செபமாலைத்  தியானம்

தந்தை,  மகன்,  தூய ஆவியாரின்   பெயராலே,  ஆமென்.

மூவொரு இறைவன் புகழ்:     தந்தைக்கும்  மகனுக்கும்   தூய ஆவியாருக்கும்  மாட்சிமை  உண்டாகுக.

தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

செபமாலைத்  தியானம்  ஒலிவடிவம்


தூய  ஆவியானவரின்  செபம்:   தூய  ஆவியானவரே!   எழுந்தருளி   வாரும்.   வானிலிருந்து  உம்முடைய  அருட்சுடரின்  கதிர்களை  வரவிடும்.  எளியோரின்  தந்தையே!  கொடைகளைக்  கொடுக்கின்றவரே!  இதயங்களின்  வெளிச்சமே!  எழுந்தருளி  வாரும்.  உன்னத  ஆறுதலானவரே!   ஆன்மாவின் இனிய விருந்தினரே!  பேரின்பம்தரும் இளைப்பாற்றியே! உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே,   வெம்மை தணிக்கும் குளிர்நிழலே, அழுகையில் தேற்றரவே!  எழுந்தருளி வாரும்.   உன்னத மகிழ்ச்சியின் பேரொளியே!  உம்மை  நம்புவோரின்  இதயங்களை  நிரப்பும். உம்முடைய அருளாற்றல் இல்லாமல் மனிதரிடத்தில்  நன்மையானது  ஒன்றுமில்லை.  கறையுள்ளதைச்  சுத்தம் பண்ணும்.  உலர்ந்துபோனதை நனையும்.  காயங்களைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச்செய்யும்.   குளிரோடிப்பதை குளிர்போக்கும்.  தவறிப்போனதைச்  செவ்வனே  நடத்தும்.  உம்மை  நம்புகின்ற உம்  அடியார்களுக்கு  உம்  திருக்கொடைகள்  ஏழும்  தந்தருளும்.   புண்ணிய  பேறுகளையும்,  அமைதிநிறை  இறப்பினையும்,  நிலையான  விண்ணக  மகிழ்ச்சியையும்  எங்களுக்குத்  தந்தருளும்,   ஆமென்.  


உத்தம  மனத்துயர்  செபம்:   என்  ஆண்டவரே,  அளவில்லாத  அன்பின்  முழுவடிவாய் இருக்கும் உமக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினாலே முழுமனதுடனே துக்கப்படுகிறேன். இனிமேல் ஆண்டவரே,   உம்முடைய  உதவியினாலே, நான்  ஒருபோதும்  பாவம்  செய்யேன்  என்றும், பாவங்களுக்கு ஏதுவான  காரணங்களை எல்லாம்  விட்டுவிடுவேன்  என்றும்   கெட்டிமனதுடனே   வாக்குப்  பண்ணுகின்றேன்.   எங்கள்  நாயகன்  இயேசு கிறிஸ்து  பாடுபட்டு  அடைந்த  மட்டில்லாத  பேறுபலன்களைப்  பார்த்து,  என்  பாவங்களைப்  பொறுத்தருளும்  ஆண்டவரே -  ஆமென். 

- இறைவா  எங்களுக்கு   அருகில்  இருந்தருளும்  //  ஆண்டவரே  எங்களுக்கு   உதவிபுரிந்திட  விரைந்துவாரும். 

தந்தைக்கும்,  மகனுக்கும்,  தூய ஆவியாருக்கும்  மாட்சி உண்டாவதாக!  தொடக்கத்திலே இருந்ததுபோல  இப்பொழுதும்  எப்பொழுதும்   என்றென்றும்   இருப்பதாக   --   ஆமென்.


செபிப்போமாக,  அனைத்து  நன்மைகளும்  நிறைந்திருக்கும்  அன்பின்  ஆண்டவரே, தீய  மனிதரும்  நன்றியில்லாத  பவிகளுமாயிருக்கும் அடியோர் நாங்கள், அளவில்லா மாட்சி கொண்டிருக்கும் இறைவன் உம் திருச்சந்நிதியிலேயிருந்து  செபம்  செய்யத்தகுதி  அற்றவர்களாய்  இருந்தாலும்,  உம்முடைய  அளவில்லாத  இரக்கத்தை  நம்பிக்கொண்டு,  உமது  மாட்சிக்காகவும்  அன்னை  மரியாவின்  புகழ்ச்சிக்காகவும்  ஐம்பத்துமூன்று   மணிச்செபமாலை  தொடுக்க  ஆசையாய்  இருக்கிறோம்.  இந்தச்  செபத்தைப் பக்தியோடுசெய்து பராக்கில்லாமல் முடிக்க உமதருளை  எங்களுக்குத்  தந்தருளும்  -  ஆமென்.  


நம்பிக்கை  அறிக்கை:   விண்ணகத்தையும்  மண்ணகத்தையும்  படைத்த  எல்லாம்வல்ல  தந்தையாகிய  கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று  தூய கன்னிமரியாவிடமிருந்து  பிறந்தார்.  பொந்தியு பிலாத்தின்  அதிகாரத்தில்  பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு  எழுந்தருளி  எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.  அவ்விடத்திலிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.    தூய  ஆவியாரை  நம்புகிறேன்.   

தூய  கத்தோலிக்கத்  திருஅவையையும்  புனிதர்களுடைய  சமூக உறவையும்  நம்புகின்றேன்.  பாவ மன்னிப்பை  நம்புகின்றேன்.    உடலின்  உயிர்ப்பை  நம்புகின்றேன்.   நிலை வாழ்வை  நம்புகின்றேன்.  –  ஆமென்.

விண்ணுலகில்  இருக்கிற  எங்கள்  தந்தையே!   உமது  பெயர்  தூயது  எனப்  போற்றப்  பெறுக,   உமது  ஆட்சி  வருக.  உமது  திருவுளம்  விண்ணுலகில்  நிறைவேறுவதுபோல  மண்ணுலகிலும்  நிறைவேறுக.  

எங்கள் அன்றாட  உணவை  இன்று  எங்களுக்குத்  தாரும்.  எங்களுக்கு  எதிராகக்  குற்றம்  செய்வோரை  நாங்கள்  மன்னிப்பதுபோல  எங்கள்  குற்றங்களை  மன்னியும்.  எங்களைச்  சோதனையில்  விழவிடாதேயும்,  தீமையிலிருந்து  எங்களை  விடுவித்தருளும்  -  ஆமென்.

அருள்நிறை  மரியே  வாழ்க!   ஆண்டவர்  உம்முடனே.   பெண்களுள்  ஆசி  பெற்றவர்  நீரே.   உம்முடைய  திருவயிற்றின்   கனியாகிய   இயேசுவும்  ஆசி  பெற்றவரே,                             தூய  மரியே,  இறைவனின்  தாயே,  பாவிகளாயிருக்கிற  எங்களுக்காக,  இப்பொழுதும்  எங்கள்  இறப்பின்  வேளையிலும்  வேண்டிக்கொள்ளும்  -  ஆமென்.


தந்தைக்கும்,  மகனுக்கும்,  தூய  ஆவியாருக்கும்  மாட்சி  உண்டாவதாக!          தொடக்கத்திலே  இருந்ததுபோல  இப்பொழுதும்  எப்பொழுதும்   என்றென்றும்   இருப்பதாக   --   ஆமென்.


ஓ  என்  இயேசுவே,   எங்கள்   பாவங்களைப்  பொறுத்தருளும்.  எங்களை  நரக  நெருப்பிலிருந்து  மீட்டருளும்.   சகல  ஆன்மாக்களையும்  விண்ணுலக  பாதையின்வழி  நடத்தியருளும்.            உமது  இரக்கம்  அதிகமாக  வேண்டியவர்களுக்கு   சிறப்பான   உதவி   புரிந்தருளும். 

 மகிழ்ச்சியின்  மறை   நிகழ்ச்சிகள்  (திங்கள் & சனி + திருவருகைக்காலம்)

1 - இயேசுவின்  பிறப்பின்  அறிவிப்பு

2 - கன்னி   மரியாள்  எலிசபேத்தைச்   சந்தித்தல்

3 - கன்னி  மரியாள்   திருப்பாலனைப்   பெற்றெடுத்தல்

4 - திருப்பாலனைக்   காணிக்கையாக   ஒப்புக்கொடுத்தல்

5 - திருப்பாலனை   மூன்றாம்  நாள்  ஆலயத்தில்  கண்டுபிடித்தல்


ஒளியின்  மறை  நிகழ்ச்சிகள்  (வியாழன்) 

1 - இயேசு  யோர்தானில்  திருமுழுக்குப்  பெறுதல்

2 – இயேசு  கானாவூரில்  தண்ணீரை  இரசமாக்குதல் 

3 - இயேசு  இறையரசைப்  போதித்தல்

4 – இயேசு  தாபோர்  மலையில்  உருமாறுதல்

5 - இயேசு  நற்கருணையை  ஏற்படுத்துதல்  


துயர  மறை  நிகழ்ச்சிகள்  (செவ்வாய் & வெள்ளி + தவக்காலம்) 

1 - இயேசு  பூங்காவனத்திலே  மரண வேதனைப்படுதல்    

2 - இயேசு  கற்றூணில்  கட்டி  அடிக்கப்படுதல்

3 - இயேசு  முள்முடி  சூட்டப்படுதல்

4 - இயேசு  சிலுவை   சுமந்து   கல்வாரிநோக்கி   நடத்தல்

5 - இயேசு  சிலுவையிலே  உயிர்  விடுதல்  

மாட்சிநிறை  மறை  நிகழ்ச்சிகள்  (புதன் &  ஞாயிறு +  உயிர்ப்புக்காலம்)

1 - இயேசுவின்  உயிர்ப்பு

2 - இயேசுவின்  விண்னேற்றம்

3 - தூயஆவியாரின்  வருகை

4 – இறையன்னையின் விண்னேற்பு

5 - இறையன்னைக்கு  முடிசூடுதல்


காணிக்கைச்  செபம்:   அதிசிறந்த  மாட்சியுள்ள  விண்ணக  மண்ணக  அரசியான  தூய  மரியன்னையே!   நாங்கள்  உம்;முடைய திருப்பாதத்தை வணங்கி  இந்;தச்  செபமாலைத்  தியானத்தை  உமக்குப்  பாதகாணிக்கையாக வைத்து  ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீர் கையேற்று உம் திருமகனிடத்திலே கையளித்து, இதிலே நாங்கள்  தியானித்த தூய மறையுண்மைகளின் பலனை அடையவும், இறைபோதனையின்படியே நாங்கள் நடந்து இவ்வுலகத்தின்  அனைத்து  தீமைகளுக்கும் நிவாரணமாகவும்; விண்ணகத்தில் உம்மோடு உம்முடைய திருமகனுடைய விண்ணகத்  திருவடிவைக்கண்டு   களிகூர்ந்திருக்கவும்  ஒத்தாசை   செய்தருளும்   தாயாரே   -   ஆமென்.

 

தூய  தேவ  அன்னையின்  மன்றாட்டுமாலை

ஆண்டவரே  இரக்கமாயிரும் --  ஆண்டவரே  இரக்கமாயிரும் 

கிறிஸ்துவே  இரக்கமாயிரும்  --   கிறிஸ்துவே  இரக்கமாயிரும் 

ஆண்டவரே  இரக்கமாயிரும் --  ஆண்டவரே  இரக்கமாயிரும் 


கிறிஸ்துவே  எங்கள்  மன்றாட்டைக்  கேட்டருளும்  

- கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டடைக் கேட்டருளும்

கிறிஸ்துவே  எங்கள்  மன்றாட்டைக்  கனிவாய்க்  கேட்டருளும்  

- கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்


விண்ணகத்திலிருக்கிற  தந்தையாகிய  இறைவா -  எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே

உலகத்தை  மீட்ட  மகனாகிய  இறைவா -   எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே

தூய  ஆவியாராகிய  இறைவா   -   எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே

தூய்மைநிறை  மூவொரு இறைவா  -   எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே 


தூய  மரியாயே  -  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின்  தூய  தாயாரே  -  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியருள்  உத்தம  கன்னிகையே  - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவினுடைய  தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறையருளின்  தாயாரே   –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நிறை  தூய்மையுள்ள  தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கற்பு  நிறைந்த  தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

குறைவில்லா  கன்னிமைகொண்ட  தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னித்  தூய்மை   கெடாத   தாயாரே  -  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பேரன்புநிறை   தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஆச்சரியத்துக்குரிய   தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நல்ல  ஆலோசனையின்  தாயாரே   –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

படைப்புக்  கடவுளது  தாயாரே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மீட்பரினுடைய   தாயாரே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பேரறிவுள்ள  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பெரும்  வணக்கத்துக்குரிய   கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பெரும்  புகழ்ச்சிக்குரிய  கன்னிகையே  -  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சக்தியுடையவளாயிருக்கிற   கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இரக்கம்நிறை  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நிறைநம்பிக்கையின்  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நீதியினுடைய  கண்ணாடியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானத்துக்கு  இருப்பிடமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

எங்கள்   மகிழ்ச்சியின்  காரணமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞான   பாத்திரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மாட்சிக்குரிய   பாத்திரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அதிசிறந்த  பக்தியுள்ள  பாத்திரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைபொருளைக்   கொண்டிருக்கிற  ரோசா  மலரே –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தாவீது   அரசனுடைய   கோபுரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தந்த   மயமாயிருக்கிற   கோபுரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பொன் மயமாயிருக்கிற   ஆலயமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உடன்படிக்கையின்  பேழையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விண்ணகத்தின்  வாசலே –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விடியற்காலத்தின்   விண்வெள்ளியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நோயாளிகளுக்கு  நற்சுகமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பாவிகளுக்கு   அடைக்கலமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வருந்துவோருக்குத்  தேற்றரவே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்தவர்களின்  சகாயமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வானதூதர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

முதுபெரும்  தந்தையர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவாக்கினரின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருத்தூதர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைசாட்சிகளின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தூயவர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னியர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விண்ணகத்திற்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்செபமாலையின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அமைதியின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

 


உலகின்   பாவங்களைப்   போக்கும்   இறைவனின்  செம்மறியாகிய  இயேசுவே                             

  - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் ஆண்டவரே

உலகின்   பாவங்களைப்   போக்கும்   இறைவனின்  செம்மறியாகிய  இயேசுவே      

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே

உலகின்   பாவங்களைப்   போக்கும்   இறைவனின்  செம்மறியாகிய  இயேசுவே      

-  எங்கள்மேல்  இரக்கமாயிரும் ஆண்டவரே

இயேசு   கிறிஸ்துவினுடைய  வாக்குறுதிகளுக்கு  நாங்கள்   தகுதியுள்ளவர்களாய்  இருக்கத்தக்கதாக   

- இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

 

மன்றாடுவோமாக  --   ஆண்டவராகிய  இறைவா,   முழுமனதுடனே   தெண்டணாக   விழுந்து   கிடக்கும்  இந்தக்  குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் தூய கன்னிகையான விண்ணக பேறுபெற்ற மரியாவினுடைய  வேண்டுதலினால்,  அனைத்து  தீமையின்  தாக்குதல்களில்  இருந்தும்  எங்களைக்  காத்தருளும்.  இந்த  மன்றாட்டுக்களை  எல்லாம்  எங்கள்  ஆண்டவரான  இயேசுவினுடைய  திருமுகத்தைப்  பார்த்து  எங்களுக்குத்  தந்தருளும்  --  ஆமென். 

கிருபை  தயாபரத்துச்  செபம்:    அருளிரக்கத்தின்  அன்னையாயிருக்கும்,  எங்கள் அரசியே,  எங்கள்  வாழ்வே,  எங்கள்  இனிமையே,  எங்கள் தஞ்சமே வாழ்க!  தாயகமிழந்த  ஏவாளின்  பிள்ளைகள்  நாங்கள்,  தாயே  என்று  உம்மையே கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர்ப் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு  உம்மை நோக்கிப்  பெருமூச்சு  விடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டிமன்றாடுகிற தாயே, இரக்கம்மிகு உம் திருகண்களை எம்மை நோக்கித்திருப்பியருளும்.  அத்தோடுகூட, நாங்கள் இப்பூவுலகைக்  கடந்தபின்பு,  உம்முடைய  திருவயிற்றின்  கனியாகிய  இயேசுவினுடைய  தூயவடிவை முகம்முகமாய்க் காணும் வரத்தை எங்களுக்குப்  பெற்றுத்தந்தருளும் தந்தருளும், கருணையின் உருவே,  தாய்மையின்  நிறைவே,  இனிமையின்  வடிவே,  இறைவனின்  தாயே  உம்மை  மன்றாடுகின்றோம் – ஆமென்.


வேண்டுதல்:  ஆண்டவரே,  இந்த  ஆராதனையெல்லாம்  இறைவன்  உம்  திருவுளத்திற்கு  ஏற்றவையாய்  இருக்கவும்  எங்களுக்கும் முழுத் திருஅவைக்கும்  பலனளித்திடவும்  அருள்புரிந்தருளும்.  உம்மைப்  பின்பற்றும்  நாடுகளில் நல்லமைதி  நிலைத்திடவும்,  உம்மை  நம்பாதோர்  ஞானவெளிச்சம்  கண்டிடவும்,  இறை ஊழியர்கள்  ஆர்வம் பெற்றிடவும்,  பாவிகள் தம் பாவத்தைக் களைந்திடவும்,  பிறரன்புப்  பணிபுரிவோர்  பணியூக்கம் கொண்டிடவும்,  இறப்பின்வலியில் வருந்துவோர் ஈடேற்றம் பெற்றிடவும், இவ்விடத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் குருமாருக்கும்  தீமையில்லாமல்   திருஅவை   வளர்ந்திடவும்,   நாங்கள்   அனைவரும்   பாவமின்றி   நடந்து  விண்ணகப்  பேற்றினை  அடைந்திடவும்  உம்மை  மன்றாடுகின்றோம்.   இவற்றையெல்லாம்   எங்கள்   ஆண்டவர்  இயேசு   கிறிஸ்து   வழியாகப்  பெற்றிடச்  செய்தருளும்  --   ஆமென்.