✠ புனித பொனவந்தூர் ✠ ( St. Bonaventure )

கர்தினல், ஆயர், மறைவல்லுநர் --  ( Cardinal-Bishop and Doctor of the Church )

பிறப்பு : c. 1221  --  பஞ்னோரெஜியோ (Bagnoregio), இத்தாலி

இறப்பு : ஜூலை 15, 1274 (அகவை 52–53)  --  லியோன்ஸ் (Lyons), பிரான்ஸ்

புனிதர் பட்டம் : ஏப்ரல் 14, 1482 --  திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ்

நினைவுத் திருவிழா : 15 ஜூலை

சித்தரிக்கப்படும் வகை : 

கர்தினால்களின் தொப்பியில், நற்கருணைப் பாத்திரத்தை ஏந்தியவாறு;  பிரான்சிஸ்கன் சபை உடையில்; எழுதுவதோ அல்லது படிப்பதோ போன்று.

புனித பொனெவெந்தூர், இத்தாலிய நடுக் கால இறையியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். இவர் பிரான்சிஸ்கன் சபையின் ஏழாவது தலைவராக பணியாற்றியவர். இவர் அல்பேனோவின் கர்தினல்-ஆயர். இவருக்கு புனிதர் பட்டமளிப்பு 14 ஏப்ரல் 1482ல் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸால் அளிக்கப்பட்டது. திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் 1588ல்

இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரை "தேவதூதரின் மறைவல்லுநர்" எனவும் அழைப்பர்.

இவரின் இயற்பெயர்: ஜியோவானி டி ஃபிதான்சா ஆகும். திருமுழுக்கு பெயர் ஜான் ஆகும். இவர் 4 வயது இருக்கும்போது கொடிய நோயால் தாக்கப்பட்டார். புனித அசிசியாரிடம் வேண்டிய பிறகு புனித அசிசி பிரான்சிஸ் இவரை புதுமையாக குணப்படுத்தினார். அவரின் நோய் அவரைவிட்டு விலகியது. இவரால் எராளமான நன்மைகள் வரும் என்று புனித பிரான்சிஸ் முன்னறிவித்தார். இதனால் இவர் தன் இளம் வயதிலிருந்தே அசிசியாரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

22ம் வயதில் இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, பாரிஸ் நகரில் இரண்டு சிறந்த ஆசரியர்களிடம் கல்வி பயின்றார். புனித தாமஸ் அக்குயினாஸ் இவருடைய உற்ற நண்பர். இவரும் புனித தாமசும் அறிஞர் பட்டம் பெறும் நாள் வந்தது. இருவருமே தாழ்ச்சி நிறைந்தவர்கள். இந்தப் பட்டத்தை தாமஸ் முதலில் பெற வேண்டும் என்று இவர் வற்புறுத்தினார். தாழ்ச்சி மிகுந்த தாமஸ் மறுக்க முடியாமல் இவரது விருப்பத்திற்கு இணங்கினார்.

இவர் பிரான்சிஸ்கு சபையின் தலைவரானார். இவரது முயற்சியால் சபையில் அமைதி ஏற்பட்டது. இவர் புனித அசிசி பிரான்சிஸ்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது புனித அக்குயினாஸ் தாமஸ், இவரைப் பார்க்க வந்தார். ஒரு "புனிதர் இன்னொரு புனிதரது வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று கூறி தாமஸ் அகன்றார்.

தன் படிப்பை முடித்தபின், தன்னை புனித அசிசி சபையில் அர்ப்பணிக்க விரும்பினார். துறவற சபையில் தன்னை அர்ப்பணித்த பின், இவரின் 36 ஆம் வயதில், சபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  16 ஆண்டுகள் சபையை நன்கு வளர்த்தெடுத்தார்.  இவர் அச்சபைக்கு ஆற்றிய தொண்டால், இவர் ‘இரண்டாம் பிரான்சிஸ்’ என்றழைக்கப்பட்டார்.

இவர்தான் மூவேளை செபத்தை முதன்முதலில் தன் சபையில் அறிமுகப்படுத்தினார். இன்று இச்செபம் திருச்சபையிலும் வேரூன்றியுள்ளது. இவர் பலரின் கட்டாயத்தினால் அல்பேனிய நாட்டின் ஆயராகவும், கர்தினாலாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 2 ஆம் லியோன் பொதுச் சங்கத்தில், சில கருத்துக்களை நுணுக்கமாய் ஆராய தயாரித்துக் கொடுத்தார். அப்போதுதான் கிழக்கு, மேற்கத்திய திருச்சபைகளையும் ஒன்று சேர்த்தார். லியோன் பொதுசங்கம் நடக்கும்போது, இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். திருத்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் இறையன்பு, செபம், காட்சி தியானம் இவைகளில் தன் நேரங்களை செலவிட்டார்.

 

இவர் ஒருநாள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார்.  அப்போதுதான் திருத்தந்தை 10 ஆம் கிரகோரியார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதை அறிவிக்க, கர்தினாலின் தொப்பியையும் எடுத்து சென்று, செய்தியை அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் தன் வேலையை முடித்து வரும்வரை அத்தொப்பியை அருகிலிருக்கும் மரக்கிளையில் தொங்கவிட சொன்னார். இதிலிருந்து அவரின் தாழ்ச்சி எத்தமையது என்பது வெளிப்பட்டது.

சாகுமுன் தம் பதவியைவிட்டு விலகினார். 1274ம் ஆண்டில் 2வது லையன்ஸ் நகர்ச் சங்கம் நடக்கும்போது இவர் இறந்தார்.

 

செபம் : என்றும் வாழும் கடவுளே! 

அசிசியாரைப் போலவே தன் வாழ்வை வாழ்ந்த புனித பொனவெந்தூரை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஏழை மக்களின்மேல், அளவில்லா அன்பு கொண்டு நோயால் தாக்கப்பட்டவர்களுக்காக தன்னையே அர்ப்பணம் செய்து, நோய்களை அன்பின் வழியாக குணமாக்கிய இப்புனிதரைப்போல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் அன்புகாட்டி வழி நடத்த தேவையான வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென் †