உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் 

(The first Martyrs of the See of the Rome)

கி.பி. 64 ஆம் ஆண்டில் உரோமையில் நிகழ்ந்த பெருந்தீ விபத்தின் அழிவுக்குப்பின் மாமன்னன் நீரோ முதன்முறையாக திருச்சபையை வாட்டி வதைத்தபோது, மெய்யடியார்கள் பலரும் மிகக்கொடிய வேதனைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டார்கள். ஏற்பட்ட தீ விபத்தானது 6 நாள் பகலும், 7 நாள் இரவும் அதற்கு மேலும் கொழுந்து விட்டெரிந்தது.

அப்போது மன்னன் நீரோ வெகுளித்தனமாக உடைகள் அணிந்துகொண்டு, ஒரு கோபுர உச்சிக்கு சென்று தீப்பிழம்புகளை கண்டுகளித்தான். அவன் வெகுளித்தனமாக இவ்வாறு கண்டுகளித்ததை பார்த்த பலரும், நீரோவே தீயை வளர்க்க ஆணை பிறப்பித்திருப்பானோ என்று ஐயமுற்றனர். எப்படியும் தீயை அணைக்க அவன் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. இதனால் நீரோவே தீ தொடர்ந்து எரிய வழிவகுத்திருக்கலாம் என்ற ஐயம் வலுப்பட்டது. 

இதையறிந்த நீரோ மன்னன், கிறிஸ்தவர்களே இதற்கு காரணம் என்று திசைதிருப்பிவிட்டான். டாசிற்றஸ் (Dasitras) என்ற வரலாற்று ஆசிரியர் அப்போது இந்த குற்றச்சாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் கிறிஸ்தவர்களை ஒன்றாக சேர்க்க ஆணையிட்டான். தனது பெரிய நந்தவனத்திலேயே அவர்களை கூட்டிக் கிறிஸ்தவர்கள்மீது தார் எண்ணெய் ஊற்றி அவர்களை ஓர் இரவு

முழுவதும் சுட்டெரித்தான். இதனை கண்ட மக்கள் ஆத்திரமும், பயமும் கொண்டு வெளியேறினார்கள்

செபம்: அன்பான ஆண்டவரே உரோமைத் திருச்சபையின் தொடக்கத்தை மறைசாட்சியரின் இரத்தத்தால் புனிதப்படுத்தினீர். கடுமையான மரணப் போராட்டத்தில் அவர்களிடம் விளங்கிய உறுதியான ஆற்றலை வெளிப்படுத்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக மறைசாட்சிகளாக மரிக்கும் ஒவ்வொருவரையும் நீர் நினைவு கூர்ந்து, உமது திருச்சபையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.