✠ புனித அருளானந்தர் ✠

( St. John De Britto )

இரத்த சாட்சி 

பிறப்பு : மார்ச் 1 1647    லிஸ்பன், போர்த்துக்கல்

இறப்பு : ஃபெப்ரவரி 4 1693   ஓரியூர், தமிழ் நாடு, இந்தியா

ஏற்கும் சபை/ சமயம் :     ரோமன் கத்தோலிக்க திருச்சபை

அருளாளர் பட்டம் : ஆகஸ்ட் 21 1853 

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் - ரோம்.

புனிதர் பட்டம் : ஜூன் 22 1947

      திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் – ரோம்

முக்கிய திருத்தலங்கள் :  புனித அருளானந்தர் ஆலயம், ஓரியூர்

நினைவுத் திருவிழா : ஃபெப்ரவரி 4

பாதுகாவல் : போர்த்துக்கல், சிவகங்கை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை

 

புனித ஜான் டி பிரிட்டோ (புனித அருளானந்தர்), போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம் :

ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீசக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பிரேசிலின் ஆளுநராக இருந்து இறந்தவர். போர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் ஜான் டி பிரிட்டோ பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஜானின் உடல் சீராக இருக்கவில்லை. 11 வயதில் தீவிர நோய்த்தாக்கத்தில் பிழைப்பதரிது என்ற நிலையில் அவரது தாய், புனித ஃபிரான்சிஸ் சவேரியாரிடம் உருக்கமாக மன்றாடினார். சிறுவன் பிழைத்தெழுந்தான். இயேசு சபையினரின் உடை போன்று ஓராண்டளவும் தம் மகனை உடுத்தச் செய்தார் தாய். அதிலிருந்து புனித சவேரியாரைப் போல தாமும் இயேசுவின் ஒளியை இந்திய மண்ணில் பரவச் செய்ய வேண்டும் என்ற பேராவல் அவரது இதயத்தில் பற்றியெரிய ஆரம்பித்தது. 

அவர் விரும்பியவாறே 15 வயதில் இயேசு சபையில் அனுமதிக்கப்பட்டார். குருபட்டம் பெற்றபோது கற்றலில் சிறந்த அவரது ஆற்றல் கண்டு, ஜானைப் போர்த்துக்கல்லில் இருத்திக் கொள்ள விரும்பினார். ஜானுக்கு இந்தியாவே இலக்காயிருந்தது. பாப்புவின் பிரதிநிதிவரை சென்று தம் மகனின் இந்தியப் பயணத்தைத் தடுக்க முயற்சித்தார் தாய். 'துறவற வாழ்வுக்கு என்னை அழைத்த இறைவன் இப்போது இந்தியாவுக்கு அழைக்கிறார்" எனக் கூறி அன்னையை ஆறுதல்படுத்தினார். 

கி.பி.1673ல், 16 சககுருக்களுடன் கோவாவில் கால்பதித்தார் ஜான். இறையியல் முதலான மேற்படிப்புக்களை முடித்தார். மதுரை மறைபரப்புத் தளத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பணி தொடங்கு முன் 30 நாள் ஞான ஒடுக்கம் செய்தார்.

தமிழில் பேசக் கற்றார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றினார். தமிழில் போதிக்கும் திறம் வளர்த்தார். இந்தியத் துறவி போல் காவி உடை அணிந்தார். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று அருளானந்த சுவாமியானார். தமக்குப் பழக்கமில்லாத தமிழக வெப்பத்தைப் பொருட்படுத்தாது, சென்னை, வேலூர், தஞ்சை, முகவை எனப் பல மாவட்டங்களிலும் நடந்தே சென்று போதித்தார். மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய ஈடுபாடுகளற்ற இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார்.. இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றி புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார். கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார். இராபர்ட் தெ நோபிலி இம்முறையையே தனது மதப்பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்.

 

இவரது தவமிகு வாழ்வு, மிகுதியான ஆர்வம், மறைப்பணியில் தீவிரம் இவற்றின் விளைவாய் ஆயிரக்கணக்கானோர் திருமறை தழுவினர். தஞ்சைத் தளத்தில் அறுவடை மிகுதியானது. மறவர் நாட்டில் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. புதிய வேதத்தின் போதனையைத் தடுக்கப் புனிதரைக் கைது செய்தான் முகவை முதன் மந்திரி. விசாரணை இன்றியே துன்புறுத்திக் கொள்ள முயன்ற போது, முகவை மன்னன் தலையிட்டுப் புனிதரை விடுவித்து நாடு கடத்தினான்.

தந்தை ஜானைப் போர்த்துகல் வரவேற்றது. இயேசு சபை மாநிலத் தலைவர் பதவி அளிக்க முன் வந்தது. ஆயர் பதவி காத்திருந்தது. வறண்ட மறவர் நாட்டின் மீது தணியாகத் தாகம் கொண்டிருந்த அருளானந்தர் எதையும் ஏற்க மறுத்துத் தமிழகம் திரும்பினார். 

ராணி மங்கம்மாள் காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு அறுந்து போயிருந்தது. மறவர் சீமையின் தலைமை கிழவன் சேதுபதியிடம் இருந்தது. கிழவன் சேதுபதி கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் இருந்தார். அவ்வேளையில் மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவம் தழுவிக் கொண்டிருந்தனர்.

கிழவன் சேதுபதியும் அருளானந்தரும் :

 இராமநாதபுரத்தில் அரச குடும்பத்தைச் சார்ந்த சிலர் திருமுழுக்குப் பெற்றனர். குணமளிக்கும் வரம் பெற்றிருந்தார் புனிதர். அவரது மன்றாட்டால் மக்கள் உடல் நலம் பெற்றதைக் கண்டு அந்தணர்கள் அழுக்காறுற்றனர். இது பேய் வேலை என்றனர். நோயால் துன்புற்று மரணத்தை எதிர் நோக்கியிருந்த மறவ இளவரச தடியத் தேவர் புனிதர் தம்மிடம் வரப்பிரார்த்தித்தார். ஜான் தாம் செல்லாது தம்வேதியருள் சிறந்த ஒருவரை அனுப்பி இறைவேண்டல் செய்ய, தடியத் தேவர் நலம் பெற்றார். மறையறிவு பெற்று கிறித்தவரானார். அவருக்கு 5 மனைவியர். கிறித்தவரானதும், தம் முதல் மனைவியைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டார். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் தடியத் தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது.

 

அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருவர் கடலாயி முகவைச் சேதுபதியின் நெருங்கிய உறவினர். மன்னனிடம் முறையிட்டாள். ஓரிய10ரிலிருந்த தன் தம்பி உடையத்தேவர் மூலம் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். 

திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர். 

 

முனி எனும் கிராமத்தில் ஜான் பிரிட்டோ தங்கி இருந்தபோது 1693 ஜனவரி 8ம் நாள் பிற்பகலில் மேலும் மூவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். முகவையிலிருந்து ஓரிய10ருக்கு நடத்திச் செல்லப்பட்டார்.  நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். ஜனவரி 11ம் நாள் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார். 

சிறையில் 1693 பிப்ரவரி 3ம் தேதி அவர் எழுதிய கடிதம், 

ஜனவரி 28ல் என்னை விசாரித்து ரங்கநாதத் தேவன் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பு கூறப்பட்டது.

கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய உறையூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு ரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31ம் தேதி வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான்

மரணத்தை எதிர் நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய லட்சியத்தை நிலை நிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்து வந்த வேலைக்குக் கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்து விட்டது. என் மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவனைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததும், விக்கிரக ஆராதனையைத் தடுத்ததுமே. வீரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் என்னால் எழுதுவது முடியாது... என மரணத்திற்குமுன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். 

தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு பெப்ரவரி 4, 1693ல் கொலையாளிகள் பிரிட்டோவை கோட்டைக்கு எதிரில் உள்ள குன்றுக்கு அழைத்துச் சென்று தலையைத் துண்டித்தனர். 

வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.

 

 

மறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மக்கள் திரளாக திருயாத்திரையாக ஓரியூருக்கு வர ஆரம்பித்தார்கள். 

புனிதர் பட்டம் :

ஜூன் 22, 1947 அன்று, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், அருளானந்தரை புனிதராக அறிவித்தார். மறவநாட்டுத் திருத்தூதர், மதுரை

மறைத்தளத்தின் பாதுகாவலர் புனித அருளானந்தரின் நினைவைத் திருச்சபை பெப்ரவரி 4ல் போற்றுகிறது.

புனித அருளானந்தர் நவநாள் செபம்

செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும்

மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். – ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)

 

புனித அருளானந்தருக்குச் செபம்

கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால்

புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்.

புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர்.

ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக!

இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். – ஆமென். 

 

புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும் 

கிறிஸ்துவே கிருபையாயிரும் 

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் 

கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

 

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா 

-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா 

-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா 

-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி 

தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா 

-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

.மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே. மறைசாட்சியான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.போர்த்துக்கல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே 1647 இல் உதித்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.அரசவையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையிலாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும் “வானத்தூதர்” என்றும், “மறைச்சாட்சி” என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.புதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும், அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோப் பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.1673-ல் பாய்மரக் கப்பலில் பயணமாகி பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும் புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து நாடுகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும், துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றிய புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு. துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணியாற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.பகைவர் உம்மைக் கொல்லப் பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.மறைச்சாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில் பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.உயர் பொறுப்பிற்காக 1686 ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயணமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690 இல் வந்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.புகழ் பெற்ற் தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.ஓரியூரிலே, 1693 பெப்ருவரி 4-ம் தேதி. புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.எங்களை விசுவாசத்தில் வளர்க்க உமது இரத்தத்தையே சிந்தியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே. தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான் டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

.உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.ஆன்மப் பிணிகளையும், உடல் நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே.- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 

.மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே. - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உலகின் பாவங்களைப் போக்குகிற…… மற்றதும். 

மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி. 

து. – புனித அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

 

செபிப்போமாக: மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறiவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடு அறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.