அறிவுரைக்குச்  செவிகொடு,  கண்டிப்பை  ஏற்றுக்கொள்;  பின்வரும்  காலமெல்லாம்  ஞானமுள்ளவனாய்  வாழ்வாய்.

மனிதர்  மனத்தில்  எழும்  எண்ணங்கள்  ஏராளம்;  ஆனால்  ஆண்டவரது  திட்டமே  நிலைத்துநிற்கும்.

நற்பண்பாளர்  வாக்குப்  பிறழாமையை  நாடுவர்.  பொய்யராயிருப்பதைவிட  ஏழையாயிருப்பதே  மேல். 

ஆண்டவருக்கு  அஞ்சி  நடந்தால்  ஆயுள்  நீடிக்கும்;  அவ்வாறு  நடப்பவருக்கு  மனநிறைவு  கிட்டும்;  தீங்கும்  அவரை  அணுகாது. 

சோம்பேறி  உண்கலத்தில்  கையை  இடுவார்;  ஆனால்  அதை  வாய்க்குக்  கொண்டுபோகச்  சோம்பலடைவார்.

 
 - நீதிமொழிகள் 19:20-24

லெபனாண் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி அனர்த்தம்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

140 மேற்பட்டோர் கொல்லப்பட ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நகரின் பெரும்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இல்லிடமிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டடோருக்கு உதவிசெய்ய கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களும் நமது பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கும் முனைந்து நிற்கின்றன.

மேற்படி மனிதநேயப்பணிக்கு 'பெய்ரூட் 2020"  என குறிக்கப்பட்ட கோயில் உண்டியலில் பங்களிப்புச் செய்யலாம் அல்லது 617931 என்ற Vipps இலக்கத்திற்கு பணம் செலுத்தலாம்.

சேகரிக்கப்படும் மொத்த நிதியுதவியும் Caritas மேற்பார்வையில் ஜேர்மன் ‘Kirke in Not’ அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பப்படுகின்றது.

Bergen, 7. aug 2020

Alois Arnstein Brodersen Can.Reg., Sogneprest

அருட்டந்தை அன்ரன் றஞ்சிற் பிள்ளைநாயகம்

கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர்

கத்தோலிக்க திரு அவையின் தலைமை ஆயர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கை, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்டிரு அன்ரன் றஞ்சிற் பிள்ளைநாயகம் அவர்களை கடந்த 13-07-2020 அன்று நியமித்தார்.

1966ம் ஆண்டு புரட்டாதி 23ம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்த அன்ரன் றஞ்சிற் அவர்கள் தம் ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கொழும்பிலும், உயர்கல்வியை யாழ். சம்பத்தரிசியார் கல்லூரியிலும், விஞ்ஞானப் பட்டப்படிப்பை யாழ் பல்கலைக் கழகத்திலும் நிறைவுசெய்தார். 

தாயகத் திருஅவை

1505ம் ஆண்டில் போர்துக்கீசரின் வருகையோடு இலங்கைத் தீவில் கத்தோலிக்கம் நிலைகொள்ளத் தொடங்கியது. 1544ல் யாழ் மன்னன் தன் ஆளுகைக்குற்பட்ட பகுதியில் கிறிஸ்தவம் வேரூன்றுவதை வெறுத்தான். மன்னார்ப் பகுதியில் புதிதாக கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்ட சுமார் 600 பேரை வாளுக்கிரையாக்கி கத்தோலிக்கத்தை அழிக்க முனைந்தான். ஆனால் மறைசாட்சியரின் இரத்தம் திருஅவையின் வித்தாகியது. 

17ம் நூற்றாண்டின் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் (1640-1796) கத்தோலிக்க திருச்சபை மீண்டும் பெரும் நெருக்கடிக்குள்ளானது. ஒல்லாந்து பிரிவினைவாத அதிகாரிகளினால் கத்தோலிக்க குருக்களில் சிலர் துன்புறுத்தப்பட்டனர் ஏனையோர் துரத்தியடிக்கப்பட்டனர். கத்தோலிக்க குருக்களின்மையால் களையிழந்த தளத்திருஅவையைக் காப்பதில் (புனித) ஜோசப் வாஸ் என்னும் இந்திய குருவின் வருகை (1686) பெரும்பங்காற்றியது.

பின்பு ஆங்கிலேயார் காலத்தில் (1815-1948)கிடைக்கப்பெற்றஎல்லா மதங்களுக்குமான மதச்சுதந்திரத்தோடு இலங்கைத்தீவில் பணியாற்ற வந்திறங்கிய (1848) அமல மரித்தியாகி (omi) குருக்களின் காலத்தோடு இலங்கைத் திருஅவை பெரும்வளர்ச்சி காணஆரம்பித்தது.


தற்போது 12 மறைமாவட்டங்களாப் பிரிக்கப்பட்டு இலங்கைத் திருஅவை தீவு முழுவதிலும் பணியாற்றி வருகிறது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 6.1 கத்தோலிக்கரைக் கொண்ட (121194 கத்தோலிக்கர் – 2012ன் சனத்தொகை மதிப்பின்படி) இலங்கைத் திருஅவையில் யாழ்ப்பாண மறைமாவட்டம், திருகோணமலை மறைமாவட்டம், மன்னார் மறைமாவட்டம், மட்டக்களப்பு மறைமாவட்டம் போன்றன தமிழ் கத்தோலிகர் செறிந்துவாழும் இடங்களாக இருக்கின்றன. கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் ஆயராக கர்தினால் அதிமேன்மைதங்கிய மல்கம் கார்டினல் றஞ்சித் அவர்கள் பணியாற்றிவருகிறார்கள்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் ஆதிவந்தனைக்குரிய ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆயத்துவத்தில் 60 பங்குகளில் சுமார் 253000 கத்தோலிக்கருக்குப் பணியாற்ற 172 குருக்களும் 96 ஆண்துறவிகளும்  251 பெண்துறவிகளும் இறைபணிபுரிகிறார்கள். அதுபோல திருகோணமலை மறைமாவட்டத்தில் ஆதிவந்தனைக்குரிய ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகையின் ஆயத்துவத்தில் 13 பங்குகளில் சுமார் 25000 கத்தோலிக்கருக்குப் பணியாற்ற 27 குருக்களும் 19 ஆண்துறவிகளும் 30 பெண்துறவிகளும் இறைபணிபுரிகிறார்கள். அடுத்ததாக மன்னார் மறைமாவட்டத்தில் ஆதிவந்தனைக்குரிய ஆயர் இம்மானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகையின் ஆயத்துவத்தில் 39 பங்குகளில் சுமார் 85000 கத்தோலிக்கருக்குப் பணியாற்ற 100 குருக்களும் 54 ஆண்துறவிகளும் 188 பெண்துறவிகளும் இறைபணிபுரிகிறார்கள். மேலும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் ஆதிவந்தனைக்குரிய ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் ஆயத்துவத்தில் 25 பங்குகளில் சுமார் 42000 கத்தோலிக்கருக்குப் பணியாற்ற 48 குருக்களும் 28 ஆண்துறவிகளும் 67 பெண்துறவிகளும் இறைபணிபுரிகிறார்கள்.

இலங்கையின் அப்போதலர் என அழைக்கப்படும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் காலத்திற்கு முன்பாகவே ஒல்லாந்து பிரிவினைவாதிகளின் நெருக்கடிகளுக்குப் பயந்து மாதோட்டக் காட்டுப்பகுதியில் தஞ்சம்கொண்ட மாந்தைப்பகுதி கத்தோலிக்கர் தம்மோடு எடுத்துச்சென்ற அன்னைமரியின் திருச்சுருபத்தை மடு என்னும் காட்டுப்குதியில் சிறுகுடிசையொன்றில் ஸ்தாபித்துக்கொண்டனர் (1670). இதுவே இன்று இலங்கைத்தீவின் கத்தோலிக்க அடையாளமென எழுந்து நிற்கும் மருதமடுத் திருத்தலமாகும்.

Go to top
Template by JoomlaShine