கிறிஸ்து பிறப்பு விழா

மூவொரு கடவுளின் ஆட்சி முடிவில்லாத ஆட்சி. அவர் இந்த மண்ணுலகை அன்பு செய்வதை உறுதிபடுத்த தன்மகனையே தாரைவார்த்து மனுவுருவானதை நினைவுகூறும் புனித நாள் தான் இந்த கிறிஸ்துமஸ். இது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதையும் நினைவுபடுத்துகின்றது

கிறிஸ்து பிறப்பைப் பற்றி திருவிவிலியத்தில் நாம் வாசிக்கின்ற சம்பவங்கள் பலவற்றிலும், பகிர்வு என்ற உன்னத பண்பு மேலோங்கி நிற்கின்றது. மீட்பு திட்டத்தின் ஒருபகுதியாக, தமது ஒரே மைந்தனை இவ்வுலகில் மனிதனாகப் பிறக்கச் செய்தபோது, இறைதந்தை தமது அன்பை உலக மாந்தரோடு பகிர்ந்து கொண்டார். இறைமகன் இயேசு பிறந்த செய்தியை வயல்வெளியில் அறிவித்த வானதூதர்கள், தங்கள் மகிழ்ச்சியை இடையர்களோடு பகிர்ந்து கொண்டார்கள். தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்தக் குழந்தையைக் கண்டஆயர்கள், அந்த நற்செய்தியை தங்கள் அயலாருடன் பகிர்ந்து கொண்டார்கள். நெடுந்தொலைவிலிருந்து விண்மீனை பின் தொடர்ந்து வந்த ஞானியர், தங்கள் உடைமைகளை திருக்குடும்பத்தோடு பகிர்ந்து கொண்டார்கள். எனவே "பகிர்ந்து வாழ்தல்" என்ற கருத்து கிறிஸ்துமஸ் விழாவின் மையச் செய்தியாக அமைகிறது.

இன்றைய காலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு பல தரப்பட்ட தயாரிப்புகளில் நாம் ஈடுபடுகிறோம். பலகாரங்கள் செய்வது, வீட்டை அழகுபடுத்துவது, குடில் அமைப்பது. வாழ்த்து அட்டை அனுப்புவது. புத்தாடை அணிந்து திருப்பலியில் பங்குகொள்ளுதல், வாழ்த்துக்கள் பரிமாறுவது, இரவு முழுவதும்

குறுந்தகவல் அலைபேசியில் அனுப்புவது போன்ற விடயங்களில் நாம் நம்மையே தயார்ப்படுத்தி கொள்கின்றோம். நண்பர்களோடு நாம் பட்சணங்களையும் பரிசுளையும் பரிமாறிக் கொள்வதில் அடிப்படையாக இருப்பது பகிர்வு என்பதே ஆகும்.

ஒரு நிமிடம் கிறிஸ்து பிறந்த இரவை நினைத்துப் பார்ப்போம். கொட்டும் பணியில் கொள்கை வேந்தன் மாட்டுக்கொட்டிலில் பிறந்தார். ஆள் அரவமற்ற இருளான இடத்தில், கண்டுக்கொள்ளப்படாத இடையர்கள் மத்தியில், அசிங்கங்கமும் அழுக்குமான மாட்டுக் குடிலில் நிகழ்ந்தது அவரது பிறப்பு.

விலங்குகளில் பசி ஆற்றி பலம் தரும் இடம் தீவனத்தொட்டி. மனிதனின் பாவம் போக்கி, நலம் தரும் உணவாக தன் உயிர் உடலை தரப்போவதை முன்னறிவிக்க அத்தொட்டியில் கிறிஸ்து கிடத்தப்பட்டார்.

உலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் உண்டாகுக என்ற வானவர் கீதம் கேட்ட எளிமையின் வடிவமாக திகழ்ந்த பாமர இடையர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி. முழு உள்ளத்தோடு, ஆன்மாவோடு, ஆற்றலோடு, சக்தியோடு இறைவனை அன்பு செய்த அறிஞர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.கிறிஸ்துமஸ் தரும் மகிழ்ச்சியும் சமாதானமும் நமக்கு பகிர்த்து கொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பகிர்ந்து கொள்ளப்படும் துன்பம் பாதியாகும் என்பதை நினைவூட்டுகிறது.

பிறந்தவரும் தான் கடவுளின் குமாரர் என்றல்லாமல் தன்னையே தாழ்த்திக் கொண்டார். எளிமையான வாழ்வின் வழி இம்மண்ணுலகில்ஒரு புதிய புரட்சியை உருவாக்கினார். தன்போதனையின் வழியாகவும் எளிமையான உவமையின் வழியாகவும் ஆழமான கருத்துக்களை விதைத்தார். மானுடத்திற்காய் தன் மகனையே அளிக்க வந்த கடவுள் சாவையே ஏற்றுக் கொள்ள பணிக்கின்றார். போதனையை ஏற்றுக் கொள்ள முடியாத மானிடம் கொல்ல தீர்மானித்தது. யார் பெரியவர் என்கின்ற போட்டியாலேயே அவரை கொல்ல தீர்மானித்தது. அதை சாத்தியப்படுத்தியது. அனால் சாவை வீழ்த்தி மூன்றாம் நாள் சரித்திர நாயகனாய் உயிர்த்தெழுந்தார்.

இந்த பிறப்பு சொல்லும் செய்தி என்னவென்றால், இறைவனின் இறையாட்சிப் பணியினை, அவர் விட்டுச் சென்ற பணியினை தொடர்ந்தாற்ற, தன் மக்களை இறைவன் முன்கூறித்து வைத்து தேர்ந்தெடுத்து, ஆசீர்வதித்து வருகின்றார். ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணுலகில் பிறக்கும் போது, அக்குழந்தையின் மீது இறைவன் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றார். நாம் நமக்காக அல்ல, மாறாக மற்றவர்களின் நலன்களுக்காக. நம்முடைய ஆற்றலை திறமையை, அறிவை கொண்டு இறைப்பணியாற்றி, அவர் விட்டுச் சென்ற நல்ல செயல்களை மண்ணுலக மாந்தர்கள் பெற்றிட முயற்சிப்போம்.

நமது நெருங்கிய சுற்றமும், நட்பும் சார்ந்த சிறிய வட்டத்திற்கும் அப்பாற்பட்டு நம்மிலும் தாழ்நிலையில் உள்ளவர்களை, எளியவரை இன்றியமையா தேவையோடு இருப்பவரை கருத்தில் கொண்டு அவர்களோடு பகிர்ந்திட நாம்

முன்வரும் போது கிறிஸ்து பிறப்பு விழாவின் கொண்டாட்டங்கள் நமக்கு மன நிறைவும், மகிழ்ச்சியையும் அளித்திடும்.

இன்று நம் இதயங்களில் பிறக்கும் இயேசு நம் வழியாக செயல்படுகிறார். நமது பிரசன்னம், செயல்பாடுகள், கிறிஸ்துவின் பிரசன்னமாக, செயல்பாடுகளாக அன்பை சுமந்து அமைதியை, உண்மையை, நீதியை, பகிர்வைக் கொணர்பவையாக இருந்தால் நம்மை சுற்றியுள்ள மக்கள் நம்மிலிருக்கும் இயேசுவை அடையாளமாகக் காண்பர். மேலும் தன்னலத்தால் தன்னையும் பிறரையும் அழிப்போருக்கும், புதுமை வித்தியாசம் என்று பண்பாட்டை பாழாக்குவோருக்கும், ஊடகங்களால் மனிதத்தை உருக் குலைப்போருக்கும், அநீதியால் நீதியை நிலைக்குலைய செய்வோருக்கும், இயற்கையை அழிவுக்கு இட்டுச் செல்லும் இதயமற்றோருக்கும் நாம் நம்பிக்கை நட்சத்திரங்களாய் கிறிஸ்துமஸ் விழாக்காலங்களில் இருப்போம்.

வாழ்வது ஒருமுறையே. அந்த வாழ்வு ஒரு கொடையே. அந்த கொடையை அர்த்தமுள்ளதாக்க வாழ்வது நமது கடமையே. வாழ்வின் அர்த்தத்தை புரிந்து, நல்லது செய்து, பகிர்ந்து வாழ்வோம். அப்போது உண்மையான, அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு விழாவாக நமக்கு அமையும்.