✠புனித அன்னை தெரேசா ✠

( St. Mother Teresa of Calcutta )

பிறப்பு : ஆகஸ்ட் 26, 1910

ஸ்கோப்ஜே, கொசோவோ,

இறப்பு : செப்டம்பர் 5, 1997 (அகவை 87)

கொல்கத்தா, இந்தியா

சமயம் : உரோமன் கத்தோலிக்கம்

துறவற சபை : லொரெட்டோ சகோதரிகள் ( 1928 – 1950 )

பிறர் அன்பின் பணியாளர் சபை (1950–1997)

அருளாளர் பட்டம் : 19-10- 2003  திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

புனிதர் பட்டம் : 4 செப்டம்பர் 2016, திருத்தந்தை ஃபிரான்சிஸ்

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 5

பாதுகாவல்: உலக இளைஞர் தினம் கருணை  இல்லங்கள்

ஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம்புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய குடும்பமாய் பாவித்து, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன்னுடைய இறுதி நாள்வரை ஒரு பெண் போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் என்றால் அது "அன்னை தெரசா"வை தவிர வேறு யாராக இருக்க முடியும்.

அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இந்திய குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியுமான அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் இயற்பெயர், ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்).

 

ஆக்னஸ் கோன்ஜாவின் தந்தையின் மரணத்தின் பிறகு, அவரது தாயார் அவரை நல்லதொரு உரோமன் கத்தோலிக்கராக வளர்த்தார். தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, "லொரேட்டோ சகோதரிகளின்" சபையில் மறைப் பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை.

 

1929ம் ஆண்டு அவர் இந்தியா வந்தார். 1948ம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தார். லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்ய ஆரம்பித்தார்.

 

 

 

தெரேசா தமது நாட்குறிப்பில், தமது ஆரம்ப காலம், துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

 

1950 அக்டோபர் 7ம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. அச்சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழுநோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்ற-வர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்."

கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று 6000க்கும் மேலான அருட்சகோதரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டுமையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும்

பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.

இவர், சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.

1950ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் "பிறர் அன்பின் பணியாளர்" என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.  நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் சேவைசெய்து தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும், பின்னர் வெளிநாடுகளுக்கும் "பிறர் அன்பின் பணியாளர் சபை"யினை நிறுவினார்.

இவர் 1979ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

அன்னை தெரேசாவின் "பிறர் அன்பின் பணியாளர் சபை", அவரது இறப்பின்போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களுடன் இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

அன்னை அவர்களைப்பற்றி எழுதுவதானால், நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.

 

அன்னை அவர்களின் கடைசிக்காலம், மிகவும் கடினமானதாக இருந்தது. இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். ஏப்ரல் 1996ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார். இதய அறுவைசிகிச்சைக்குட்பட்டபோதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது.  செப்டம்பர் 5, 1997ல் மரணமடைந்தார்.

 

செப்டம்பர் 1997ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்." என்றார். தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவுவரை நீடித்தது.

அக்டோபர் 19, 2003ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அன்னை தெரேசாவிற்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.

4 செப்டம்பர் 2016ல், அன்னை தெரெசாவுக்கு திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள் புனிதராக அருட்பொழிவு செய்தார்.