✠ அரசியான புனித கன்னிமரியாள் ✠ ( Queenship of Mary )

விண்ணக அரசி என்பது தூய கன்னி மரியாளுக்கு கிறிஸ்தவர்களால் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஒரு சில அங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் வழங்கப்படும் பட்டமாகும். 5ம் நூற்றாண்டில் நடந்த முதலாம் எபேசு பொதுச்சங்கத்தில் மரியாள் கடவுளின் அன்னை (Theotokos) என அறிவிக்கப்பட்டதன் விளைவாக இப்பட்டம் வழங்கப்படலாயிற்று என நம்பப்படுகின்றது.

இந்த நம்பிக்கை குறித்த கத்தோலிக்க படிப்பினை, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸின் 11-10-1956 தேதியிட்ட சுற்றுமடலில் விவரிக்கப்பட்டுள்ளது.

கன்னி மரியாள் விண்ணக அரசி என்று திருச்சபையானது ஆதியிலிருந்தே விசுவசித்து வந்திருக்கிறது. வேத புத்தகத்திலும், பரம்பரையிலும், இந்த விசுவாசத்திற்கு ஆதாரங்கள் உண்டு. என்றும் மரியாள் அரசியாக இருக்கிறார். ஏனெனில் அவர் பெற்றெடுத்த மகன் அனைத்துக்கும் அரசர்; அனைத்துக்கும் ஆண்டவர். அவர் நம்மை மீட்ட அரசரும், ஆண்டவரும் ஆனார். புனித மரியாள் மீட்பின் பணியில் இரட்சகருடன் ஒத்துழைத்தார். தனது உதரத்தில் அவர் உருவாக அன்னை அனுமதி அளித்தார். நம் மீட்பராகும்படி முழு மனதுடன் கையளித்தார். நாம் எல்லோரும் மோட்சத்துக்குப் போக வேண்டுமென்று அவர் ஆசிக்கிறார். செபிக்கிறார். பல வழிவகைகளைக் கையாளுகிறார். எனவே அவர் அரசி.

இந்த விழாவன்று, மானிட சந்ததியை மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். அவரே மானிட சந்ததியின் நம்பிக்கை. திருச்சபை வெற்றி பெறவும், கிறிஸ்தவ அமைதி நிலவவும் அவர் துணைபுரிய வேண்டும். எல்லோரும் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த அன்னையின் இரக்கத்தின் சிம்மாசனத்தை அணுக வேண்டும். சங்கடங்களில் உதவியையும், இருளில் ஒளியையும், துன்ப துயரங்களில் ஆறுதலையும் அன்னையிடம் தேடி அலைவோம்.

பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து தங்களை விடுவித்தால் தாங்கள் கேட்ட காரியங்களை அடைவர். அந்த அன்னை உண்மையாகவே நம் அரசி; அமைதியைப் பெற்றுத்தருவார். இயேசு நமக்கு நித்திய மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருப்பார்.

திருச்சபையினால் அதிகாரப்பூவ அனுமதி பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விண்ணக அரசி என்னும் பட்டம் கத்தோலிக்க மரபிலும், வேண்டுதல்களிலும், பக்தி முயற்சிகளிலும், கலையிலும் முக்கிய பங்கு வகித்துவந்தது.

 

இறைவா,           உம் திருமகனின் அன்னையை எங்களுக்கு அன்னையாகவும் அரசியாகவும் தந்துள்ளீர். ஆதற்காக உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம். மகிமைபெற்ற அந்த அன்னையின் வேண்டுதலால், பிள்ளைகளுக்குரிய மாண்பினை நாங்கள் பெற்று மகிழச் செய்தருளும்.  தூய ஆவியால் நிரப்பப்பெற்று, "நான் ஆண்டவரின் அடிமை" என்று கூறி தம்மையே முற்றிலும் உமக்குக் கையளித்த எங்கள் அரசியாம் புனித மரியாளைப் பின்பற்றி, அவருடைய பிள்ளைகளாகிய நாங்களும் முற்றிலும் உமக்கே உரியவராக மாறிடச் செய்தருளும், உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆமென்.