✠ புனித சுவக்கின், அன்னம்மாள் ✠

( Sts. Joachim and St. Anne )

இறைவனின் அன்னை, அதி தூய கன்னி மரியாளின் பெற்றோர் :

பிறப்பு : முதலாம் நூற்றாண்டு எருசலேம் இறப்பு : தெரியவில்லை (எருசலேம்)

கி.பி. 2ம் நூற்றாண்டின் மரபுவழி செய்தியின்படி அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் இறைவனின் அன்னை, அதிதூய கன்னி மரியாளின் பெற்றோர்கள் என்று கூறப்படுகின்றது. 6ம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. 10ம் நூற்றாண்டில் இப்பக்தி மிகுதியாக பரவியது. 15ம் நூற்றாண்டிலிருந்துதான் புனித அன்னா ஜூலை மாதம் 25ம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550ம் ஆண்டு

கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சிசெய்த அரசன், புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான்.

12ம் நூற்றாண்டிலிருந்து அன்னை மரியாளின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. 13ம் நூற்றாண்டிலிருந்து ஜூலை 26ம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 1568ம் ஆண்டு புனித 5ம் பயஸ் இவ்விழாவை, திருச்சபை பட்டியலிலிருந்து நீக்கினார். ஆனால் 1584ம் ஆண்டு மீண்டும் உரோமை திருச்சபை புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அன்னை மரியாளின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு மரியா என்று பெயர் சூட்டினர். தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர்.

செபம் :

எங்கள் தாயும் தந்தையுமான இரட்சகருமான மூவொரு இறைவா!  உம் திருமகனின் தாயை ஈன்றெடுக்கும் பேற்றை புனித சுவக்கின், அன்னம்மாளுக்கு தந்தீர். இவர்களின் வளர்ப்பால் அன்னை மரியாள் உமது திருமகனுக்கு தாயானார். எம் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை, ஆன்ம வாழ்வில் வளர்க்க தேவையான அருள்வரங்களை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை தாழ்ந்து பணிந்து ஆராதித்து மன்றாடுகின்றோம். அனைத்து மகிமையும் கனமும் துதியும் உமக்கே, ஆமென் †