✠ மரியாளின் பிறப்பு ✠

(The Nativity of the Blessed Virgin Mary)

"தூயவர், பாவமற்றவர், மாசற்றவர்"

திருவிழா : செப்டம்பர் 8 (உலகளாவியது)

மரியாளின் பிறப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளின் பிறந்த நாளைக் குறிக்கிறது. திருமுறை சாராத கி.பி. 2ம் நூற்றாண்டு நூலான யாக்கோபின் முதல் நற்செய்தியில் இருந்து அவரது பெற்றோரின் பெயர் யோவாக்கிம், அன்னா என்று அறிந்து கொள்கிறோம். மரியாளின் பிறப்பு விழா செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

யாக்கோபு நற்செய்தி :

கி.பி. 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாக்கோபின் முதல் நற்செய்தி, கன்னி மரியாளின் பிறப்பைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறது: எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக

நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியா (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.

மரியா என்ற பெயர்ச் செமிதிய அக்காடியா மொழியில் மரா, மரியா, மரியம், மிரியாம் என்று கூறப்படுகின்றது. “மரா” என்றால் அழகானது, நிறைவானது என்று பொருள். “மாரி” என்றால் கடவுள் என்று எகிப்திய மொழியில் பொருள். எனவே அன்னை மரியாள் கடவுளால் அழைக்கப்பட்டவர். சீடர்கள் ஆவியால் நிரம்பப் பெற்றவர்கள். ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை மரியா “ஆம்” என்று தன்னை இறைத்திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தார். அந்த முழுமையான, நிறைவான, அர்ப்பண வாழ்வை அடிப்படையாகக் கொண்டே மரியாவை “இறைவனின் தாய் - நம் அனைவரின் தாய்” என்று திருச்சபை உலகிற்குப் பறைச்சாற்றுகின்றது.

மரியாளுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாளை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அங்கிருந்த கல்வி சாலையில், மரியாள் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியாள் ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.

கிறிஸ்தவ மரபு :

மரியாளின் பிறப்புபற்றி யாக்கோபின் முதல் நற்செய்தியில் காணப்படும் செய்தியே, திருச்சபையின் மரபாக இந்நாள் வரை நிலைத்திருக்கிறது. அத்துடன் மரியாளின் பிறப்பு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் பழங்காலம் முதலே நம்பப்படுகிறது. இறைமகன்

இயேசுவின் தாயாகுமாறு, அன்னாவின் வயிற்றில் கன்னி மரியாள் கருவாக உருவானபோதே பிறப்புநிலைப் பாவமின்றி உற்பவித்ததாக கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது. 

பிறப்பு விழா :

கத்தோலிக்க திருச்சபையில் இயேசுவின் பிறப்பைப்போன்று, கன்னி மரியாள், திருமுழுக்கு யோவான் ஆகியோரின் பிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. கன்னி மரியாளின் பிறப்பு விழா செப்டம்பர் 8ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. 

 

மாதாவின் சிறந்த பத்து புண்ணியங்கள் :

1. ஆழ்ந்த தாழ்ச்சி 2. உயிருள்ள விசுவாசம் 3. கேள்வியற்ற கீழ்படிதல் 4. இடைவிடா ஜெபம் 5. யாவற்றிலும் பரித்தியாகம் 6. தெய்வீகத் தூய்மை 7. பற்றியெரியும் சிநேகம் 8. இறுதிவரை சென்ற பொறுமை 9. சம்மனசுக்குறிய சாந்தம் 10. தெய்வீக ஞானம்