✠ புனித பெஞ்சமின் ✠

( St. Benjamin )

திருத்தொண்டர் மற்றும் மறை சாட்சி - (Deacon and Martyr)

பிறப்பு : கி.பி. 329 பாரசீகம் ( Persia )

இறப்பு : கி.பி. c. 424 பாரசீகம் ( Persia )

நினைவுத் திருநாள் : கத்தோலிக்க திருச்சபை - மார்ச் 31  பாதுகாவல் : அருட்பணியாளர்

புனித பெஞ்சமின், 424ல் துன்புறுத்தப்பட்டு மரித்த திருத்தொண்டரும் மறை சாட்சியுமாவார். நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரசீகத்தை ஆண்டு 421ல் மரித்த அரசன் முதலாம் இஸ்டேகேர்ட் (Isdegerd I) முதல், அதன்பின்னர் அவனது மகனும் அரசனுமான ஐந்தாம் வாரனேஸ் (King Varanes V) ஆகியோரின் ஆட்சி காலத்தில், சுமார் நாற்பது ஆண்டு காலம் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்களின் கோவில்கள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். 421ம் ஆண்டு அரசன் முதலாம் இஸ்டேகேர்ட் இறந்துவிடவே,

அவருடைய மகன் ஐந்தாம் வாரனேஸ் அரசனானான். தந்தைப்போல கிறிஸ்தவ துன்புறுத்தலை இவனும் தொடர்ந்தான். சுமார் நாற்பது ஆண்டு காலம் இந்த கொடிய கிறிஸ்தவ துன்புறுத்தல் நடந்தது. இவனது காலத்தில் துன்புறுத்தல் மிகவும் கொடூரமாகவும் சித்திரவதைகளாகவும் இருந்தன.

துன்புறுத்தப்பட்டவர்களில் ஒருவர் திருத்தொண்டர் பெஞ்சமின் ஆவார். கிறிஸ்தவ விசுவாசம் காரணமாக ஒரு வருட காலம் இவரை சிறையில் அடைத்தார்கள்.

"கிறிஸ்தவ வேதத்தைப் பற்றி பேசக்கூடாது; மறை போதனை கூடாது" என்ற நிபந்தனைமீது கிழக்கத்திய உரோமப் பேரரசர் இரண்டாம் தியோடோசியஸ் (Eastern Roman Emperor Theodosius II), தமது தூதுவர் ஒருவர் மூலம் இவருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

இவரோ "கிறிஸ்துவைப் பற்றி பேசுவது எனது கடமை, நான் மெளனமாக இருக்க முடியாது" என்று கூறினார். இவரைப் பிடித்து கருணையற்ற வகையிலும், மிகவும் கொடிய வகையிலும் வதைத்தனர். இவரது கைகள் மற்றும் கால்களின் நகக்கண்களிலும் உடலின் மென்மையான பாகங்களிலும் கூறிய ஊசியால் குத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் இத்தகைய சித்திரவதை தொடரவே, வேதனை தாங்க இயலாத பெஞ்சமின் மரணமடைந்தார்.

செபம் :

இரக்கமிக்க ஆண்டவரே, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் அழைப்புக்கு ஏற்ப நல்வாழ்வு வாழ கிருபை செய்யும். திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்து மரிக்க வரம் தாரும். உம் மக்களுக்காக நாங்கள் எம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் நல்லுள்ளம் தாரும்.  ஆமென்.