✠ புனிதர் ஜூலியானா ✠ (St. Juliana of Nicomedia)

மறைசாட்சி  (Martyr)

பிறப்பு :  கி.பி. 286 கம்பேனியாவிலுள்ள குமாயே

(Cumae in Campania)

இறப்பு :  கி.பி. 304 நிக்கொமீடியா அல்லது நேப்பிள்ஸ்  (Nicomedia or Naples)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)

பாதுகாவல் :  நோய்கள்

நினைவுத் திருநாள் :  ஃபெப்ரவரி 16

புனிதர் ஜூலியானா, ரோம பேரரசன் டையோக்லெஷியன் (Roman Emperor Diocletian) என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களின்

துன்புருத்தல்களின்போது மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். மத்திய காலங்களில் நெதர்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.

லத்தீன் மற்றும் கிரேக்க திருச்சபைகள் இவரது பெயரை தமது புனிதர்களின் பட்டியலில் தூய மறைசாட்சியாக வைத்துள்ளன.

ஜூலியானா, ஓர் மதிப்புமிக்க இறைநம்பிக்கையற்ற (Pagan) குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை அரசு அதிகார சபை அங்கத்தினர் (Senator) ஆவார். அவரது பெயர், அஃப்ரிகனஸ் (Africanus) ஆகும். இவர் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் ஆவார்.

ஜூலியானா தமது பெற்றோருக்கு தெரியாமலேயே திருமுழுக்கு பெற்றார். ஜூலியானாவுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பேரரசனின் ஆலோசகர்களில் ஒருவரும் அதிகார சபை உறுப்பினருமான எலாசியஸ் (Eleusius) என்பவருடன் திருமண நிச்சயம் நடந்தது.

ஆனால், ஜூலியானாவோ, தமது கன்னித் தன்மையை இழக்க விரும்பவில்லை. இவர் இறைவனுக்காகவே வாழ விரும்பினார். தமது விருப்பத்தை தமது பெற்றோரிடமும் தெரிவித்தார்.

மிகவும் கீழ்படிதலுள்ள தம் பெண், இங்ஙனம் தம்மை மறுத்து பேசியது, அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை இருந்தது. அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜூலியானா கேட்கவில்லை. அவர்கள் ஜூலியானாவை எலாசியஸிடம் ஒப்படைத்தனர்.

உயர் பதவியில் இருப்பதால் அகங்காரம் கொண்டிருந்த எலாசியஸ் ஜூலியானாவை பலி வாங்கும் நாளுக்காக காத்திருந்தான். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலியானா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும் விசாரித்து அறிந்து கொண்டான்.

ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார்.

பல முறை தன் தாயிடம் சொல்லாமலேயே தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார்.

காலப்போக்கில், பண பலம் கொண்ட எலாசியஸ், தமது பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிதினியா (Bithynia) நாட்டின் 'ரோம ஆளுனராக' பதவி பெற்றான்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்குப் பின்னரும், ஜூலியானா தமது முடிவில் ஸ்திரமாக இருந்தார். திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். இதன் காரணமாகவும் கோபமுற்ற 'ரோம ஆளுனர்' எலாசியஸ், ஜூலியானாவை கைது செய்ய உத்தரவிட்டான். கைது செய்யப்பட்ட ஜூலியானா, 'ரோம ஆளுனரின்' முன்பு நிறுத்தப்பட்டார். ஜூலியானாவின் கணவனாக நிச்சயம் செய்யப்பட்டவனே ஜூலியானாவை தீர்ப்பிடும் நீதிபதியாக இருந்தான்.

கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதனைப் பின்பற்றிய காரணத்துக்காக ஜூலியானா கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். இரக்கமேயில்லாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார். அவர், அவரது தலை முடியாலேயே கட்டித் தொங்க விடப்பட்டார். பின்னர், அவரது தலைமுடி, அவரது தலையிலிருந்து பிடுங்கப்பட்டது.

சிறைச்சாலையில், ஒரு சம்மனசின் வேடமிட்டு அவரை அணுகிய பசாசு, சிலை வழிபாட்டுக்கு சம்மதித்து தியாகம் செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதன் சூழ்ச்சியை அறிந்துகொண்ட ஜூலியானா, அதனை அடித்து, அதன் முகத்தில் காரி உமிழ்ந்து விரட்டினார். அதன்பிறகு, அவருக்கு தமது நிலைப்பாட்டில் உறுதியுடன் போராட புதிய சக்தி கிடைத்தது.

அவர், மீண்டும் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டார். அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டால், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக எலாசியஸ் அறிவித்தான். மற்றும், ஜூலியானா தமது விருப்பப்படி கிறிஸ்துவையே

பூஜிக்கலாம் என்றும் சம்மதித்தான். ஆனால், ஜூலியானா யாதொரு சஞ்சலத்துக்கும் ஆளாகாதிருந்தார்.

இறுதியில், ஜூலியானா ஒரு உருக்கப்பட்ட செம்பு கொப்பரையின் முன்பு கொண்டு வரப்பட்டார். அவர் அந்த கொப்பரையைத் தொட, அது விழுந்து, அதன் உருக்கப்பட்ட செம்பு அவரை சுட்டு காயப் படுத்தியது. அங்கே, நூற்றுக்கணக்கான (ஆண்கள் 500 பேரும், பெண்கள் 130 பேரும்) பழமைவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக தயாராக காத்திருந்தனர். அவர்களனைவரும், ரோம ஆளுனர் எலாசியஸின் கட்டளைப்படி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

எலாசியஸ், அவரது முகத்தில் ஒரு பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போட்டான். பிறகு, "இப்போது போய் கண்ணாடியில் உன் அழகிய முகத்தைப் பார்த்து ரசி" என்றான். ஆனால், மென்மையாக புன்னகைத்த ஜூலியானாவோ, "இறுதித் தீர்ப்பின்போது, உயிர்த்தெழும் என் உடலிலுள்ள காயங்கள் யாவும் ஆறிவிடும்; என் ஆன்மாவை உன்னால் காயப்படுத்த முடியாது" என்றார்.

இறுதியில், ஜூலியானா தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவருடன் சேர்த்து, பார்பரா (Barbara) என்ற ஒரு புனிதரும் துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.