ஜூன் மாதம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது:

தாழ்ச்சியும், தயாளமும் நிறைந்த இதயமே! அன்புத் தீ சுடர்விட்டு எரியும் இதயமே! இதயங்களின் அரசும், மையமுமான இதயமே! ஆறுதல் அனைத்தின் ஊற்றான இதயமே! எங்கள் உயிரும் வாழ்வுமான இயேசுவின் திரு இதயமே!

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

ஆமென்.

இயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்:

இயேசுவின் திருஇதயமே எங்கள் குடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். நன்றி கூறுகின்றோம். எங்களை ஆசீர்வதியும். எப்பொழுதும் இறைப்பிரசன்னத்தை உணர்ந்து வாழ வரம் தாரும். பலவீனர்களுக்கு பலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் தந்தருளும். விதவைகளுக்கும், அநாதைபிள்ளைகளுக்கும் நாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும். சிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில் இருக்கின்றவர்களை ஆசீர்வதியும். உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும், நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும், அறிவையும், தந்தருளும். மரண தருவாயில் இருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும். ஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்த்தருளும். எங்கள் அனைவருக்கும் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும். ஆமென்.

 

அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:

தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு, ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக! நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

காணிக்கை ஜெபம்:

இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.

இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.

 

இரவுச்  செபம்:

எல்லாம் வல்ல இறைவா! அனைத்திற்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே!  உம்மை ஆராதிக்கிறேன்! என்னை உண்டாக்கி, கிறிஸ்தவனாக்கி உம் ஒரே திருமகனின் இரத்ததால் என்னை மீட்டதோடு, இந்த இரவு நேரத்தில் என்னை காப்பாற்றியதற்கு உமக்கு நன்றி கூறுகிறேன்!

இன்று பாவத்தில் என்னை காப்பாற்றி எல்லா தீங்கிலிருந்தும் மீட்டருள உம்மை மன்றாடுகின்றேன். ஆமென்!

 

இயேசுவின் திருஇருதய மன்றாட்டு மாலை:

ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும் விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா தூய ஆவியாகிய இறைவா என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய இயேசுவின் திருஇதயமே புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திருஇதயமே தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திருஇதயமே

அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திருஇதயமே இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திருஇதயமே அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திருஇதயமே இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான இயேசுவின் திருஇதயமே அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான இயேசுவின் திருஇதயமே தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற இயேசுவின் திருஇதயமே எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திருஇதயமே இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின் திருஇதயமே ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திருஇதயமே இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும் இயேசுவின் திருஇதயமே உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் இயேசுவின் திருஇதயமே நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திருஇதயமே உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திருஇதயமே

வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திருஇதயமே மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான இயேசுவின் திருஇதயமே எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே – 3 எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் எங்களைத் தயை செய்து மீட்டருளும் இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

மன்றாடுவோமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயைகூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம்

திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

 

இயேசுநாதருடைய திருஇதயத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம் (புனித மார்கரீத்து மரியா)

இயேசு நாதருடைய திரு இதயத்துக்கு எளியேன் (…பெயர்) என்னையே கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.

 

இனிய திரு இதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயிரின் ஒரே காவல். என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ, தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமே! என் பலவீனத்தை எண்;ணி அஞ்சும் அதே வேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.

எனவே, உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம்மைவிட்டுப் பரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் - ஆமென்.