✠ புனித ஃபவுஸ்டினா ✠ (St. Faustina Kowalska)

கன்னியர் 

பிறப்பு : ஆகஸ்ட் 25, 1905- குலோகோவிச், ரஷியப் பேரரசு (Głogowiec, USSR)

இறப்பு : அக்டோபர் 5, 1938  - க்ராக்கோவ், போலந்து (Krakரw, Poland)

அருளாளர் பட்டம் :  18 ஏப்ரல் 1993 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

புனிதர் பட்டம் :  30 ஏப்ரல் 2000 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

வத்திக்கான் முக்கிய திருத்தலங்கள் :  இறை இரக்கத்தின் பேராலயம் 

(பசிலிக்கா), க்ராக்கோவ், போலந்து

நினைவுத் திருவிழா : 5 அக்டோபர்

பாதுகாவல் : உலக இளையோர் நாள்

மரிய ஃபவுஸ்டினா கோவால்ஸ்கா போலந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இக்காட்சிகளை இவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். இக்குறிப்புகள் பின்னாளில் (Diary: Divine Mercy in My Soul) என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தனது 20ம் வயதில் வார்சாவிலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு மிக்கேல் ஸ்போகோ என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு) திருப்பலியில் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது.

இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. அவ்வண்ணமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது. 1978ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமைவாதம் தழைக்க துவங்கியதாலும், வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும்போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும், அது கண்டு பிடிக்கப்பட்டதனால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் நினைவு விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.