இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 29-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயத்தின் மட்டில் புனித இராயப்பர் வைத்த அன்பு.

பெரிய அப்போஸ்தலராகிய புனித இராயப்பர் திவ்விய இரட்சகருடைய இருதயத்தின் பேரில் வைத்த அன்பாலும் ஆண்டவர் விஷயமாய் அவர் காண்பித்த தாராள குணத்தாலும் பிரமாணிக்கத்தாலும் சகலருக்கும் மாதிரிகையாயிருக்கிறார். இயேசுக்கிறிஸ்து நாதர் புனித இராயப்பரைத் தமது ஊழியத்துக்குக் கூப்பிட்டதும், அவர் சகலத்தையும் விட்டு உடனே பிரமாணிக்கமுள்ள சீடனாகப் பின்பற்றுகிறார். பின்பற்றின் முதல் நிமிஷம் துவக்கி திவ்விய இயேசுவின் பேரில் அவர் வைத்த விசுவாச வணக்கப் பற்றுதலால் மற்றச் சீடர்கள் எல்லோரையும் விட மேலானவராய் விளங்கினார்.

தம்மைப் பற்றி மனிதர்கள் என்ன சொல்கிறார்களென்று அப்போஸ்தலர்களை விசாரித்த பிற்பாடு, நீங்கள் என்ன சொல்லுகிறீர்களென்று அவர்களைக் கேட்கையில், புனித இராயப்பர் மற்றவர்கள் பேரால் வெகு துடுக்காய் : "சுயஞ்சீவியரான

சர்வேசுவரனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாய் நீர் இருக்கிறீர்" என்கிற விசுவாச பிரகடனம் செய்தார்.

கடைசி இராப்போஜனத்துக்குப் பிறகு திவ்விய இரட்சகர் அப்போஸ்தலர்களுடைய பாதங்களைக் கழுவ முழந்தாளிலிருக்கும் போது புனித இராயப்பர் தமது திவ்விய குருவின் மட்டில் எந்த அளவு விசுவாசமும் வணக்கமும் உடையவராயிருந்தாரென்றால், தேவ மகத்துவம் நிறையப் பெற்ற தெய்வம் தம் பதவியை மறந்து பாவியாகிய தன் பாதத்தைக் கழுவ வந்ததைக் கண்டு புனித இராயப்பர் கூச்சப்பட்டு, இந்தத் தாழ்ச்சி முயற்சியை நீர் செய்யக்கூடாதென்று உறுதியோடு தடுத்தார். ஆகிலும் ஆண்டவருடைய சித்தத்துக்குத் தடை செய்தால் அவருடைய அன்பை இழந்து போக நேரிடும் என்னும் பயத்தால் மாத்திரம் சம்மதித்தார்.

ஜெத்செமனி தோட்டத்தில் துரோகியான யூதாஸென்பவன் அழைத்து வந்த ஜனத்திரள் நமது ஆண்டவரைப் பிடிக்கத் தங்கள் பாவாக்கிரமம் நிறைந்த கரங்களை நீட்டி விரைந்து வரும்போது, புனித இராயப்பர் தன் திவ்விய குருவைக் காப்பாற்றும்படி தன் வாளை உபயோகிக்க உத்தரவு கேட்கிறார். ஆண்டவர் மறுமொழி சொல்வதற்கு முன்பாகவே மால்கூஸ் என்பவனைக் காதற வெட்டுகிறார். எல்லாச் சமயத்திலும் புனித இராயப்பர் தன் அன்பின் முதல் ஏவுதலுக்கு உடனே கீழ்ப்படிவார். தன் திவ்விய எஜமானைக் காப்பாற்றி மகிமைப்படுத்துவதில் எப்போதும் முதன்மையானவர் அவரே.

புனித இராயப்பர் நமது ஆண்டவர் மட்டில் எந்த அளவு அன்புடையவர் என்றால் தான் எப்போதாகிலும் தன் திவ்விய குருவுக்கு பிரமாணிக்கம் தவறி நடக்கக்கூடுமென்கிற நினைவு முதலாய் தன்னிடம் ஆகாதென்று எண்ணினார். பூங்காவனத்துக்குப் போகிற வழியில் திவ்விய இயேசு தமக்குச் சாவு வரப்போகிறதென்றும், அப்போஸ்தலர்கள் தம்மைவிட்டுப் பிரிந்து தம்மை மறுதலிப்பார்களென்றும் அறிவிக்கும் போது, புனித இராயப்பர், ஆண்டவரே! யாவரும் உம்மை

மறுதலித்தாலும் நான் உம்மை மறுதலியேன் என்று சொல்லும்போது ஆண்டவர் பிரத்தியுத்தரமாக: இன்று இரவில் சேவல் கூவுமுன் நீ எம்மை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்றார். ஆனால் புனித இராயப்பர், நான் உம்மோடு சாகிறதாயிருந்தாலும் உம்மை மறுதலியேன் என்று தடுத்துச் சொன்னார்.

திவ்விய இயேசு இரக்கமும் உருக்கமுமான சிநேகம் நிறைந்த தமது கண்களால் புனித இராயப்பரை நோக்குகிறார். அந்த அப்போஸ்தலர் மனம் இளகி தன் திவ்விய குருவின் வார்த்தைகளை நினைக்கிறார். உடனே வெளியே போய் கைப்பான கண்ணீர் சொரிந்து தேம்பித் தேம்பி அழுகிறார். அது முதல் புனித இராயப்பர் அப்போஸ்தலர்கள் கூட்டத்தில் மிகுந்த தாழ்ச்சியாலும் மேலான நன்றியறிதலாலும் தனக்கு இம்மாத்திரம் இரக்கம் காண்பித்த இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் உருக்கமான அன்பால் விளங்கினார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சேவல் கூவும் போது தன் பாவத்தை நினைத்து எவ்வளவு கண்ணீர் சிந்தி அழுதாரென்றால் அவருடைய கன்னங்கள் இரண்டிலும் சிறு வரிச்சுவடுகள் காணப்பட்டனவென்றும் பாரம்பரையாய்ச் சொல்லி வருகிறார்கள்.

புனித இராயப்பர் மனந்திரும்பின் பிற்பாடு இயேசுவின் திரு இருதயமானது அவருக்கு உருக்கமான பட்சத்தைக் காண்பிக்கிறது. ஆண்டவர் அவரை ஒரு போதும் அவர் பாவத்தினிமித்தம் கண்டித்தவரல்ல. அவருடையப் பிரதான அப்போஸ்தலராகவும், திருச்சபைக்குத் தலைவராகவும், இவ்வுலகத்தில் தம்முடைய உன்னத ஸ்தானாதிபதியாகவும் அவரைத் தெரிந்து கொள்ளுகிறார். இந்த உதவி உபகாரங்களெல்லாம் புனித இராயப்பருடைய இருதயத்தில் தனக்கு இவ்வளவு இரக்கமும் பட்சமும் காண்பித்த திவ்விய இரட்சகர் பேரில் சிநேகப்பற்றுதலையும், நன்றியறிதலையும், மட்டற்ற தாழ்ச்சியையும் உண்டு பண்ணினது. புனித இராயப்பரைப் போல் அல்ல, நாம் அவரைவிட இன்னும் அதிகமாய் சர்வேசுரனுக்குத் துரோகம்

செய்திருக்கிறோம். என்றாலும் நம்மையும் திவ்விய இயேசு வெகு இரக்கத்தோடு கண்ணோக்கித் தமது திருக்கரங்களை விரித்து திரு இருதயத்தையும் திறந்து காட்டுகிறார். எதார்த்தமாய் மன்னிப்புக் கேட்போமேயாகில் நமது சகல பாவங்களையும் மறந்து தமது ஏராளமான வரங்களையும் ஆசீர்வாதங்களையும் நமது பேரில் பொழிந்தருள்வார்.

ஆதலால் புனித இராயப்பர் பாவனையாக இனி ஒரு போதும் மனம் பொருந்தி எந்தப் பாவத்தையும் செய்கிறதில்லையென்று பிரதிக்கினை செய்து, நமது ஆண்டவருடைய ஊழியத்துக்கும் அன்புக்கும் நம்மை முழுதும் கையளித்து, நமது கடமைகளை எல்லாம் நிறைவேற்றி பிறர் ஆத்துமங்களையும் இரட்சித்து, இவ்வகையாய் இயேசுவின் திரு இருதயத்துக்கு நமது அன்பையும் நன்றியறிதலையும் காண்பிப்போமாக.

வரலாறு.

புனித இராயப்பர் திவ்விய இயேசுவோடு ஜீவித்த மூன்று வருடகாலங்களில் அவர் ஆண்டவரிடமாய்க் கண்ட கணக்கற்ற பிறர் அன்பு செயல்களில் சிலவற்றைத் திருச்சபையின் துவக்கத்திலிருந்தே கிறிஸ்துவர்களுக்குச் சொல்லிக் காட்டுவார். அவைகளில் ஒன்றை மட்டும் இங்கு புனித இராயப்பர் சொன்னது போல சொல்லிக் காட்டுவோம். "நாங்கள் ஓர்நாள் சாயந்திரம் திவ்விய இரட்சகரோடு பெத்தானியா ஊருக்குப் போய் மரியமதலேனாள் வீட்டில் இராத்தங்க வேண்டியிருந்தது. அக்காலம் வெகு குளிர்காலம். இரவில் எல்லோரும் அயர்ந்து நித்திரை போகும்போது திவ்விய இயேசு ஒவ்வொருவருடைய படுக்கையின் கிட்ட வந்து கம்பளியால் அவர்களுடைய கால்களை மூடினார். ஆண்டவர் என் கிட்ட வந்ததும் என் இருதய உணர்ச்சியைக் கொஞ்சமும் நான் அடக்கமாட்டாமல் கண்ணீர் சிந்தி அழுதேன். திவ்விய இரட்சகர் என்னைப் பட்சத்தோடு நோக்கி: "இராயப்பா, நீ பார்த்ததை ஒருபோதும் வெளியிடாதே" என்றார். என் திவ்விய குருவின் விருப்பத்துக்கு கீழ்ப்படிந்து அப்போஸ்தலர்களிடம் இதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஆண்டவர் இப்போது மோட்சத்துக்குப்

போய்விட்டபடியால் இதை நான் வெளியிடாமலிருக்க எனக்குக் கட்டாயமில்லை; நமது திவ்விய இரட்சகருடைய திரு இருதயத்தின் அளவில்லாத அன்பும் நட்பும் எவ்வளவு என்று உலகமறியும் பொருட்டு நான் இதை வெளியிடுகிறேன்" என்றார்.

திரியேக தேவனுக்கே மகிமை! மரியே வாழ்க!!