✠ புனிதர்கள் மிக்கேல் ~ ரபேல் ~ கபிரியேல் ✠

( Saints. Michael, Raphael & Gabriel )

அதிதூதர்கள் :

✞ புனித மிக்கேல் ✞

சித்தரிக்கப்படும் வகை :

அலகையை காலால் மிதித்தல்; கொடி, தராசு, வாள் ஏந்தியவாறு

பாதுகாவல் : திவ்விய நற்கருணை, திருத்தந்தையரின் காவல் தூதர் (கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலர்) கீவ், யூதர்களைப் பாதுகாப்பவர், காவலர், இராணுவ வீரர், காவலர், வியாபாரி, கடற்படையினர், வானிலிருந்து குதிக்கும் வீரர்.

 

மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளுக்கு நிகர் யார்?" என்பது பொருள். விண்ணகத்தில் இறைதூதர்களின் நடுவே பிரச்சனைகள் ஏற்பட்டபோது, புனித மிக்கேல் தூதரின் தலைமையில் கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி குழப்பம் செய்த லூசிபர் சாத்தானையும் அதன் தோழர்களையும் நெருப்பில் தள்ளினார். நோயாளிகள், அதிதூதர் மிக்கேலின் பெயரைக் கூறி செபித்தால், நோய் நீங்கும் என்றும் ஆதிகாலத்திலிருந்து கூறப்படுகின்றது. மனிதர்கள் இறந்ததும், அவர்களின் ஆன்மாவை சாத்தானிடமிருந்து விடுவித்து, தனித்தீர்வைக்கு இறைவனிடம் கொண்டு சேர்ப்பதை, தன் வேலையாக கொண்டு செயல்பட்டார் மிக்கேல்.

 

பழைய ஏற்பாட்டில் மிக்கேல் :

பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் காட்சி காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இசுரயேலின் பாதுக்காப்பாளர் என மிக்கேல் அழைக்கப்படுகின்றார். தானியேல் மிக்கேலை "தலைமைக் காவலர்" என்று அழைக்கிறார். பின்னர் அதே காட்சியில் (தானியேல் 12:1) "கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது

 

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம்வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.

நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

 

புதிய ஏற்பாட்டில் மிக்கேல் :

வெளிப்படுத்துதல் நூலில் விண்ணகத்தில் நடந்த போர்பற்றி குறிப்பிடப்படுகிறது. பின்வரும் விவிலிய வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் ). பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.  அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.

யூதா 1 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகின்றது

தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று மட்டும் சொன்னார்.

☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆

 

 

 

✞ புனித ரபேல் ✞

 

சித்தரிக்கப்படும் வகை :

இளைஞர் ஒருவர் கையில் கோளும் மீனும் ஏந்தியவாறு

பாதுகாவல்: நோயாளிகள், பயணிகள், மருந்தகர்கள்; குருடர்; உடல் நோய்; நோயாளிகள்;

எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பது. இவரும் இறைவனின் முக்கிய தூதர்கள் எழுவரில் ஒருவர். இவர் கடவுளிடம் பரிந்துப்பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார்.

யூத மற்றும் கிறித்தவ மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபு வழி திருச்சபையினரால் இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்ட விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான தோபித்து நூலில் அதிதூதர் புனித ரபேல், குறிக்கப்பட்டுள்ளார். விவிலியத்தில் பெயரோடு குறிக்கப்பட்டுள்ள மூன்று தூதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

விவிலியத்தில் கடவுளுடைய முன்னிலையில் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் தாம் என இவரே குறிப்பிடுவதாக உள்ளது.

 

இவரே தோபியாசும் அவர் மருமகள் சாராவும் மன்றாடியபோது அவர்களின் வேண்டுதல்களையும் நற்செயல்களையும் எடுத்துச்சென்று ஆண்டவரின் திருமுன் ஒப்படைதவரும், தோபியாசை சோதிக்க அனுப்பப்பட்டவரும், அவருக்கும் அவரின் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுளால் அனுப்பப்பட்டவரும் ஆவார்.

☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆

 

✞ புனித கபிரியேல் ✞

 

 

கபிரியேல் என்பவர் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

 

கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழுபேரில் இவரும் ஒருவர். இவரின் பெயருக்கு எபிரேய மொழியில் "கடவுளின் ஆற்றல் அல்லது கடவுளின் செய்தி" என்பது பொருள். கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழுபேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான். 

தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும், அவரின் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர். இஸ்லாமியர்கள் இவரை தேவதூதர்களின் தலைவர்களாகக் கருதுகின்றனர். இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தியை இன்று திருச்சபை மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.

 

கிறித்தவ நம்பிக்கைகள் :

இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறித்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறித்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்..

 

இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர்

மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தி, இன்று திருச்சபையில் மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.

 

இசுலாமிய நம்பிக்கைகள் :

இசுலாமிய இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குரான் குறிப்பிடுகின்றது. இவர், இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குரான் குறிப்பிடுகிறது.

 

இசுலாமிய நம்பிக்கையில் இவர்தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டுசேர்த்ததாக நம்பப்படுகிறது. மேலும், புனித குரான் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பது இசுலாமிய நம்பிக்கை.

 

பிற நம்பிக்கைகள் :

சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

'வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (காண். யோவான் 1:47-51)

அதிதூதர்களான  மிக்கேல்,  கபிரியேல்,  இரபேல் - செப்டம்பர் 29

தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல்,

மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல்,

நலம் நல்கும் இரபேல்

நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில்.என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர் தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள்.

கடவுளைப்போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப்போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள்போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே.

இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

 

தேவ தூததர்களுக்கு செபம்

அதிதூதரான புனித மிக்கேலே! 

பயங்கரத்துக்குரிய தீர்வையில் நாங்கள் மோசம் போகாதபடி எங்களை யுத்தத்தில் தற்காத்தருளும்.

அதிதூதரான புனித கபிரியேலே! 

நாங்கள் தேவசித்தத்தை அறிந்து அதன்படியே நடக்க உதவியாயிருந்தருளும். 

அதிதூதரான புனித இறபாயேலே ! 

இவ்வுலகில் நாங்கள் நடத்தும் யாத்திரையில் சகல துன்பங்களிலும், அபாயங்களிலும் நின்று எங்களை  விடுதலையாக்கியருளும்.

செபம்: வான் படைகளின் ஆண்டவராகிய கடவுளே! வானத்தூதருக்கும், மானிடருக்கும், அவரவருக்குரிய பணிகளை ஞானமிகு முறையில் திட்டமிட்டருனீர். விண்ணகத்தில் உம்மை வழிபடும் இவர்கள், மண்ணகத்தில் எங்கள் வாழ்வை பாதுகாத்திட அருள்புரியும்.