✠ முத்திபேறு பெற்ற: மிக்காயேல் ரூவா ✠ ( Bl. Michael Rua )

இத்தாலிய கத்தோலிக்க குரு 

சலேசியன் சபையின் இணை நிறுவனர் 

பிறப்பு : 9 ஜூன் 1837 தூரின், சர்டினியா அரசு  (Turin, Kingdom of Sardinia)

இறப்பு : 6 ஏப்ரல் 1910 (அகவை 72) தூரின், இத்தாலி (Turin, Italy)

முத்திபேறு பட்டம்: 29 அக்டோபர் 1972 திருத்தந்தை ஆறாம் பவுல்

நினைவுத் திருநாள் : ஏப்ரல் 6

மிக்காயேல் ரூவா, ஒரு இத்தாலிய கத்தோலிக்க குருவும் புனித ஜான் போஸ்கோவின் மாணவரும் ஆவார்.

1837ம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள தூரின் (Turin) என்ற இடத்தில் ஜூன் 9ம் நாள் பிறந்த இவர், ஒன்பது சகோதாரர்களுள் இளையவராவார்.

ஆயுத தொழிற்சாலை ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றிய 'ஜியோவன்னி' (Giovanni Battista) இவரது தந்தை ஆவார். 'ஜியோவன்னா மரிய ரூவா' (Giovanna Maria Rua) இவரது தாயார் ஆவார்.

2 ஆகஸ்ட் 1845ல் இவரது தந்தையார் இறந்ததும் இவரது தாய்க்கு அதே ஆயுத தொழிற்சாலையிலேயே பணி கிடைத்தது. விதவைத் தாயாருடன் வாழ்க்கையைத் தொடங்கிய மிக்காயேல், 'கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களின் சகோதரர்கள்' (Brothers of the Christian Schools) நடத்திய பள்ளிக்கூடம் ஒன்றில் தமது ஆரம்பக் கல்வியை கற்றார்.

தமது 15ம் வயதில் தனது படிப்புகளை முடித்துவிட்டு, புனித தொன்போஸ்கோ அவர்கள் குருவாக இருந்தபோது, அவரால் தொடங்கப்பட்ட இளைஞரணியில் சேர்ந்தார். அப்போது மிக்காயேல் ரூவாவும், தொன்போஸ்கோவும் நண்பர்கள் ஆனார்கள்.

1861ம் ஆண்டு தொன் ஜான் போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையில் இளைஞர்களுக்குப் பணியாற்றும் பணியில் ஈடுபட்டார். புனித சலேசிய சபை உருவாவதற்கு தொன்போஸ்கோவிற்கு பெருமளவில் உதவிசெய்தார். அப்போது இளைஞர்களுக்கு எல்லாவிதங்களிலும் தாயாக இருந்து உதவிசெய்த தொன்போஸ்கோவின் அம்மா இறந்ததால், இளைஞர்களுக்கு தாய் இல்லை என்ற எண்ணத்தைப் போக்க ரூவா தன் தாயை, இளைஞர்களுக்கு தாயாக இருந்து பணிபுரிய அர்ப்பணித்தார்.

இந்த இளைஞரணியானது திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை உணர்ந்து, தொன் போஸ்கோவிற்கு துணையாக, தனது 22ம் வயதில் 1860ம் ஆண்டு ஜூலை 29ம் நாளன்று குருப்பட்டம் பெற்று இளைஞர்களுக்கு ஞான மேய்ப்பராக பணியாற்றினார். அதன்பிறகு தொன் போஸ்கோவிடமிருந்து விலகி சென்று 1885ல் பார்சிலோனாவில் இளைஞர்களுக்கான சீடத்துவத்தை தொடங்கினார். தமது 26ம் வயதில் அழகு துணை வால்டோக்கோ (Mirabello) என்ற குழுவை தொடங்கி, அதற்கு முதல்வராக

பொறுப்பேற்றார். பின்பு கத்தோலிக்க அவைகளின் மேலாளராக பணியாற்றினார். 1865ல் போஸ்கோ அவர்களால் சலேசிய சபைகளுக்கு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். பிறகு 1872ம் ஆண்டு கிறிஸ்தவர்களின் சகாயமாதா சபையை தொடங்கினார். (Daughter of Mary Help of Christians)

1888ம் ஆண்டு தொன்போஸ்கோ இறந்தவுடன் இச்சபையை வழிநடத்தும் பொறுப்பை மிக்காயேல் ரூவா ஏற்றுக்கொண்டார். பின்பு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களால் இச்சபை சலேசிய சபையாக அறிவிக்கப்பட்டது. பின்பு உலகம் முழுவதிலும் இச்சபை தொடங்கப்பட்டது.

பிறகு தனது 73ம் வயதில் 1910ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் நாள் இத்தாலியிலுள்ள தூரின் என்ற நகரில் இறந்தார். தொன்போஸ்கோ இறந்தபோது 57 ஆக இருந்த சபைக் குழுமங்களை (communities) ரூவா 345 சபைக் குழுமங்களாக பெருக்கினார். 773 ஆக இருந்த சலேசியர்களை 4000 ஆக பெருக்கினார். 6 ஆக இருந்த சபை மாநிலங்களை 34 மாநிலங்களாக (Provincialate) 33 உலக நாடுகளில் தொடங்கி வைத்தார்.

இவர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் நாள் முத்திபேறு பட்டம் (Blessed) கொடுக்கப்பட்டது. இன்று வரை "Don" என்ற பெயரிலேயேதான் சலேசிய குழுமங்கள் அழைக்கப்படுகின்றது.

செபம் :

உமது சிறகுகளின் நிழலில் வைத்து எம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் எம் அன்பு இறைவா! எங்களால் இயன்றவரை ஓர் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்க, எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்து வழிநடத்தியருளும். ஆமென் .