✠ புனிதர் ஃபிரான்செஸ் ✠

(St. Frances of Rome)  (Founder)

பிறப்பு :  1384  ரோம்

இறப்பு : 9 மார்ச் 1440 ரோம்

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

புனிதர் பட்டம் : 1608 திருத்தந்தை 5ம் பால்

முக்கிய திருத்தலம் :புனிதர் ஃபிரான்செஸ் ரோமானா தேவாலயம், ரோம்

நினைவுத் திருநாள் : மார்ச் 9

பாதுகாவல் : 'சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளாத' பெனடிக்டைன் மறைப் 

பணியாளர் அமைப்பு , வாகனம் ஓட்டுநர், கைம்பெண்கள் 

புனிதர் ஃபிரான்செஸ், ஒரு ஆத்ம பலம் கொண்ட இத்தாலிய புனிதர் ஆவார். இவர் மனைவியும், தாயும், தொண்டுசேவை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளாத பெனடிக்டைன் மறைப் பணியாளர் (Benedictine Oblates) அமைப்பினை நிறுவியவரும் ஆவார்.

ரோம் நகரின் ஒரு பிரபுத்துவ செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பவோலா புஸ்ஸா (Paolo Bussa) ஆவார். இவரது தாயாரின் பெயர், லகொபெல்லா (Iacobella

dei Roffredeschi) ஆகும். தமது 11 வயதில், இவர் ஒரு அருட்சகோதரியாக துறவறம் பெற விரும்பினார். ஆனால், இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஃபிரான்செஸின் 12 வயதில், மிகவும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருத்தந்தையரின் போர்ப்படையின் ரோம் நகர தளபதியுமான லோரன்ஸோ போன்சியானீ  என்பவருக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர். இவர்களது திருமண வாழ்க்கை சுமார் நாற்பது வருடங்கள் நீடித்தது. லோரன்ஸோ தமது மனைவியை மிகவும் போற்றியதால் இவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.

லோரன்ஸோ அடிக்கடி போர் நடவடிக்கைகள் காரணமாக வெளியூர்கள் சென்றதால், அவர் அப்படி போகும் காலங்களிலெல்லாம் ஃபிரான்செஸ் தமது கணவரின் சகோதரரின் மனைவியான வன்னோஸ்ஸா என்பவருடன் ஏழைகளுக்கும் நோயுற்றோர்க்கும் சேவை மற்றும் பணிவிடைகள் செய்யச் சென்றார். இருவரது கணவர்மாரின் ஆசீர்வாதங்களுடன் இவர்கள் பணியாற்றினர். நகரின் பிற செல்வந்தர் குடும்பங்களின் பெண்களையும் ஏழை மற்றும் நோயுற்றோரின் சேவைசெய்ய ஃபிரான்செஸ் மற்றும் வன்னோஸ்ஸா ஊக்குவித்தனர்.

ஒருமுறை ஃபிரான்செஸ் நோய்வாய்ப்பட்டார். நோயினால் ஏற்பட்ட வேதனைகளும் துன்பங்களும் எழைகளின்பாலும் நோயுற்றோரின்பாலும் அவரது அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பினை மேலும் ஆழப்படுத்தியது.

வருடங்கள் செல்ல, ஃபிரான்செஸ் இரண்டு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் ஈன்றார். குழந்தைகள் பிறக்க, அவரது குடும்பப் பொறுப்பும் அதிகரித்தது. குடும்பத்தின்மேல் அதிக அக்கறை காட்ட தொடங்கினார். ஃபிரான்செஸின் அக்கறை மற்றும் கவனிப்பினால் அவரது குடும்பம் தழைத்தோங்கி செழித்தது.

ஆனால் சில வருடங்களில், இத்தாலி நாடு முழுதும் பரவிய பிளேக் நோய், கோர தாண்டவமாடியது. ரோம் நகரம் முழுதும் பேரழிவு கொடுமை ஏற்பட்டது. அதன் காரணமாக, ஃபிரான்செஸின் இரண்டாவது மகன் மரித்துப் போனான். பிளேக்கினால் பாதிக்கப்பட்டோரின் துயரங்களைப் போக்கும் முயற்சியாக, ஃபிரான்செஸ் தமது பணம் முழுவதையும் உபயோகித்தார். நோயுற்றோரின் அத்தியாவசிய தேவைகளை வாங்கும் பொருட்டு, தமது சொத்து முழுவதையும் விற்றார்.

அனைத்து வளங்களும் சொத்துக்களும் தீர்ந்து போயின. ஃபிரான்செஸும் வன்னோஸ்ஸாவும் வீடு வீடாக ஏறி இறங்கி, நோயுற்றோரின் தேவைகளுக்காக பிச்சை எடுத்தனர். பின்னர், ஃபிரான்செஸின் மகளும் மரித்துப் போனார். இப்புனிதர் தமது வீட்டின் ஒரு பகுதியை மருத்துவமனையாக மாற்றினார்.

இத்தகைய வாழ்க்கைமுறை உலகிற்கு மிகவும் அவசியமானதென்று ஃபிரான்செஸ் மென்மேலும் நம்பிக்கையும் உறுதியும் கொண்டார். சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளாத பெனடிக்டைன் மறைப் பணியாளர் அமைப்பினை நிறுவ இவர் அனுமதி கோரியபோது அது தாமதப்படுத்தாமல் கொடுக்கப்பட்டது. எவ்வித துறவற பிரமானங்களுக்கும் கட்டுப்படாத பெண்களின் சமூகம் உதித்தது. இப்பெண்கள் தம்மை இறைவனுக்கும் ஏழைகளின் சேவையிலுமே வழங்கினர்.

"பெனடிக்டைன் மறைப் பணியாளர்" அமைப்பு நிறுவப்பட்டதும் ஃபிரான்செஸ் அச்சமூகத்தினருடன் தங்கவில்லை. மாறாக தமது கணவருடன் தமது வீட்டிலேயே வாழ்ந்தார். சுமார் ஏழு வருடங்கள் இங்ஙனம் வாழ்ந்த ஃபிரான்செஸ், தமது கணவரின் மரணத்தின் பின்னர் அவரது சமூகத்தினருடன் தங்கி வாழ்ந்தார். ஏழைகளின் ஏழையாக பணியாற்றினார்.

புனிதர் அன்னை கொல்கத்தாவின் தெரசா, செபித்தல் மூலமாக இறைவனை அன்பு செய்வது மட்டுமல்லாது, ஏழைகளுக்கு சேவைசெய்வதன்மூலமும் இறைவனை அன்பு செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். அவ்வாறே, சேவை செய்வதன்மூலம் இறைவனை அன்புசெய்ய, மத பிரமாணங்கள் எடுத்துக்கொண்ட துறவிகளாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்பதனை புனிதர் ஃபிரான்செஸ் நிரூபித்துள்ளார்.