✠ புனித அசிசி ஃபிரான்சிஸ் ✠ (St. Francis of Assisi)

மறைப்பணியாளர்; துறவி; சபை நிறுவனர் 

பிறப்பு : 1182 அசிசி, இத்தாலி

இறப்பு : அக்டோபர் 3, 1226 அசிசி, இத்தாலி

புனிதர் பட்டம் : ஜூலை 16, 1228, திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி - அசிசி

முக்கிய திருத்தலங்கள் : அசிசி நகர் ஃபிரான்சிஸ் பெருங்கோவில்

நினைவுத் திருவிழா :  அக்டோபர் 4

சித்தரிக்கப்படும் வகை : சிலுவை, புறா, பறவைகள், விலங்குகள், காலருகில் ஓநாய், "அமைதியும் நன்மையும்", ஐந்து காயங்கள்,  "T" வடிவ சிலுவை.

பாதுகாவல் : விலங்குகள், கத்தோலிக்க சேவை, சுற்றுச்சூழல், வணிகர், மேய்க்காவுயான் நகரம் (பிலிப்பைன்சு), இத்தாலி, அடைக்கலம் தேடிப் பயணம் செய்வோர், தலைவலியிலிருந்து, தொற்றுநோயிலிருந்து

 

ஃபிரான்சிஸ் என்னும் பெயர் எழுந்த வரலாறு :

ஃபிரான்சிஸ், இவரது பெற்றோருக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளுள் ஒருவர். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone) ஒரு செல்வந்தரான துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont) குறித்து அதிகம் தெரிய வராவிட்டாலும், அவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிகின்றது.

ஃபிரான்சிசு பிறந்தபோது அவர்தம் தந்தை பியேட்ரோ வணிக அலுவலுக்காகப் ஃபிரான்ஸ் சென்றிருந்தார். ஃபிரான்ஸிஸின் தாயார் அவருக்கு, திருமுழுக்கு யோவான் என்னும் கிறிஸ்தவப் புனிதரின் பெயரைத் தழுவி, ஜொவானி டி பேர்னார்டோனே என்னும் பெயரில் திருமுழுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். ஃபிரான்சிஸ் வளர்ந்து ஒரு சமயப் பெரியார் ஆக வேண்டும் என்னும் எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்தார்.

ஃபிரான்ஸிஸின் தந்தை அசிசிக்குத் திரும்பியதும் இதையிட்டுக் கோபம் அடைந்தார். அவருக்குத் தனது மகன் ஒரு சமயத் தலைவராக இருப்பதில் விருப்பமில்லை. இதனால் அவர் தன் மகனைப் பிரான்செஸ்கோ என்று பெயரிட்டு அழைத்தார். அப்பெயருக்கு "ஃபிரான்ஸ் நாட்டோடு தொடர்புடைய" என்பது பொருள். அதுவே ஆங்கிலத்தில் ஃபிரான்சிஸ் (Francis) என்றானது. ஃபிரான்சிஸ் தொடர்பிலான தமது வணிக வெற்றியை நினைவுகூரவும், ஃபிரான்ஸ் தொடர்பான எல்லாவற்றிலும் அவருக்கிருந்த பற்றினாலுமே இப்பெயரை அவர் விரும்பினார். அப்பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. ஆனால் ஃபிரான்சிஸ் தம் தந்தையின் கனவைப் பொய்யாக்கித் துறவறம் பூண்டார்.

இளமைப் பருவம் :

இளைஞராக இருந்தபோது ஃபிரான்சிசுக்கு பிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார்.

ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள் இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவைபற்றி குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித்திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த பிரான்சிசு உயர்குடி மக்களைப்போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார். ஃபிரான்சிஸ் இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (Perugia) நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே நீண்டகாலப் பகைமை இருந்துவந்தது. அந்த இரு நகரங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த ஃபிரான்சிஸும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். ஆயுதம் தாங்கிப் போர்செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் அப்போது எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். ஆனால் அதே நேரத்தில் இளம் வயதிலேயே இவருக்கு உலகியல் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதோடு ஏழைகள்மட்டில் பரிவும் தோன்றியது. பெரூஜியாவில் ஓராண்டு சிறையில் இருந்தபோது, அவரோடுகூட இருந்த ஒரு கைதியைப் பிறகைதிகள் கொடுமைப்படுத்தியபோது, ஃபிரான்சிஸ் அவருக்கு ஆதரவாகப் பேசினார்.

ஃபிரான்சிஸ் மனமாற்றம் அடைந்த வரலாறு :

1201ம் ஆண்டில் பெரூஜியா நகருக்கு எதிராகப் போரிடும்படி ஃபிரான்சிஸ் படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில்

எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க நேரிட்டது. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாகப் ஃபிரான்ஸிசுக்குத் ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும், 1203ம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய ஃபிரான்சிஸ் மீண்டும் தனது பழைய வாழ்க்கைமுறைக்கே திரும்பினார். 1205ம் ஆண்டிலும் அவருக்கு ஓர் ஆன்மிக அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதன்பின், ஃபிரான்சிஸ் தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். விளையாட்டுகளும் விழாக்களும் அவருக்கு வெறுப்பையே ஊட்டின. அவருடைய முன்னாள் நண்பர்களை அவர் தவிர்க்கத் தொடங்கினார். அவர்கள், வேடிக்கையாக அவரைப் பார்த்து, "திருமணம் செய்துகொள்ளப் போகிறீரோ?" என்று கேட்டனர். அதற்குப் ஃபிரான்சிஸ், "ஆம், நீங்கள் பார்த்திராத அழகுமிக்க ஒரு பெண்ணை நான் மணம் செய்துகொள்ளப் போகிறேன்" என்று பதிலிறுத்தாராம். அவர் குறிப்பிட்ட பெண் "ஏழ்மை" என்னும் இலட்சியமே. இயேசுவைப் பின்பற்றி, பிரான்சிசும் ஓர் ஏழை மனிதராக வாழ விரும்பினார். ஃபிரான்சிஸ் தனிமையை நாடிச் சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளைநோக்கி வேண்டல் செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.

 

குரல் கேட்டல் :

பிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற பிச்சைக்காரனின் கதையிலிருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம். இதன்படி, தந்தைக்குப் பதிலாக இவர் சந்தையில் ஒருநாள் துணி விற்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிச்சைக்காரன் இவரிடம் பிச்சை கேட்டான். இவர் அப்போது வாடிக்கையாளருடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அது முடிந்ததுமே, தனது பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பிச்சைக்காரனைத் தேடி ஓடினார். அவனைக் கண்டதும், தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே அவனிடம் கொடுத்துவிட்டார். இச்செயலை முன்னிட்டு இவரது நண்பர்கள் பிரான்சிசைக் குறைகூறினர்.

வீட்டுக்குச் சென்றதும் பிரான்சிசின் தந்தை மிகவும் கோபம் கொண்டு அவரைக் கண்டித்தார்.

1204ல் ஃபிரான்சிஸ் நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். 1205ல் பூலியா (Puglia) என்னும் இடம்நோக்கிப் பயணமான அவர், அங்கே வால்ட்டர் என்னும் பெயர் கொண்ட பிரியேன் கவுண்ட்டின் (Count of Brienne) படையில் சேரத் துணிந்தார். வழியில் அவர் அதிசயமானதொரு காட்சி காணும் பேறுபெற்றார். அதில் ஒரு பெரிய மண்டபத்தில் பல வகையான போர்க்கருவிகள் இருந்தன. அவற்றின்மீது சிலுவைச் சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரு குரல் "இந்த ஆயுதங்கள் உனக்கும் உன் போர் வீரர்களுக்கும் உள்ளன" என்று கூறியது. உடனே பிரான்சிசு மிகுந்த உற்சாகத்துடன், "அப்படி என்றால் நான் புகழ்மிக்க இளவரசன் ஆவேன்" என்றார்.

ஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. "நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல" என்று கூறிய அக்குரலைக் கேட்ட ஃபிரான்சிஸ் அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ம் ஆண்டில் ஃபிரான்சிஸுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

புனித தமியானோ கோவிலில் ஃபிரான்சிஸ் பெற்ற இறையனுபவம்: 1206ம் ஆண்டில் ஒருநாள் ஃபிரான்சிஸ் அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ கோவிலுக்குள் நுழைந்து இறைவேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு திருவோவியம் இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.

கோவிலின் உள்ளே நுழைந்த ஃபிரான்சிஸ் இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின்முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாகப் ஃபிரான்சிஸின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது: “ஃஃபிரான்சிஸ், என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு!" இச்சொற்களைக் கேட்ட ஃபிரான்சிஸுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அறிவதற்காகக் கோவிலில் சுற்றுமுற்றும் பார்த்தார். இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் ஃபிரான்சிஸ், "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று உற்சாகத்தோடு பதிலிறுத்தார்.

புனித தமியானோ கோவிலில் ஃபிரான்சிஸுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. ஃபிரான்சிஸ் தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாகப் ஃபிரான்சிஸ் நினைத்தார். ஆனால் நாள் போகப்போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.

முதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம் குதிரைமீது ஏற்றினார். அசிசி நகருக்கு அருகே இருந்த ஃபொலீனோ (Foligno) என்னும் நகரச் சந்தைக்குச் சென்று

துணிகளையும் அவற்றோடு குதிரையையும் விலைபேசி விற்றுவிட்டு, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு புனித தமியானோ கோவிலுக்குத் திரும்பிச் சென்றார்.

கோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். ஃபிரான்சிஸ் பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.

இதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து புனித தமியானோ கோவிலுக்கு வந்தார். அங்கு ஃபிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த ஃபிரான்சிஸ் வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம் பார்த்துப் பிரான்சிசின் தாய் மகன்மீது இரக்கம் கொண்டு அவரை விடுவித்தார். ஃபிரான்சிஸ் மீண்டும் புனித தமியான் கோவிலுக்குச் சென்று, தம் நாட்களை இறைவேண்டலில் கழித்தார்.

 

துறவற சபைகளை நிறுவுதல் :

பின்னர் ஃபிரான்சிஸ் உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு புனித பேதுரு பேராலயத்தின் அருகே

பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவர்களோடு தாமும் போய் அமர்ந்துகொண்டு, ஒரு பிச்சைக்காரராக மாறினார். இந்த அனுபவம் அவருக்கு ஏழ்மையின் பொருளை ஆழ்ந்த விதத்தில் உணர்த்திற்று. வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலேயே கழிக்க வேண்டும் என்று ஃபிரான்சிஸ் உறுதி பூண்டார்.

ஃபிரான்சிஸ் வீடு திரும்பியதும், அசிசி நகரின் தெருக்களில் இறங்கி நடந்து சென்று, இயேசுவைப் பற்றிப் போதிக்கலானார். அவர் கூறியதைக் கேட்டு ஒரு சிலர் அவருக்குச் சீடர்களாக மாறினர். 1209ம் ஆண்டு 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். ஃபிரான்சிஸ் திருத்தந்தை மூன்றாம் இன்னசண்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 1210ல் ஃபிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.

பின்னர், ஃபிரான்சிஸ் 1212ல் கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், 1221ல் மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று "மூன்றாம் சபை" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்.

 

 

சிலுவைப் போரில் பங்காற்றுதல் :

திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் விடுத்த அழைப்பை ஏற்று, ஃபிரான்சிஸ் 1219ல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு இயேசு பிறந்து வளர்ந்து இறந்த திருநாட்டை மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும்

இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.

இதற்கிடையில் ஃபிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை ஒழுங்கமைப்பதற்காகப் பிரான்சிசு முயற்சிகள் மேற்கொண்டார். சபையின் ஒழுங்குகள் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரான்சிசு நிர்வாகப் பொறுப்பில் அதிகம் ஈடுபடவில்லை.

 

கிறிஸ்தவத்தைப் பரப்பப் ஃபிரான்சிஸ் மேற்கொண்ட பயணங்கள் :

பிரான்சிசு பெற்ற இறையழைத்தலில் இரு முக்கிய கூறுகள் அடங்கியிருந்தன. முதல் கூறு "ஏழ்மை". இரண்டாவது கூறு "நற்செய்தி அறிவித்தல்." குடும்பத்தையும் உடைமைகளையும் துறந்த பிரான்சிசு இயேசு அறிவித்த நற்செய்தியைத் தாமும் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். அதே வேளையில் கிறிஸ்துவுக்காகத் தம் உயிரையே பலியாக்கவும் அவர் முன்வந்தார்.

இச்சிந்தனைகளோடு ஃபிரான்சிஸ் 1212ல் இலையுதிர் காலத்தில் சிரியா பகுதிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு இசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியர் நடுவே கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முனைந்தார். ஆனால், சுலோவேனியா கடற்கரையில் அவர் பயணம் செய்த கப்பல் சேதமுற்றதால் அவரால் பயணத்தைத் தொடரமுடியாமல் இத்தாலியின் அங்கோணா நகரத்திற்குத் திரும்பினார். நடு இத்தாலியில் கிறிஸ்தவ நற்செய்தியைப் போதித்தார்.

1214ல் ஃபிரான்சிஸ் மீண்டும் ஒருமுறை நற்செய்திப் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் வடகரையில் அமைந்துள்ள மொரோக்கோ நாட்டுக்குச் சென்று அங்கு இசுலாமியரிடையே கிறித்தவத்தைப் பரப்ப வேண்டும் என்னும் ஆர்வத்தில் பிரான்சிசு முதலில் ஸ்பானியா போய்ச் சேர்ந்தார். அங்கு கடின

நோய்வாய்ப்பட்டதால் மொரோக்கோவுக்குப் பயணத்தைத் தொடர முடியவில்லை.

இத்தாலிக்குத் திரும்பியபின் ஃபிரான்சிஸ் நிறுவிய துறவறக் குழுவில் மேலும் பலர் சேர்ந்தனர். அவர்களுள் தலைசிறந்த ஒருவர் செலானோ தோமா (Thomas of Celano) என்பர் ஆவார். இவரே முதன்முதலாகப் ஃபிரான்சிஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

கிபி 1215ல் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கத்தில் பிரான்சிசு கலந்திருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. ஆயினும் அதுபற்றி உறுதியான தகவல் இல்லை.

1216, ஜூலை மாதம் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பெரூஜியா நகரில் காலமானார். அப்போது ஃபிரான்சிஸ் உடனிருந்தார்.

இறப்பு :

தாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் ஃபிரான்சிஸ் தம் சகோதரர்களிடம் அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூடஇருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு, தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப் பகிர்ந்துகொண்டது போலவே பிரான்சிசும் செய்ய விரும்பினார். அப்பத்தைப் பகிர்ந்துகொண்டதும் ஃபிரான்சிஸ் தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் இறுதி ஆசி வழங்கினார்.  "உலகில் நான் செய்யவேண்டிய பணி முடிந்தது. நீங்கள் ஆற்றவேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறித்து கற்பிப்பாராக" என்று கூறினார்.

ஏழ்மையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட ஃபிரான்சிஸ் தமக்கென்று தாம் உடுத்த எளிய மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச் சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன்

வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார் ஃபிரான்சிஸ்.

பின்னர் ஃபிரான்சிஸ் தம் சகோதரர்களிடம் யோவான் நற்செய்தியிலிருந்து இயேசுவின் இறுதி இராவுணவு, துன்பங்கள் மற்றும் பிரியாவிடை பற்றிய பகுதியை (யோவான் 13:1-17) வாசிக்கச் சொன்னார். நற்செய்தி வாசகத்தைக் கவனமாகக் கேட்டுத் தியானித்தவராய், திருப்பாடல்கள் நூலிலிருந்து 141 (142)ம் திருப்பாடலை அவரே தளர்ந்த குரலில் பாடித் தொடங்கிவைத்தார். அப்பாடலின் இறுதி வசனத்தில் "சிறையினின்று என்னை விடுவித்தருளும்" (திபா 142:7) என்னும் சொற்றொடரைச் சகோதரர்கள் பாடினார்கள். அன்று சனிக்கிழமை, 1226ம் ஆண்டு, அக்டோபர் 3ம் நாள் இரவு. சூரியன் சாய்ந்தபின் மறுநாள் தொடங்குவதாகக் கணக்கிடுவதால் ஃபிரான்சிஸ் அக்டோபர் 4ம் நாள் இறந்தார் என்று கணிப்பர். அப்போது ஃபிரான்சிஸுக்கு வயது 45. அவர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து, இயேசுவை முற்றிலுமாகப் பின்சென்று வாழ்ந்திட முடிவு செய்து, மனமாற்றம் அடைந்த 12ம் ஆண்டு. அந்த நாளில் ஃபிரான்சிஸ் இறந்தார்.

ஃபிரான்சிஸ் இறந்த இரண்டே ஆண்டுகளில் அவர்தம் நெருங்கிய நண்பராயிருந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார் (ஜூலை 16, 1228). இன்று, புனித அசிசி பிரான்சிசு உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்.

 

செபம்:

ஆண்டவராகிய கடவுளே! அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழ்மையிலும், தாழ்ச்சியிலும், கிறிஸ்துவின் சாயலில் விளங்கச் செய்தீர். இப்புனிதரின் வழியில் நடந்து, மகிழ்விலும், அன்பிலும், உம் மகனைப் பின்பற்றி, உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும்.   Mnkd;.