✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠ (St. Vincent de Paul)

குரு, சபை நிறுவனர் : (Priest and founder)

"கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்டையாகக்கொண்டது".

பிறப்பு : ஏப்ரல் 24, 1581, குயேன், காஸ்கனி, ஃபிரான்ஸ் அரசு

(Guyenne and Gascony, Kingdom of France)

இறப்பு : செப்டம்பர் 27, 1660 (வயது 79)

பாரிஸ், ஃபிரான்ஸ் அரசு (Paris, Kingdom of France)

ஏற்கும் சமயம் :  கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) 

ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion)

முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 13, 1729 திருத்தந்தை 13ம் பெனடிக்ட் புனிதர் பட்டம் : ஜூன் 16, 1737 திருத்தந்தை 12ம் கிளமென்ட் 

முக்கிய திருத்தலங்கள் :  புனித வின்சென்ட் தெ பவுல் சிற்றாலயம்,  95, ரியூ டி செவ்ரெஸ், பாரிஸ், ஃபிரான்ஸ் (95, Rue de Sèvres, Paris, France)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 27

பாதுகாவல் :  தொண்டு நிறுவனங்கள்; மருத்துவமனைகள்; குதிரைகள்; மருத்துவமனைகள்; தொழுநோய்; தொலைந்துபோன

பொருட்கள்; மடகாஸ்கர் (Madagascar); கைதிகள்; ரிச்மோன்ட் (Richmond); வர்ஜீனியா (Virginia); ஆன்மீக உதவி; புனித வின்சென்ட் தெ பவுல் சபைகள்; தன்னார்வலர்கள்; தூய இருதய பேராலய தயாரிப்பு (Sacred Heart Cathedral Preparatory); Vincentian Service Corps.

 

புனிதர் வின்சென்ட் தே பவுல், ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காக தம்மையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க குரு ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையிலும், ஆங்கிலிக்கன் ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவருக்கு 1737ம் ஆண்டு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் தமது இரக்கம், மனத்தாழ்ச்சி, தாராள குணம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றவர் ஆவார். மேலும், இவர் “டிரம்பெட்” எனும் இசைக் கருவிகளின் பெரிய தூதர் (Great Apostle of Trumpets) என்றும் அழைக்கப்படுகிறார். ஐக்கிய அரசு நாடுகளில் (UK) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் நாள், தூய வின்சென்ட் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அனுசரிக்கின்றனர்.

 

வாழ்க்கை குறிப்பு :

புனித வின்சென்ட் ஃபிரான்ஸ் நாட்டில் காஸ்கனியின் பாவ்ய் பகுதியில், விவசாயக் குடும்பத்தில் 1581ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் ஜீன் (Jean) ஆகும். தாயாரின் பெயர், பெட்ரான்ட் (Bertrande de Moras de Paul) ஆகும். இவருக்கு ஜீன் (Jean), பெர்னார்ட் (Bernard), கேயான் (Gayon) என்று மூன்று சகோதரர்களும், மேரி மற்றும் மேரி-கிளாடின் (Marie and Marie-Claudine) என்று இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

வின்சென்ட் தே பவுல் சிறுவனாக இருந்தபோது குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் ஆடுமாடுகளை மேய்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து ஆடு மாடுகளை மேய்த்து வந்தார். ஒரு சமயம் வின்சென்ட் தே பவுலின் ஊரில் வாழ்ந்த கோமத்

என்ற நீதிபதி அவரிடம் இருந்த ஞானத்தையும் புத்திக்கூர்மையையும் பார்க்க நேர்ந்தது. உடனே அந்த நீதிபதி வின்சென்ட் தே பவுலின் தந்தையைச் சந்தித்து அவரிடம், “உம்முடைய பையன் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டியவன் அல்ல, அவன் பள்ளிக்குச் சென்று படிக்கவேண்டியவன், தயவு செய்து எப்படியாவது அவனை படிக்கவையுங்கள். இல்லையென்றால் ஒரு மிகச் சிறந்த அறிவாளியை நீங்கள் இழக்க நேரிடும்” என்று புத்திமதி சொல்லிவிட்டுச் சென்றார். உடனே வின்சென்ட் தே பவுலின் தந்தை தன்னிடம் இருந்த ஆடு மாடுகளை விற்று, அவரை பள்ளியில் படிக்க வைத்தார்.

 

வின்சென்ட் தே பவுலின் வீட்டில் கடுமையான வறுமை நிலவியது. வின்சென்ட் தே பவுலிடம் இருந்த ஞானமும் அறிவும் அவரை மிகச் சிறந்த படிப்பாளியாக மாற்றியது. இந்த சமயத்தில் அவருக்கு பெருய்ல் (Berulle) என்பரின் நட்பு கிடைத்தது. அவர்தான் வின்சென்ட் தே பவுலை குருவாகப் படிக்கச் சொன்னார். 

 

ஃபிரான்சின், டாக்சில் (Dax) கலை, இலக்கியம் கற்ற இவர், 1597ம் ஆண்டு, டுலோஸ் பல்கலையில் (University of Toulouse) இறையியல் படிப்பை தொடங்கினார். 1600ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் தேதி, தமது பத்தொன்பது வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அக்காலத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற குறைந்தபட்ச வயது இருபத்துநான்கு ஆகும். ஆனால், வின்சென்டின் பங்குத்தந்தை நியமனத்தை எதிர்த்து ரோம நீதிமன்றத்தில் (Court of Rome) வழக்கு தொடரப்பட்டது. வழக்கை எதிர்க்க விரும்பாத வின்சென்ட், பங்குத்தந்தை நியமன பதவி விலகினார். டுலோஸிலேயே தங்கி தமது கல்வியை தொடர்ந்தார். இறையியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1605ம் ஆண்டு, மார்செய்ல் பகுதிக்கு திரும்பும் வழியில் பார்பரி (Barbary pirates) கடற்கொள்ளையரால்

பிடித்துச்செல்லப்பட்டு, துனீசியா (Tunis) பகுதியில் அடிமையாக விற்கப்பட்டார்.

 

முதலில் ஒரு மீனவ எஜமானிடம் விற்கப்பட்ட வின்சென்ட், மீனவ பணிகள் இவருக்கு பொருந்தாமையால் மருத்துவர் ஒருவருக்கு விற்கப்பட்டார். ஒரு பயணத்தின்போது இவரது எஜமான் மரணமடைந்தார். பின்னர், மீண்டுமொருமுறை வின்சென்ட் விற்கப்பட்டார். இம்முறை இவரை வாங்கிய எஜமான் ஃபிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்த ஒரு முன்னாள் கத்தோலிக்க குரு ஆவார். ஃபிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த இவரது பெயர், கில்லாம் கௌடியர் (Guillaume Gautier) ஆகும். முன்னர் ஒருமுறை இஸ்லாமியர்களிடம் அடிமையாக பிடிபட்டிருந்த இவர், அடிமைத் தளையிளிருந்து விடுபடுவதற்காக இஸ்லாம் மதத்தை தழுவினார். இவர் அங்கிருந்த மலைப் பகுதிகளில் தமது மூன்று மனைவியருடன் வசித்துவந்தார். கத்தோலிக்க விசுவாசம்பற்றின தகவல்களை வின்சென்ட் மூலம் அறிந்துகொண்ட அவரது இரண்டாம் மனைவி, அவரை மீண்டும் கிறிஸ்தவ மறையை தழுவ வற்புறுத்தினார். இதனால் மனம் மாறிய அவர்கள் அனைவரும் பத்து மாதங்கள் பொறுத்திருந்தனர். பின்னர் சிறு படகு ஒன்றின் மூலம் அங்கிருந்து தப்பித்து, ஃபிரான்ஸ் நாட்டின் ஐகேஸ் மோர்டேஸ் (Aigues-Mortes) பகுதியில் 1607ம் ஆண்டு, ஜூன் மாதம், 28ம் தேதி இறங்கினார்கள்.

 

ஃபிரான்சுக்கு திரும்பியதும், ரோம் சென்ற வின்சென்ட், தனது படிப்பைத் தொடர்ந்தார். 1609ம் ஆண்டு, ஒரு பணி நிமித்தம் அரசர் 4ம் ஹென்றியிடம் ஃபிரான்ஸ் அனுப்பப்பட்டார். பாரிஸ் நகருக்குத் திரும்பி வந்த பிறகு வின்சென்ட் தே பவுல் பற்பல பணிகளை செய்யத் தொடங்கினார். அனாதைகள், கைவிடப்பட்ட முதியவர்கள் போன்றோரைப் பராமரிப்பதற்காக அனாதை இல்லங்களைத் தொடங்கினார். அதோடு

மட்டுமல்லாமல், நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். ஒப்புரவு அருசாதனங்களை வழங்கி மக்களை ஆன்மீக பாதையில் வழிநடத்திச் சென்றார். அவர் ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்க்கச் செல்வார். அப்போது பாதையோரங்களில் கிடக்கும் அனாதைக் குழந்தைகளைத் தூக்கி வந்து, அவர்களை தன்னுடைய அனாதை இல்லங்களில் சேர்த்து பராமரித்து வந்தார். 

 

அங்கு அவர் மார்கரெட் டி வலோயிசின் குருவாக பணியாற்றினார். சிறிது காலம் க்ளிச்சியின் பங்கு குருவாக இருந்துவிட்டு, 1612ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற கான்டி குடும்பத்துக்கு குருவாக பணியாற்றினார். இவர் டி கான்டி சீமாட்டியின் ஒப்புரவாளராகவும், ஆன்ம இயக்குனராகவும் இருந்தார்; மேலும் அந்த சீமாட்டியின் உதவியோடு, பண்ணையில் பணிபுரிந்த விவசாயிகளுக்கு இயேசுவைப் பற்றி போதித்தார்.

 

1622ம் ஆண்டு, வின்சென்ட் தே பவுல் போர் கப்பலில் குருவாக நியமிக்கப்பட்டார்; அங்கு இவர் போர் கைதிகளுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

 

1625ம் ஆண்டு, வின்சென்ட் மறைப்பணி சபை என்ற துறவற சபையை நிறுவினர். மறைபரப்பு பணியை மேற்கொள்ளும் இச்சபையின் குருக்கள் பொதுவாக வின்சென்டியர்கள் அல்லது லாசரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1626 ஆம் ஆண்டில் ஒருநாள், வின்சென்ட் தே பவுல் தான் செய்துவரும் பணிகளைத் தனி ஒரு மனிதராகச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மூன்று பேர் கொண்ட சபையை ஏற்படுத்தி அதற்கு நற்செய்தி அறிவிப்பு சபை (Congregation of the Mission (CM) என்று பெயரிட்டார். பின்னர் அந்த சபையின் வழியாக பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் தூய பிரான்சிஸ் சலேசியாரின்

நட்பு கிடைத்தது. அந்த நட்பு மிகவும் ஆழமாக வளர்ந்தது. எந்தளவுக்கு என்றால் பிரான்சிஸ் சலேசியாரின் இறப்புக்குப் பிறகு அவர் நடத்தி வந்த Sisters of Visitation என்ற சபையை இவர் தான் தலைமை ஏற்று நடத்தும் நிலை ஏற்பட்டது. 

 

அதன்பிறகு வின்சென்ட் தே பவுல் பெண்களுக்கு என்று ‘அறப்பணி மகளிர் சபை’யும் ஆண்களுக்கு என்று ‘ஏழைகளின் பணியாளர் சபை’யையும் தோற்றுவித்தார். இச்சபைகளின் மூலமாக வின்சென்ட் தே பவுல் ஆற்றிய பணிகள் ஏராளம். 1633ல் லூயிஸ் தே மரிலாக்கின் வழிகாட்டுதலோடு, பிறரன்பு புதல்விகள் என்ற பெண்களுக்கான துறவற சபையை இவர் நிறுவினார். இவர் ஜான்செனிச பேதகத்திற்கு எதிராகவும் போராடினார். (பேதகம் என்பதற்கு தவறான கிறிஸ்தவ போதனை என்பது பொருள்).

 

எப்போதும் சிலுவையைத் தன்னுடைய கையில் ஏந்தியிருக்கும் வின்சென்ட் தே பவுல், இந்த சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் துணையால் எப்படிப்பட்ட பணிகளையும் செய்ய முடியும் என்று குறிப்பிடுவார்.  

 

பிறரன்பு பணிகளில் அதிக ஆர்வம் காட்டிய வின்சென்ட் தே பவுல், 1660ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி மரணம் அடைந்தார். வின்சென்ட் தே பவுலின் கருணை, பணிவு, தாராள குணம் ஆகியவை அவருக்கு புகழைத் தேடித் தந்திருக்கின்றன. 1737 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் மக்கள்பணியே இறைப்பணி வின்சென்ட் தே பவுல் மக்களுக்குப் பணிசெய்வதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டார். குறிப்பாக ஏழை எளியவர், அனாதைகள், கைவிடப்பட்டோர் இவர்களுடைய வாழ்வு ஏற்றம் காண தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.

1648 ஆம் ஆண்டிலிருந்து 1653 ஆம் வரை பிரான்சில் நடைபெற்ற உட்நாட்டுக் கலவரத்தில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டார்கள். ஏராளமான பேர் தங்களுடைய வீடுகளையும், உறவுகளையும் இழந்தது தவித்தார்கள். அத்தகைய தருணத்தில் மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை வின்சென்ட் தே பவுலே பேருதவியாக இருந்தார். அவரால் பயன்பற்றவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது. இது போன்று பல்வேறு பணிகளைச் செய்தது வந்த வின்சென்ட் தே பவுல் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம், “உயர்ந்த நோக்கத்துடன் சிந்தித்துச் செயல்படுவார்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டர்கள்’ என்பதாகும். அவர் உயர்ந்த நோக்கத்துடன் சிந்தித்துச் செயல்பட்டார் அதனால் அவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டார். நாமும் தூய வின்சென்ட் தே பவுலைப் போன்று ஏழைகளின் வாழ்வை உயர்த்தவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு சிந்தித்துச் செயல்படும்போது கடவுளால் ஆசிர்பெற்ற மக்களாக மாறமுடியும் என்பது உறுதி.

 

 இறைஅன்பினால் ஆன்மீகத்தின் ஆழம் சென்று ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணித்தவர், நெற்றியின் வியர்வையாலும் கரத்தின் பலத்தாலும் இறைவனை  அன்பு செய்வோம் என்று முழங்கியவர். அன்பு பணிகளுக்கு புது அர்த்தத்தை கொடுத்து ஏழைகளின் தந்தை எனவும், சேவைப் பணிகளின், இறக்கச் செயல்களின் பாதுகாவலர் எனவும் பல பட்டங்கள் பெற்றவர் . இப்புனிதரைப்போன்று நாமமும் நம் வாழ்வில் உயர்ந்த நோக்குடன் சிந்தித்து செயல்பட இறைவனிடம் வேண்டுவோம்.