✠ திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் ✠ ( யோவான் பவுல் )

( Pope St. John Paul II )

264ம் திருத்தந்தை

இயற்பெயர் : கரோல் யோசேப் வொய்த்திலா

பிறப்பு : மே 18, 1920

இறப்பு : ஏப்ரல் 2, 2005 (அகவை 84)

குருத்துவத் திருநிலைப்பாடு : 1 நவம்பர் 1946

ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல்

ஆயர்நிலை திருப்பொழிவு : 28 செப்டெம்பர் 1958

இகுனுஸ் பாசிக்-ஆல்

கர்தினாலாக உயர்த்தப்பட்டது : 26 ஜூன் 1967

பிற தகவல்கள் :

குடியுரிமை : போலந்து நாட்டவர்

நினைவுத் திருவிழா : 22 அக்டோபர்

முத்திப்பேறு : 1 மே 2011

புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

புனிதர் பட்டம் : 27 ஏப்ரல் 2014

புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் - திருத்தந்தை பிரான்சிசு

பாதுகாவல் : உலக இளையோர் நாள்

1978ம் ஆண்டு திருத்தந்தையாக பதவியேற்ற இரண்டாம் ஜான் பவுல், தமது முதல் திருப்பலியின் மறையுரையில் உலக கத்தோலிக்கர்களை நோக்கி, பின்வருமாறு அறைகூவல் விடுத்தார்.: “கிறிஸ்துவுக்காக கதவுகளை அகலத் திறந்து வையுங்கள்” (Open wide the doors to Christ).


திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர்

இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவியில் இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் இவராவார்.

இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையைவிட அதிகமாகும். இவர் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுள் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனியயம், ரஷ்யன், குரோவாசியம், எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.


வாழ்க்கைக் குறிப்பு :

1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திலா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். ஜேருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே ஜேருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித்தொழிற்சாலையிலும் வேலைசெய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல்

குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.

1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திலா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 


திருத்தந்தை, ரோம் நகரிலுள்ள “பிரதான யூதர் வழிபாட்டுத் தலம்” (அ) “வழிபாட்டுக் கூடத்திற்கும்” (Main Synagogue), “எருசலேமின் மேற்கு சுவர்” (Western Wall in Jerusalem) என்றழைக்கப்படும் யூதர்கள் பாரம்பரியமாக வெள்ளிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்துவரும் “ஏரோதுவின்” ஆலயத்தின் (Herod's temple) தளத்துக்கும் வருகை தந்தார். கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாடிகனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். கத்தோலிக்க-முஸ்லீம் உறவுகளை மேம்படுத்திய திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், 2001ம் ஆண்டு, “சிரியா” (Syria) நாட்டின் தலைநகரான “டமாஸ்கஸில்” (Damascus) உள்ள மசூதிக்கும் வருகை தந்தார்.

ரோம் மற்றும் உலகெங்குமுள்ள கத்தோலிக்கர் மற்றும் பிற கிறிஸ்தவ மக்களிடையே கொண்டாட்டங்களை நிகழ்த்திய சிறப்பு ஜூபிளி ஆண்டான 2000, ஜான் பவுல் பணிக்காலத்தின் ஒரு முக்கிய

நிகழ்வு ஆகும். மரபுவழி திருச்சபைகளுடனான (Orthodox Churches) உறவுகள் கணிசமாக முன்னேறியது.


1979ம் ஆண்டில், திருத்தந்தையின் போலந்து நாட்டு வருகை, அங்கே ஒற்றுமை இயக்கம் வளரவும், பத்து வருடங்களின் பின்னர் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் தகர்க்கப்படவும் காரணமாயிருந்தது. உலக இளைஞர் தினத்தை (World Youth Day) தொடங்கிய திருத்தந்தை, அதன் கொண்டாட்டங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு விஜயம் தந்தார். அவர், சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய மிகவும் ஆர்வமாயிருந்தார். ஆனால், அந்நாடுகளிலுள்ள அரசுகள், அதனைத் தடுத்தன. இவரது திருத்தந்தையர் பணிக்காலத்தைய புகைப்படங்களில் மிகவும் நினைவுகூறத்தக்கது.


திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் 27 வருட பணிக்காலத்தில், அவர் கத்தோலிக்க ஆயர்களுக்கு 14 சுற்றறிக்கைகளை (Encyclicals) எழுதியிருந்தார். ஐந்து புத்தங்கங்களையும் எழுதியிருந்தார்.

தமது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் “பார்கின்சன் நோய்” (Parkinson’s disease) எனப்படும் நடுக்கம், தசை இறுக்கம், மற்றும் மெதுவாக, துல்லியமற்ற, இயக்கங்களுடைய நரம்பு மண்டலத்தின் முற்போக்கான நோயால் பாதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், தமது அன்றாட நடவடிக்கைகள் சிலவற்றை குறைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார்.


அருளாளர் பட்டம் :

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர், இரண்டாம்

யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.

 

புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் :

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்டாரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை

என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமையே என்று அறிக்கையிட்டது. 2013, சூலை மாதம் 4ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு ஆணைப்படி, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு விரைவில் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே தருணத்தில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் புனிதராக அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் தரப்பட்டது.

2014, ஏப்ரல் 27ம் நாள் இரு திருத்தந்தையர்களுக்கும் திருத்தந்தை பிரான்சிசு அவர்களால், புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.

இரு திருத்தந்தையர் புனிதர்களாக அறிவிக்கப்படுதல்:

இரண்டாம் யோவான் பவுல், இருபத்திமூன்றாம் யோவான் ஆகிய இரு திருத்தந்தையருக்கும் ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சியின்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டது ஒரு சிறப்பு நிகழ்வாயிற்று. அதுபோலவே திருத்தந்தை பிரான்சிசு தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றி அப்பதவியிலிருந்து விலகிய முன்னாள் திருத்தந்தையான பதினாறாம் பெனடிக்டோடு இணைந்து பொதுமக்களுக்குமுன் திருப்பலி நிறைவேற்றி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் வரலாற்றுச் சிறப்பானதாகும்.

தூய பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடந்த இறுதிச் சடங்கு திருப்பலிக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்திடையே, அப்போதைய கர்தினால்களின் தலைவரான “கர்தினால் ஜோசஃப் ரட்சிங்கர்” (Cardinal Joseph Ratzinger) ௲ பின்னால் திருத்தந்தையுமான “பதினாறாம் பெனடிக்ட்” (Pope Benedict XVI) பின்வருமாறு பேசினார்.:

“நோயினால் பாதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை, தமது வாழ்க்கையின் இறுதி உயிர்த்தெழுதல் ஞாயிறு (Easter Sunday) தினத்தன்று, மாளிகையின் ஜன்னலருகே மீண்டுமொருமுறை வந்து வாட்டிகன் நகருக்கும் உலகத்துக்கும் ஆசீர் தந்ததை நாம் யாரும் மறக்க இயலாது. இன்று, நமது அன்பான திருத்தந்தை தமது வீட்டின் ஜன்னலில் நின்றவாறு, நம்மைப்

பார்த்து ஆசீர்வதிக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆமாம், திருத்தந்தையே, எங்களை ஆசீர்வதியுங்கள். உங்கள் அன்பான ஆத்மாவை, ஒவ்வொரு நாளும் உம்மை வழிநடத்திய கடவுளின் தாய், உம் தாயிடம் நாங்கள் ஒப்படைத்து விடுகிறோம். அவர் இனி உம்மை தமது மகனும், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக உம்மை வழிநடத்துவாராக. ஆமென்.”

 

திருச்சபைத் தலைவர்கள் மற்றும் திருப்பயணிகள் பங்கேற்பு:

புனிதர் பட்டம் வழங்குவதற்காகத் தேர்ந்துகொள்ளப்பட்ட நாள்,  கத்தோலிக்கருக்குச் சிறப்பான நாள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் வருகின்ற அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய மாலையில்தான் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்தார். மேலும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான அந்த நாள் "இறை இரக்க ஞாயிறு"

என்ற பெயரால் கொண்டாடப்பட வழிவகுத்தவர் இரண்டாம் யோவான் பவுல். 

திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி (1962-1965), இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார். 

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "குடும்பங்களை ஆதரித்து வளர்த்தார். 

புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களின் மீபொருள்கள் வெள்ளிப் பேழைகளில் கொண்டுவரப்பட்டு, மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன. திருத்தந்தை யோவானின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்க்கோவிலிலிருந்து மேற்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதி அவருடைய மீபொருள் ஆனது.

புதிய புனிதர்களின் மீபொருள்கள்-

திருத்தந்தை இரண்டாம் யோவானின் மீபொருளைக் கொண்டுவந்தவர் அவருடைய பரிந்துரையால் குணம் பெற்ற பிளோரிபெத் மோரா டியாஸ் என்னும் கோஸ்தாரிக்கா நாட்டுப் பெண்மணி. அவர், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் உடலிலிருந்து, அவர் 2005இல் இறப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது இரத்தம் அடங்கிய பேழை.


புதிய புனிதர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்ட பிரமாண்டமான தொங்குதிரைகள் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தன. பீடத்தைச் சுற்றிலும் 30 ஆயிரம் மலர்கள் அணிசெய்தன. அம்மலர்களை எக்குவடோர் நாடு நன்கொடையாக அளித்திருந்தது.

 

செபம்:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் உம் உடனிருப்பை உணர்ந்து, நற்செயல்கள் என்னும் கனியை ஈந்தளிக்க அருள்தாரும். ஆமென்.