✠ புனிதர் கொலெட் ✠

(St. Colette of Corbie)

மடாதிபதி, நிறுவனர் :

(Abbess and Foundress)

பிறப்பு : 13 ஜனவரி 1381  கோர்பீ, அமியேன்ஸ், பர்கண்டி   (Corbie, County of Amiens, Duchy of Burgundy)

இறப்பு : 6 மார்ச் 1447 (வயது 66 கெண்ட், ஃப்லேண்டர்ஸ், பர்கண்டி

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை

முக்திபேறு பட்டம் : 23 ஜனவரி 1740 -  திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளெமென்ட் 

புனிதர் பட்டம் : 24 மே 1807 திருத்தந்தை ஏழாம் பயஸ் 

முக்கிய திருத்தலம் : பெத்லேஹெம் துறவுமடம், கென்ட், பெல்ஜியம்

நினைவுத் திருநாள் : மார்ச் 6

பாதுகாவல் : குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் , தாயாகக் காத்திருக்கும் பெண்கள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் 

 

புனிதர் கோர்பீ நகரின் கொலெட், ஒரு ஃபிரெஞ்ச் துறவுமடாதிபதியும், "புனிதர் க்ளேர் சபையின்" (Order of Saint Clare) சீர்திருத்தப்பட்ட கிளையான "கொலேட்டின் புவர் க்ளேர்ஸ்" (Colettine Poor Clares) எனும் சபை நிறுவனரும் ஆவார். எண்ணற்ற அதிசயச் சம்பவங்கள் இவர் வாழ்க்கையின் நிகழ்ந்ததால், இவர் குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், தாயாகக் காத்திருக்கும் பெண்கள், மற்றும்

நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் ஆகியோரின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார். திருச்சபை இவரை புனிதராக அருட்பொழிவு செய்தது.

நிகோல் போல்லெட் (Nicole Boellet) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கொலெட், ஃபிரான்ஸ் நாட்டின் பிகார்டி பிராந்தியத்திலுள்ள கோர்பீ (Corbie) எனும் கிராமத்தில் 13 ஜனவரி 1381ல் பிறந்தார். கோர்பீ கிராமத்திலுள்ள பெனடிக்டைன் துறவு மடத்தின்  ஏழைத் தச்சரான ராபர்ட் போல்லெட் இவரது தந்தை ஆவார். இவரது தாயாரின் பெயர் மார்கரெட் மோயோன்  ஆகும்.

இவரது பெற்றோர் முதிர்வயதுவரை குழந்தைப் பாக்கியமின்றி இருந்ததாகவும், பின்னர் அவர்கள் புனிதர் நிக்கோலசை நோக்கி குழந்தைப்பேறு வேண்டி ஜெபித்ததால் அவர்களது அறுபதாவது வயதில் பிறந்த பெண் குழந்தைக்கு புனிதர் நிக்கோலசுக்கு நன்றி கூறுவதற்காக பிறந்த குழந்தைக்கு நிக்கோல் என்று பெயரிட்டதாகவும், அவரது பெற்றோர் அவரை அன்புடன் நிகொலெட் (Nicolette) என அழைத்ததாகவும் பின்னர் அந்த பெயராலேயே அவர் அறியப்பட்டதாகவும் அவரது சமகால வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

நிகொல்லெட்டின் பதினெட்டு வயதில் அவரது பெற்றோர் மரித்தனர். பின்னர் அவர் பெகுய்ன்ஸ் எனப்படும் சகோதரிகளின் (மத வார்த்தைப்பாடுகள் பெறாத) சபையில் இணைந்தார். அச்சபையோரின் இணையற்ற வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார். 1402ல் புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of St. Francis) இணைந்தார். கோர்பீ தேவாலயத்தின் அருகேயுள்ள கோர்பீ மடாதிபதியின் ஆலோசனையின் பேரில் அவர் ஒரு துறவியாக மாறினார்.

நான்கு வருட துறவுப் பணியின் பின்னர், அவர் கண்ட பல்வேறு கனவுகள் மற்றும் திருக்காட்சிகளின் அடிப்படையில், ஃபிரான்சிஸ்கன் இரண்டாம் நிலை (Franciscan Second Order) சபையை சீரமைத்து அதன் முழுமையான எளிமை மற்றும் தாழ்ச்சிக்கே திருப்பித் தர தாம் அழைக்கப்படுவதாக நம்பினார். அதன்படியே செய்தார்.

1406 முதல் 1412 வரையான கால கட்டத்தில் அவர் துறவு மடங்களை நிறுவினார். தமது வாழ்நாள் முழுதும் அவர் 18 துறவு மடங்களை நிறுவினார். துறவு மட காரியங்களுக்காக அவர் பயணித்த ஊர்களுக்கு காலணிகள் அணியாது வெறும் கால்களுடனேயே பயணித்தார். நித்திய விரதம், எளிமை மற்றும் தாழ்ச்சியின் அடையாளமாக திகழ்ந்தார்.

மார்ச் மாதம் 1447ல் கென்ட் (Ghent) என்னுமிடத்தில் கொலெட் மரித்தார்.