திருத்தூதுரைப் பயணம் மேற்கொண்டார். புனித பவுலின் போதனைக்கு ஏற்ப நற்செய்தி ஒன்றை எழுதியுள்ளார். பின்னர் திருத்தூதர்பணி என்னும் விவிலிய நூலையும் எழுதியுள்ளார். அதில் பவுல் முதன்முறையாக உரோமையில் தங்கிருந்ததுவரை நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டுள்ளார். புனித பவுல் லூக்காவை மருத்துவர் என்று குறிப்பிட்டார். லூக்கா தான் எழுதிய நற்செய்தியில், ஏழை மக்களுக்கு மிக முக்கியத்துவம் தந்துள்ளார்.

இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள் ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவர் தனது 84ம் அகவையில் மரித்தார் என்பர். இவரின்  பொருட்கள் கான்ஸ்டண்டினோப்பிளுக்கு கி.பி 357ல் கொண்டுவரப்பட்டன.

இவரின் விழாநாள் 18 அக்டோபர் ஆகும்.

 

செபம்:

ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! ஏழைகள்மீது உமக்குள்ள அன்பின் மறைப்பொருளை தமது மறையுரையாலும், எழுத்தாலும் வெளிப்படுத்த, புனித லூக்காவைத் தேர்ந்தெடுத்தீர். கிறிஸ்துவர்களாகிய நாங்கள் ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டு, உம்மீது அன்புகொண்டு, ஏழைகளை என்றும் ஏற்று வாழ, வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.