துன்ப வேளையில் புனித யூதா ததேயுவுக்குச் செபம்

பரிசுத்த அப்போஸ்தலரே, புனித யூதா ததேயுவே, புண்ணியங்களாலும், புதுமைகயாலும் நிறைந்த புகழ்பொங்கும் வேதசாட்சியே, உம்மை வணங்கி உம்மில் நம்பிக்கை வைப்போர்க்கு தாமதியாது பரிந்து பேசும் பரிசீலரே, பெருந்துன்பத்திலுள்ளோருக்குப் பாதுகாவலரும் வல்லபமுள்ள துணைவருமாயிருக்கிறவரே, நான் உமதண்டை வந்து முழு இருதயத்தோடு ஆவலாய் இரந்து மன்றாடுகிறேன். இனி எவ்வித நம்பிக்கையும் இல்லையே என்று தவிக்கும் வேளையிலே, தப்பாது உதவிபுரிந்து தற்காக்கத் தேவனிடம் விசேஷ வரம்பெற்றுத் திகழ்பவரே, உமது வல்லபமிக்க மன்றாட்டால் எனக்கு உதவிபுரிய வாரும். என் பரிதாப நிலையைப்பாரும்.

என் வாழ்விலே சிலுவைகள் நிறைந்திருக்கின்றன. என் நாட்களோ துன்பங்களால் சூழ்ந்திருக்கின்றன, என் இதயமோ கசப்பு நிறைந்த சமுத்திரம்போல் இருக்கின்றது. என் பாதைகளில் எல்லாம் முட்கள் படர்ந்திருக்கின்றன. நான் கண்ணீர் சிந்திப் பெருமூச்சு விடாத ஒரு பொழுதுகூட என் சீவியத்தில் இல்லை. அமைதியின்மை, அதைரியம், மனத்தளர்ச்சி, அவநம்பிக்கை என்பன என் ஆத்துமத்தை அபகரிக்கப் பார்க்கின்றன. தேவ பராமரிப்பை என் கண்கள் இனிக் காணமுடியாதுபோலும், என் இருதயத்தில் விசுவாசம் தளர்கின்றதுபோலும் இருக்கின்றது. இக்கவலைகளின் சுமையால் நசுக்கப்பட்டு இருண்ட மேகம் என்னை சூழ்ந்திருப்பதுபோல  நான் என்னைக் காண்கிறேன். இந்த என் பரிதாபநிலையில் நீர் என்னைப் புறக்கணிக்கவே முடியாது, நீர் என் மன்றாட்டை கேட்குமட்டும் நான் உம் அண்டையை விட்டு விலகவேமாட்டேன். எனக்கு உதவிபுரிய விரைந்து வாரும். என் வாழ்நாள் எல்லாம் உமக்கு நான் நன்றி செலுத்துவேன். என் விஷேச பாதுகாவலராக நான் உம்மை மகிமைப்படுத்துவேன். உமக்கு அருளப்பட்ட வரங்களுக்காக கடவுளுக்கு நான் நன்றி செலுத்தி, உமது மகிமையைப் பரப்ப என் முழுச் சத்தியோடு பிரயாசைப்படுவேனென்று வாக்குப் பண்ணுகிறேன்.  ஆமென்.

1. புனித யூதாததேயுவே யேசுக்கிறிஸ்துநாதரின் நெருங்கிய உறவினரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

2. புனித யூதாததேயுவே, அப்போஸ்தலரும் வேதசாட்சியுமானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

3. புனித யூதாததேயுவே, கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்