✠ அருளாளர்: ஜோஹான்னா மரியா போனோமோ ✠ ( BL. Johanna Maria Bonomo )

திருக்காட்சியாளர் 

பிறப்பு :  15 ஆகஸ்டு 1606  அசியாகோ (Asiago), இத்தாலி

இறப்பு :  1 மார்ச் 1670  பாசான்னோ (Bassano), இத்தாலி

முத்திபேறு பட்டம் : 9 ஜூன் 1783 - திருத்தந்தை 6ம் பயஸ்

நினைவுத் திருநாள் : மார்ச் 1

அருளாளர்: ஜோஹான்னா மரியா போனோமோ, கிளரிசியன் சபைச் சகோதரிகளால் வளர்க்கப்பட்டார். 1622ம் ஆண்டு, புனித பெனடிக்டின் சபையில் சேர்ந்து தனது வார்த்தைப்பாடுகளைப் பெற்று துறவியானார்.

ஏறக்குறைய 50 வருடங்கள் மிகச் சாதாரணத் துறவியாக வாழ்ந்தார். அதன் பிறகு, நவத்துறவகத்திற்கு பொறுப்பேற்று, நவத்துறவிகளை கவனித்து பராமரித்து வந்தார். 3 முறை இல்லத்தின் பொறுப்பாளர் துறவியாகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாளின் இறுதிவரை கடினமான நோயால் தாக்கப்பட்டு, உடல் அளவிலும், உள்ள அளவிலும் வேதனைகளை அனுபவித்தார். பொறுமையுடன் தன் உடல் வலிகளைத் தாங்கி இடைவிடாது செபித்தார்.

இவர் நோயுற்றிருந்தபோது, நோய்களைத் தாங்கும் வல்லமையையும், சக்தியையும் திருக்காட்சியின் வழியாகப் பெற்றார். இவர் தான் கண்ட திருக்காட்சிகளை தமது கைப்பட எழுதினார். இவைகள் அனைத்தும் அச்சிடப்பட்டு, இதன் வழியாக ஆண்டவரின் நற்செய்தி பரவியது என்று கூறப்படுகின்றது.

செபம் :

நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டவரே!  தன் வாழ்வின் இறுதிவரை, நோய்களை பொறுமையுடன் தாங்கும் சக்தியை திருக்காட்சியாளர் ஜோஹான்னாவிற்கு அளித்தீர். இவ்வுலகில் நோயினால் அவதிப்படும் ஒவ்வொருவரையும் கண்ணோக்கியருளும். உடல் பலத்தையும், உள பலத்தையும் தந்து, நோயை ஏற்று வாழச் செய்தருள நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம், ஆமென்.