✠ புனித இயேசுவின் தெரெசா ✠    (St. Teresa of Jesus Jornet)

கன்னியர்/ நிறுவனர் 

பிறப்பு :  9 ஜனவரி 1843, ஐடோனா (Aytona), ஸ்பெயின்

இறப்பு :  26 ஆகஸ்டு 1897, பார்பஸ்ட்ரோ (Barbastro), ஸ்பெயின்

முக்திபேறு பட்டம் : 1958  திருத்தந்தை 12ம் பத்திநாதர்

புனிதர் பட்டம் : 27 ஜனவரி 1974  திருத்தந்தை ஆறாம் பவுல் 

பாதுகாவல் : ஏழைகள், முதியோர், கைவிடப்பட்டோர்

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 26

காடலான் விவசாய குடும்பத்தில் பிறந்த தெரெசாவின் தந்தை ஃபிரான்சிஸ்கோ ஜோர்நெட் (Francisco Jornet) ஆவார். இவரது தாயார்  என்டோனிட்டா ல்பார்ஸ் (Antonieta Ibars) ஆவார். இவர், "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற சபையின் நிறுவனர் ஆவார்.

சிறுவயதிலிருந்தே எழைகளின்பால் தீவிர பற்று கொண்ட இவர், பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார்.

இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. எந்த துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார்.

நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம் தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, 1872ம் ஆண்டு பார்பஸ்ட்ரோ என்ற ஊரில், ஒரு துறவற சபையை தொடங்கினார். இச்சபைக்கு "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற பெயரை சூட்டினார்.

தமது சபையின் சகோதரிகளிடம், ஏழைகளுக்காக தமது வசதிகளை தியாகம் செய்யுமாறு கற்பித்தார்.  1897ல், ஸ்பெயின் நாட்டில் காலரா நோய் பரவியது. இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட இவரும் இவரது சபையின் சகோதரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். இந்நோய் முடிவுக்கு வந்தபோது, இச்சபையின் சகோதரிகள் இருபத்துநான்கு பேரும் அவர்களது நோயாளிகள் எழுபது பேரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். இம்முயற்சிகளில் மிகவும் மனம் தளர்ந்த தெரேசா சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். மிகவும் தளர்ச்சியடைந்த தெரெசா, ஆகஸ்ட் 26 அன்று மரணம் அடைந்தார்.

ஏழையாக பிறந்து, வளர்ந்த தெரசா, தன் சபையையும் ஏழைகளுக்காகவே ஏற்படுத்தினார். இத்துறவற சபை முதலில் லெரிடா (Lerida) என்ற ஊரில் தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கான இச்சபை, தெரசா இறக்கும்போது, 50 துறவற இல்லமாக பல்கிப் பெருகி, வளர்ச்சி அடைந்தது.