✠ புனித வலண்டைன் ✠ (St. Valentine)

ஆயர் மற்றும் மறைசாட்சி  (Bishop and Martyr)

பிறப்பு : கி.பி. 176 டேர்னி (Terni)

இறப்பு : ஃபெப்ரவரி 14, 273 ரோம்  (Rome)

ஏற்கும் சமயம் : கத்தோலிக்க திருச்சபை (Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion) லூதரனியம் (Lutheranism)

நினைவுத் திருவிழா : ஃபெப்ரவரி 14

சித்தரிக்கப்படும் வகை : பறவைகள்; ரோஜா மலர்கள்; முடக்குவாதம் அல்லது வலிப்பு வந்த ஒரு குழந்தையோடு; ஆயரின் தலை வெட்டப்படுவதுபோல; வாள் ஏந்திய குருவாக; சூரியனோடு; குருடரை குணமாக்குவதுபோல

பாதுகாவல் : திருமண உறுதி, மயக்கம், தேனீ வளர்ப்பு, திருமணம், காதல், கொள்ளைநோய், வலிப்பு நோய், முடக்குவாதம்.

புனிதர் வலண்டைன் என்பவர், மூன்றாம் நூற்றாண்டின் பரவலாக அறியப்படும் ரோம புனிதர் ஆவார். உலகின் பல நாடுகளில் இவரின் விழா நாளான  ஃபெப்ரவரி 14ம் நாள், "வலண்டைன் தினம்" என இவரின் பெயரால் அழைக்கப்பட்டு, காதலர்கள் மற்றும் காதலுக்கான நாளாகக் கொண்டாடப்படும் வழக்கம் நடுக்காலம் முதலே உண்டு.

இவரின் பெயர், மற்றும் இவர் ரோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஃபிலாமினியாவில் ஃபெப்ரவரி 14ம் நாளன்று கொல்லப்பட்டார் என்பதையும் தவிர இவரைப்பற்றிய வேறெந்த தகவல்களுக்கும் நம்பத்தகுந்த சான்றுகள் இல்லை.

புனித வலண்டைன் என்று ஒரு புனிதரா, அல்லது அதே பெயரில் இரு புனிதர்கள் உள்ளனரா என்பதும் உறுதியற்றதாக உள்ளது. இவரின் வரலாற்றை எழுதிய பலர் தரும் தகவல்கள் நம்ப முடியாததாகவும் பின்னர் சேர்க்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம்.

இந்த காரணங்களுக்காக இவரின் விழா நாள் 1969ல் திருத்தப்பட்ட உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம்பெறவில்லை. ஆனாலும் "பெப்ரவரி 14 அன்று ஃபிலாமினியாவில் வழியாக மில்வியான் பாலத்திற்கு அருகில் கொல்லப்பட்ட மறைசாட்சி வாலெண்டினுஸ்" என்னும் பட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையினால் தனித்திருச்சபைகளின் வணக்கத்திற்காய் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களில் பட்டியலில் இவரின் பெயர் உள்ளது.