என் கற்பாறையாகிய இறைவனிடம் ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன். ‛உன் கடவுள் எங்கே?’ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது. என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

 திருப்பாடல்கள் 42: 9-11

  

 ஜூன் 01, இப்புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் பெருமளவான மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு வழங்கிய முதுமை பற்றிய தன் 12வது மறைக்கல்விப் பகுதியில், கடவுளே, என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும் (தி.பா.71,9) என்ற திருப்பாடல் ஆசிரியரின் வேண்டுதலை மையப்படுத்தி தன் சிந்தனைகளை எடுத்தியம்பினார், திருத்தந்தை.

 

திருப்பலி  வாசகங்கள் 

23.06.2019 - கிறிஸ்துவின்திருவுடல்திருஇரத்தம் பெருவிழா 

முதலாம்  வாசகம்

 

அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம்                                                                  14:18-20

அந்நாள்களில்

            சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ` உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, ``விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!'' என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

இறைவா உமக்கு நன்றி

 

 


பதிலுரைப் பாடல்                                                                     திபா 110: 1.2.3.4

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி, கிறிஸ்து அப்பமும் இரசமும் ஒப்புக்கொடுத்தார்

அல்லது:(4a):  மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே

1       ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக்  கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.                                                                                    ....பல்லவி

2       வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!                                                                                                                                 .....பல்லவி

3       நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். ....பல்லவி

4       `மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.                                                                          ...பல்லவி

 

இரண்டாம் வாசகம்

நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்                         11: 23-26

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, ``இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார்.

அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ``இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'' என்றார்.ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

இறைவா உமக்கு நன்றி

 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி             யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

 

நற்செய்தி வாசகம்

அனைவரும் வயிறார உண்டனர்.

✠        லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்                           9: 11b-17

அக்காலத்தில்

இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ``இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'' என்றனர்.

இயேசு அவர்களிடம், ``நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்றார். அவர்கள், ``எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்'' என்றார்கள். ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ``இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்'' என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கிறிஸ்துவே உமக்கு புகழ்.

 

 

 

------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

தவக்காலம் 3ம் ஞாயிறு (24-03-2019)

 

முதலாம்  வாசகம்

 

விடுதலைப் பயண நூலிலிருந்து  வாசகம்                           (வி ப. 3:1-8a, 13-15)

மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. “ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார்.

 

அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். “மோசே, மோசே” என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார். அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார். மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.

 

அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு — அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு — அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.

 

மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார்.

 

மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார். கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்” என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

 

 • ஆண்டவரின் அருள்வாக்கு -  இறைவனுக்கு நன்றி

 

 

 

 

தவக்காலம் 3ம் ஞாயிறு (24-03-2019)

 இரண்டாம்  வாசகம்

 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்                                                                        (1  கொரி. 10:1-6, 10-12)

 

 

சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

 

அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.

 

அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

 

 • ஆண்டவரின் அருள்வாக்கு -  இறைவனுக்கு நன்றி

 

 

 

 

 

தவக்காலம் 3ம் ஞாயிறு (24-03-2019)

 நற்செய்தி வாசகம்

 

   

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்              (லூக்கா 13:1-9)

 

அக்காலத்தில், சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.

 

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

 

- கிறிஸ்து  வழங்கும்   நற்செய்தி - கிறிஸ்துவே,  உமக்குப்  புகழ்

 

------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

ருடப் பிறப்பு - அன்னை மரியாள் இறைவனின் தாய்  (1-1-2019)

 

முதல் வாசகம்

இஸ்ரயேல் மக்கள் மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும் போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம் 

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6 : 22 - 27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி கூற வேண்டிய முறை: ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திரு முகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!''

இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

 

 • ஆண்டவரின் அருள்வாக்கு -  இறைவனுக்கு நன்றி

 

   

பதிலுரைப் பாடல்

 பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!


கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர்.                                                                                                                  (பல்லவி)


வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.                                                                 (பல்லவி)

 

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக.                                                                                                                                             (பல்லவி)

 

  

இரண்டாம்  வாசகம்

 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4 - 7

சகோசகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறிய போது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச் சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி `அப்பா, தந்தையே,' எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள் தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப் பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

 • ஆண்டவரின் அருள்வாக்கு
 • இறைவனுக்கு நன்றி

 

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்      

 அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

 

 

நற்செய்தி வாசகம்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக

குரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே!

 

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்  (லூக் 2 : 16 - 21)

 

அக்காலத்தில் அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப் பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

 

- கிறிஸ்து  வழங்கும்   நற்செய்தி - கிறிஸ்துவே,  உமக்குப்  புகழ்

------------------------------------------------------------------------------------------------------

 

திருக்குடும்பப்  பெருவிழா       (30.12.2018)

 

முதல் வாசகம்

 

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன் 

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 1:20-22.24-28

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்'' என்று சொல்லி, அவர் அவனுக்குச் `சாமுவேல்' என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள்.

ஆனால், அன்னா செல்லவில்லை.அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்'' என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார்.

அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.'' அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

 • ஆண்டவரின் அருள்வாக்கு இறைவனுக்கு நன்றி

 

 

பதிலுரைப் பாடல்

 

பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்

பதிலுரைப்பாடல் திபா: 84: 1-2. 4-5. 8-9


படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.                  (பல்லவி)


உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்: அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே-யிருப்பார்கள். உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்: அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.                                                                                                     (பல்லவி)

 

படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே! எனக்குச் செவிசாய்த்தருளும்! எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கணிவுடன் பாரும்!                                                                                                                                                           (பல்லவி)

 

 இரண்டாம்  வாசகம்

“நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.“

 யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-2.21-24

அன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்-காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை.

கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்தி-ருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

 • ஆண்டவரின் அருள்வாக்கு
 • இறைவனுக்கு நன்றி

 

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

“மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும்”      

 அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

 

 

நற்செய்தி வாசகம்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக

குரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே!

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்  (லூக் 2 : 41 - 52)

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.

ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களி-டையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.

அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டி-ருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

- கிறிஸ்து  வழங்கும்   நற்செய்தி - கிறிஸ்துவே,  உமக்குப்  புகழ்

 

 

--------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

கிறிஸ்து பிறப்புப்  பெருவிழா  -  (25-12-2018)

 

முதல் வாசகம்

 

ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9 : 2 - 4, 6 - 7

 

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சி-யுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்-கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்.  

அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப் படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

 • ஆண்டவரின் அருள்வாக்கு
 • இறைவனுக்கு நன்றி

 

 

பதிலுரைப் பாடல்

பல்லவி:  இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.


ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்.                                                          (பல்லவி)


அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.                               (பல்லவி)

 

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.                                                    (பல்லவி)

 

ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.                                                                                 (பல்லவி)

 

 

 

 இரண்டாம்  வாசகம்

 

மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது

 

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்     2 : 11 - 14

 

சகோதரர் சகோதரிகளே, ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப் பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப் பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர் நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம்.

நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறி கேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப் படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். நீ இவை பற்றிப் பேசு; முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே.

 • ஆண்டவரின் அருள்வாக்கு
 • இறைவனுக்கு நன்றி

 

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செ-ய்தியை உங்களுக்கு அறிவிக்-கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் "    

 அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

 

நற்செய்தி வாசகம்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக

குரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே!

 

இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்“  (லூக் 2 : 1 - 14)

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப் பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

தாவீதின் வழி மரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயா-விலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம்கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள் முன் வந்துநின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.  இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து," உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்தது.

- கிறிஸ்து  வழங்கும்   நற்செய்தி

 • கிறிஸ்துவே, உமக்குப்  புகழ்

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

திருப்பலி  வாசகங்கள்

திருவருகைக்காலம் - நான்காம் ஞாயிறு - (23-12-2018)

 

 

முதல் வாசகம்

 

இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5 : 2 - 5

ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப் படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.

ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார். 

 

 • ஆண்டவரின் அருள்வாக்கு
 • இறைவனுக்கு நன்றி

 

 

 

பதிலுரைப் பாடல்

பல்லவி:  கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.


இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்!                                                                                               (பல்லவி)


படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!                                                                                             (பல்லவி)

 

உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.                (பல்லவி)

 

 

  

இரண்டாம்  வாசகம்

 

மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10 :5-10

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப் பட்டுள்ளது'‘ என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர், உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்''  என்கிறார்.

பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால் தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப் பட்டிருக்கிறோம்.

 

 • ஆண்டவரின் அருள்வாக்கு
 • இறைவனுக்கு நன்றி

 

 

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

 "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்.“      

 அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

 

 

 

நற்செய்தி வாசகம்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக

குரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்

எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே!

 

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ?

(லூக் 1 :39-45)

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்ட பொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது எலிசபெத்து உரத்த குரலில்,  பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

 

- கிறிஸ்து  வழங்கும்   நற்செய்தி

 • கிறிஸ்துவே, உமக்குப்  புகழ்

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

  

திருப்பலி  வாசகங்கள்

திருவருகைக்காலம்   -    முதலாம் ஞாயிறு -  (2-12-2018)

முதல் வாசகம்

“ தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் “ 

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33 : 14 - 16 

திருப்பலிச்  சடங்குமுறை


தொடக்கச் சடங்கு

குரு: தந்தை,  மகன், தூய  ஆவியாரின்  பெயராலே,

எல்: ஆமென்.

குரு: நம்  ஆண்டவராகிய  இயேசு   கிறிஸ்துவின்   அருளும்   கடவுளின்   அன்பும்   தூய   ஆவியாரின்   நட்புறவும்   உங்கள்   அனைவரோடும்  இருப்பதாக.

Go to top
Template by JoomlaShine