அதிதூதர்களான  மிக்கேல்,  கபிரியேல்,  இரபேல்    --    செப்டம்பர்  29

'வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (காண். யோவான் 1:47-51)

செப்டம்பர் 29 - அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல்,

மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல்,

நலம் நல்கும் இரபேல்

என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர் நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில். தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப்போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப்போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். நாளை ஒருநாள் இந்த அதிதூதர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கிறோம்.

இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பதுபோல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதைவிட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே.

இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

 

தேவ தூததர்களுக்கு செபம்

அதிதூதரான புனித மிக்கேலே! 

பயங்கரத்துக்குரிய தீர்வையில் நாங்கள் மோசம் போகாதபடி எங்களை யுத்தத்தில் தற்காத்தருளும்.

அதிதூதரான புனித கபிரியேலே! 

நாங்கள் தேவசித்தத்தை அறிந்து அதன்படியே நடக்க உதவியாயிருந்தருளும். 

அதிதூதரான புனித இறபாயேலே ! 

இவ்வுலகில் நாங்கள் நடத்தும் யாத்திரையில் சகல துன்பங்களிலும், அபாயங்களிலும் நின்று எங்களை  விடுதலையாக்கியருளும்.

செபம்: வான் படைகளின் ஆண்டவராகிய கடவுளே! வானத்தூதருக்கும், மானிடருக்கும், அவரவருக்குரிய பணிகளை ஞானமிகு முறையில் திட்டமிட்டருனீர். விண்ணகத்தில் உம்மை வழிபடும் இவர்கள், மண்ணகத்தில் எங்கள் வாழ்வை பாதுகாத்திட அருள்புரியும்.